திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு ஒன்றிய கிராமப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட முருங்கை மரங்களை நோய் தாக்குதல் காரணமாக வெட்டி நிலங்களில் போட்டு வருகின்றனர்
நடகோட்டை, விருவீடு, வலையபட்டி, ராஜதானி கோட்டை, சந்தையூர், விராலிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டு வரப்படுகிறது. கடந்த ஆண்டு கடும் வறட்சி அதனைத் தொடர்ந்து வந்த கஜா புயலினாலும் இப்பகுதியில் ஏராளமான முருங்கை மரங்கள் காய்ந்தும்,பலத்த காற்றுக்கு வேரோடு சாய்ந்தம் போயின.
தற்போது போதிய விலையும் கிடைக்காத நிலையில் எஞ்சிய மரங்களை விவசாயிகள் வளர்த்து வந்தனர். இந்நிலையில் திடீரென முருங்கை மரங்களை இலை சுருட்டல் எனும் பெயர் தெரியாத நோய் தாக்கியது. இந்த நோய்க்கு எந்த மருந்து அடித்து நோயை கட்டுப்படுத்துவது என தெரியாமல் விவசாயிகள் திண்டாடினர். இலைகள் காய்ந்து காய்களும் கருத்து காய தொடங்கின. இதனால் வேதனையடைந்த விவசாயிகள் வேறுவழியில்லாமல் மரங்களை வெட்டி விளைநிலங்களில் போட்டுவிட்டு செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
இது குறித்து கூறும் விவசாயிகள் விருவீடு பகுதியிலிருந்து நாளொன்றுக்கு ஒரு டன் முதல் 5 டன் வரை முருங்கை காய்கள் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும் ஆனால் தற்போது கடும் வறட்சி, புயல் அதோடு சேர்ந்து விலை கிடைக்காததால் விவசாயிகள் முருங்கை மரங்களை பராமரிக்க முடியாமல் மிகவும் கஷ்டம் அடைந்ததாகவும் 15 நாட்களுக்கு ஒரு முறை புதிய மருந்து அடிக்காவிட்டால் முருங்கை மரம் வாடி விடும் என்பதால் பொருளாதார ரீதியாகவும் முருங்கை மரங்களை காப்பாற்ற முடியாமல் பல விவசாயிகள் தவித்ததாகவும் கூறுகின்றனர். மேலும் முருங்கை இலையை தாக்குவது எந்த வகையான நோய் என்பது கூட தெரியாமல் நாங்கள் தவித்த வேளையில் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் யாரும் எட்டிக்கூட பார்க்கவில்லை என வத்தலகுண்டு விவசாயி ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டுகின்றார்.
மேலும் அவர் கூறும்போது, இப்பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான முருங்கை பவுடர் தொழிற்சாலையை கண்டிப்பாக கொண்டு வருவேன் என உறுதி ஏற்று கூறிச் செல்லும் இரண்டு முறை ஜெயித்த தேன்மொழி உட்பட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் இதுவரை தொழிற்சாலை கொண்டு வருவதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால் முற்றிலும் ஏமாற்றம் அடைந்துள்ள விவசாயிகள் இனியும் இந்த அரசை நம்பி பயனில்லை என்பதற்காக தங்கள் பாடுபட்டு வளர்த்த மரங்களை தாங்களே வெட்டி விளைநிலங்களில் போட்டு வருகின்றனர் என்றார். இதனால் பெரிய அளவு நஷ்டத்தை சந்தித்து உள்ள விவசாயிகள் அரசு உதவினால் மட்டுமே தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என்று கூறுகின்றனர்.