மோடியின் பாராளுமன்ற உரை குறித்த தன்னுடைய கருத்துக்களை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் கடலூர் மாவட்ட பொறுப்பாளர் பால்கி எடுத்துரைக்கிறார்
மணிப்பூர் பற்றி பிரதமர் பேச வேண்டும் என்பதற்காக இந்தியா கூட்டணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தனர். ஆனால் அது குறித்துப் பேச பிரதமரும் பாஜகவினரும் தயாராக இல்லை. இந்த விவகாரத்தை திசைதிருப்புவதற்காகவே ராகுல் காந்தி ஃப்ளையிங் கிஸ் கொடுத்தார் என்று கிளப்பிவிட்டனர். அப்படி ஒரு நிகழ்வே நடக்கவில்லை என்பதுதான் உண்மை. ஸ்மிருதி இரானியின் பழைய வரலாற்றைப் பேசினால் அசிங்கமாகிவிடும்.
இந்தியா கூட்டணி கேட்ட எந்தக் கேள்விக்கும் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி ஆகியோரால் பதில் சொல்ல முடியவில்லை. காங்கிரஸ் கட்சியை அட்டாக் செய்வது மட்டுமே அவர்களுடைய நோக்கமாக இருந்தது. தேர்தல் பிரச்சாரக் கூட்டம் போலவே நாடாளுமன்றத்தை இவர்கள் நடத்துகின்றனர். இது ஜனநாயகத்துக்கு விரோதமானது. மக்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பை பாஜக நிச்சயம் சந்திக்கும். எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நோ பால் வீசுகின்றன என்று கிரிக்கெட் உதாரணத்தை பிரதமர் பாராளுமன்றத்தில் பேசியுள்ளார். ஆனால் உண்மையில் இந்தியா கூட்டணியினர் போட்டது யார்க்கர் பால்.
வறுமையால் வடகிழக்கு மாநிலங்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளன என்பதை பல ஆய்வுகள் நிரூபிக்கின்றன. பொருளாதார வீழ்ச்சியை நாம் சந்தித்து வருகிறோம் என்று ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் நிர்மலா சீதாராமனின் கணவர் புள்ளிவிவரங்களோடு பேசினார். பாஜகவின் தவறான கொள்கைகள் காரணமாக பயிர் காப்பீட்டில் கார்ப்பரேட் கம்பெனிகள் மட்டும்தான் பயனடைந்துள்ளன, விவசாயிகள் பயனடையவில்லை. எல்ஐசி நிறுவனத்தின் பங்கு மதிப்பு கூட குறைந்துவிட்டது. நாடாளுமன்றத்தில் இவர்கள் முழுக்க முழுக்க பொய் தான் பேசுகிறார்கள்.
பாஜக ஆட்சியில் அதானியின் வளர்ச்சி அசுரத்தனமாக இருக்கிறது. அதானியின் வருமானத்தை அதிகரிப்பதற்காக அரசாங்கத்தின் கொள்கையையே மாற்றும் நிலையில் மோடி இருக்கிறார். தேர்தல் ஆணையரை நியமிப்பதற்கான குழுவில் தலைமை நீதிபதியையும் சேர்க்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இப்போது இவர்கள் தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக அந்தக் குழுவில் மத்திய அமைச்சரை சேர்த்து திருத்தம் செய்கிறார்கள். ஜனநாயகத்தை மீறும் வேலைகளை இவர்கள் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்கள். பெரும்பான்மை இருப்பதால் அனைத்தையும் செய்கிறார்கள்.
பாஜக நினைப்பது போல் 2024 தேர்தல் அவர்களுக்கு அவ்வளவு எளிதாக இருக்காது. யார் வரக்கூடாது என்பதில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி தெளிவாக இருக்கிறது. மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதில் அனைவரும் தெளிவாக இருக்கிறார்கள்.