Skip to main content

அனைத்துக்கட்சி தலைவர்கள் ஆலோசனைக்கூட்டம் : காவிரி, நீட், ஜாக்டோ ஜியோ தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றம் 

Published on 09/05/2018 | Edited on 09/05/2018
all party

 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று(8.5.2018) அனைத்துக்கட்சி தலைவர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் நீட், காவிரி, ஜாக்டோ ஜியோ போராட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.  பின்னர் இக்கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தீர்மானம் : 1

‘நீட்’ தேவையில்லை எனும் தமிழக மசோதாவுக்கு

உடனே ஒப்புதல் வேண்டும்

தி.மு.க. ஆட்சி காலத்தில், 2006ஆம் ஆண்டில் முறையாகச் சட்டமியற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் நுழைவுத்தேர்வினை முற்றிலுமாக ஒழித்துக்கட்டிய தமிழ்நாட்டிற்கு, “நீட்"" தேர்விலிருந்து முழு விலக்களிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் ஒருமனதாக இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டும், ஏழரைக் கோடி தமிழ் மக்களின் உணர்வுகளை ஏளனமாகக் கருதி இழிவுபடுத்திடும் வகையில், தொடர்ந்து தமிழ்நாட்டில் சமூகநீதிக்கு மாறாக மருத்துவக் கல்விக்கு நீட் தேர்வையும் நடத்தி, இப்போது ஆயுர்வேதம், சித்தா உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளுக்கும் இந்த ஆண்டு முதல் நீட் கட்டாயம் என்று அறிவித்திருக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் ஆணவமிக்க சர்வாதிகாரப் போக்கை இந்தக் கூட்டம் கண்டிக்கிறது.

 

ஒரு போட்டித் தேர்வுக்கு தேவையில்லாத கடுமையான கெடுபிடிகளை தேர்வு மையங்களில் வேண்டுமென்றே நடைமுறைப் படுத்தி, தமிழ்நாட்டு மாணவ மாணவியரை அவமானப்படுத்தித் தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கும் சி.பி.எஸ்.இ.க்கு இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு,  மாணவர் உலகம் எப்போதும் கண்டும் கேட்டுமிராத சி.பி.எஸ்.இ. வாரியத்தின் பண்பாடற்ற செயலுக்கு, தமிழ்நாட்டு மாணவர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று இக்கூட்டம் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

 

 

இன்னும் மனித உயிர்களைக் காவு கேட்காமல், தமிழ்நாடு சட்டமன்றத்தின் நீட் விலக்கு மசோதாவிற்கு, அரசமைப்புச் சட்டத்தின் நெறிமுறைகளையொட்டி மேலும், காலங்கடத்தாமல் உடனடியாகக் குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற மத்திய பா.ஜ.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்; அதற்கான அழுத்தத்தை அதிமுக அரசு கொடுக்க வேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

 

party

 

தீர்மானம் : 2

முதலமைச்சர், ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை

அழைத்துப் பேசித் தீர்வு காண வேண்டும்


புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது, ஊதிய உயர்வு, ஊதிய உயர்வில் உள்ள முரண்பாடுகள் உள்ளிட்ட நிலுவையில் இருந்து வரும் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.


அந்த போராட்டத்தின் இறுதி வடிவமாக தலைமைச் செயலகத்தை நோக்கி மே 8-ஆம் தேதி பேரணி என்று அறிவித்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை துறை அமைச்சரோ அல்லது முதலமைச்சரோ உடனடியாக அழைத்துப் பேசி கோரிக்கைகளை விவாதித்து சுமூக தீர்வு காண முற்படாமல், காவல்துறையை ஏவிவிட்டு நள்ளிரவிலும், சுங்கச் சாவடிகளில் பேருந்துகளைத் தடுத்து நிறுத்தியும் முன் எச்சரிக்கை நடவடிக்கை என்ற போர்வையில் கைது செய்ததற்கும், சென்னை மற்றும் மாநிலமெங்கும் இன்று போராடிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை எல்லாம் பெண்கள் என்றுகூட பாராமல் குண்டுக் கட்டாகத் தூக்கிச் சென்றும் இழுத்துச் சென்றும் கைது செய்த அராஜகத்திற்கும் அனைத்துக்கட்சித் தலைவர்களின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

 

 ஜனநாயகத்தில் அடக்குமுறை ஒரு போதும் தீர்வாகாது என்பதையும் அடக்குமுறையே தீர்வுகாண முதன்மைத் தடையாகிவிடும் என்பதையும் அதிமுக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.  மாநில நிர்வாகம் இயங்குவதை நிறுத்தி மேலும் நிலைகுலைந்து போகாமல் இருக்க, கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் உடனே விடுவித்து, ஜாக்டோ-ஜியோ அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளை மாண்புமிகு முதலமைச்சர் நேரடியாக அழைத்துப் பேசி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன் வைத்துள்ள நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டுமென அனைத்துக்கட்சித் தலைவர்களின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.


 

தீர்மானம் : 3

“காவிரி மேலாண்மை வாரியம் - அடுத்தகட்ட நடவடிக்கை


2018 பிப்ரவரி 16-ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தமிழகத்திற்கு உரிய நீதியை வழங்காமல் அலட்சியப்படுத்திடும் வகையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், அதனைத் திரித்தும் திசை திருப்பும் வகையிலும் வேறு வேறு பொருள்பட அறிவிப்புகளைச் செய்து, ஏறக்குறைய மூன்று மாதங்களாகக் கிடப்பில் போட்டு வைத்திருந்தது மட்டுமின்றி, கர்நாடகத் தேர்தல் கணக்கை மனதில்கொண்டு, பலமுறை “கால அவகாசம்"" கோரும் மனுக்கள் தாக்கல் செய்து, ஒரு செயற்கையான நெருக்கடியை ஏற்படுத்தி, அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளைத் திட்டமிட்டு சவாலுக்கு அழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு தமிழக அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

 

 முதலில் விதித்த ஆறுவார காலக்கெடுவும் முடிந்து, பிறகு கர்நாடகத் தேர்தலை காரணம் காட்டி வாய்தா வாங்கி, மீண்டும் மே 3-ஆம் தேதியன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது “பிரதமரும் அமைச்சரும் கர்நாடகத் தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதால் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதலைப் பெற முடியவில்லை"" என்று, தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியையும் தாக்கத்தையும் அறிந்தோர் அனைவரும் நகைத்திடும் வண்ணம் “கால அவகாசம்"" கேட்டு, இன்று வழக்கு விசாரணைக்கு வந்தநிலையில், கூச்சமே இன்றி மீண்டும் பத்துநாள் அவகாசம் கேட்டு, உச்சநீதிமன்றமும் மே 14-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கியிருப்பதற்கு இந்த அனைத்துக் கட்சி கூட்டம் மிகுந்த வருத்தத்தைப் பதிவு செய்கிறது.


நீதித்துறை சுதந்திரத்தின் மீது ஆர்வம் கொண்டுள்ள அனைவரும் உச்ச நீதிமன்ற  நடவடிக்கைகளை கவலையுடனும், அதிர்ச்சியுடனும் பார்க்கும் சூழ்நிலை காவிரி இறுதித் தீர்ப்பு வழக்கில் உருவாகியிருப்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கும், அரசியல் சட்ட நெறிமுறைகளுக்கும் நிச்சயமாக உகந்த சூழலாக இல்லை என்பதையும் அனைத்துக் கட்சித் தலைவர்களின் இந்தக் கூட்டம் மிகுந்த வேதனையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறது.


தமிழக மக்கள் உச்ச நீதிமன்றத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையைத் தகர்க்கும் விதத்தில் மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு, பல்வேறு முறை கால அவகாசம் கேட்டு, உச்சநீதிமன்றமும் அனுமதித்து, இறுதியில் கர்நாடகத் தேர்தல் முடியும் வரை கால அவகாசத்தைப் பெற்றிருக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டு விவசாயிகளையும் பொதுமக்களையும் திட்டமிட்டு வஞ்சிப்பதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் பாரம்பரியமான காவிரி உரிமையை கர்நாடகத் தேர்தலுக்காக காவு கொடுத்து வருவது தமிழகத்தையே பதற வைக்கிறது.

 

காவிரி உரிமையை நிலைநாட்ட, நடைபெற்ற ஜனநாயக வழியிலான அறப்போராட்டங்களில் தன்னெழுச்சியாகப் பங்கேற்ற அனைத்துத் தரப்பு மக்களுக்கும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு உதாசீனப்படுத்தும் இந்த துரோகம் கோபத்தையும், கொந்தளிப்பையும் அதிகப்படுத்தியுள்ளது. மேலும் ஜனநாயக வழியிலான அமைதிப் போராட்டங்களில் நம்பிக்கை இழக்கும் நிலையையும் மத்திய பா.ஜ.க. அரசு ஏற்படுத்தியிருப்பதை இந்த அனைத்துக்கட்சி கூட்டம் மிகுந்த கவலையுடன் பதிவு செய்கிறது. சாலை மறியல், முழு அடைப்பு, வரலாற்றுச் சிறப்புமிக்க “ழுடி க்ஷயஉம ஆடினi"" என்ற கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம், காவிரி உரிமை மீட்பு நடைப்பயணம், மேதகு ஆளுநரிடம் மனு, மனித சங்கிலிப் போராட்டம் என்று அனைத்து விதமான அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டும் மத்திய அரசு இன்னும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முன்வரவில்லை. அதற்கான அழுத்தத்தைக் கொடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத அ.தி.மு.க அரசு, மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசின் அனைத்து “கால அவகாசம்"" கோரும் போக்கிற்கும் மனமுவந்து துணை போவது மட்டுமின்றி வழக்கின் முக்கியத்துவத்தை திசை திருப்பும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து வாதிட்டுக் கொண்டிருக்கிறது. “கர்நாடக மாநில அரசு 4 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும்"" என்று வழக்கு விசாரணையின்போது கூறிய போதிலும், மே 8-ஆம் தேதி வெளியான உச்சநீதிமன்ற ஆணையில் அந்த உத்தரவு இடம்பெறவில்லை.
 

காவிரி நதிநீர் பிரச்சினையில் மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்து வரும் மத்திய அரசையும் - அதற்கு துணை போகும் மாநில அரசின் நடவடிக்கையையும் இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிப்பதுடன்;

மே 14-ஆம் தேதி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே தீர வேண்டும் என்றும்; மீண்டும் மீண்டும் கால அவகாசம் கோரி தமிழகத்தின் காவிரி உரிமையைப் பறிக்கும் விதத்திலும், தமிழ்நாட்டு விவசாயிகளை வேதனைத் தீயில் தள்ளி, காவிரி மண்டலத்தை வறண்ட பாலைவனப் பிரதேசமாக்கவும் முனையும் மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத - தமிழக விரோத மற்றும் ஜனநாயக விரோதப் போக்கு தொடருமாயின், வருகிற 15-5-2018 செவ்வாய்க் கிழமை காலை 10.00 மணி அளவில், அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஒன்றுகூடி அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து  விவாதித்து முடிவெடுப்பதென இக்கூட்டம் முடிவு செய்கிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு; தேசிய தேர்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Important notification For students appearing for NEET

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 9 ஆம் தேதி இரவு 9 மணி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இன்றுடன் கால அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில், மார்ச் 6 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Next Story

“ஜெயலலிதாவை பாராட்ட வேண்டும்” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
Minister Udayanidhi Stalin says Jayalalitha should be praised

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

அந்த வகையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க., நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. அதன்படி தி.மு.க. சார்பில் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை உருவாக்கவும், தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த குழுக்களில் தி.மு.க. மூத்த நிர்வாகிகள் இடம்பெற்றிருந்தனர். மேலும் இந்த குழுவினர் தங்களது பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்திலுள்ள நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இந்த பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் இந்த பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. 3 நாட்கள் நடைபெறும் நாடாளுமன்றத் தொகுதிவாரியான பொதுக்கூட்டங்களில் பொறுப்பு அமைச்சர்களுடன், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் இணைந்து செயல்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

அந்த வகையில், இன்று (17-02-24) ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ எனும் பொதுக்கூட்டத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “புதிய கல்வி கொள்கை மூலம் 5,8 ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வை கொண்டு வந்து நமது மாணவர்களை படிக்கவிடாமல் பா.ஜ.க செய்கிறது. ஜெயலலிதா இருந்த வரை தமிழகத்திற்குள் நீட் தேர்வு வரவில்லை. அவர் தமிழ்நாட்டிற்குள் நீட் தேர்வை நுழைய விடவில்லை. 

நீட் விவகாரத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பாராட்ட வேண்டும். அவர் மறைந்ததும், அதிமுக ஆட்சியில் தான் நீட் தேர்வு தமிழகத்திற்குள் வந்தது. நீட் தொடர்பாக அனிதா முதல் ஜெகதீசன் வரை 21 பேர் தற்கொலை செய்துள்ளனர். நீட் தேர்வு ரத்து தொடர்பாக டெல்லியில் விரைவில் போராட்டம் நடத்த இருக்கிறோம். தமிழ்நாட்டில் இருந்து என்றைக்கு நீட் தேர்வு விலக்கு ஏற்படுமோ அதுதான் முதல் வெற்றி” என்று கூறினார்.