கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இதன் உச்சகட்டமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு அமலில் இருந்தும் சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகின்றது. இதனை குறைக்க மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதுவரை தமிழகத்தில் 67 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்நிலையில் ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து பேராசிரியர் அருணனிடம் சில கேள்விகளை முன் வைத்தோம். அதற்கு அவரின் பதில்கள் வருமாறு,
கரோனா தொற்று காரணமாக இந்தியா முழுவதும் மத்திய அரசு வரும் 14ம் தேதி வரை ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கிறார்கள். ஆனால் வேலை தேடி சென்ற தொழிலாளர்கள் பிற மாநிலத்தில் இருந்து அவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் கஷ்டப்படுவதை பார்க்க முடிகின்றது. தில்லியில் நடைபெற்ற அந்த வருத்தமான சம்பவத்தை சில தினங்களுக்கு முன்பு பார்த்தோம். இது பற்றிய தங்களின் கருத்து என்ன?
தில்லியில் நடைபெற்ற அந்த காட்சி என்பது மிகவும் வருத்தமான ஒரு சம்பவம் ஆகும். ஊரடங்கு தற்போதைய சூழ்நிலையில் தேவையான ஒன்றுதான். ஆனால் பாதிக்கப்படும் ஏழைகளுக்கு எப்படி உணவளிப்பது என்பதை அரசாங்கம் முன்கூட்டியே யோசனை செய்திருக்க வேண்டும். தில்லியில் பேருந்துகளுக்காக காத்திருந்தவர்கள் எல்லாம் அண்டை மாநிலமான, உ.பி மாநிலத்தையோ, ராஜஸ்தான் மாநிலத்தையோ சேர்ந்தவர்களாகத்தான் இருக்க முடியும். 21 நாட்களுக்கு அவர்கள் உணவிற்கு என்ன செய்வார்கள் என்ற கேள்வி தான் இங்கு மிக முக்கியம். இப்போது அரசாங்கம் ஊழியர்களுக்கு இந்த 21 நாட்களுக்கும் சேர்த்தே நிறுவனங்கள் ஊதியம் தர வேண்டும் என்று அறிக்கை விடுத்துள்ளது.
இதுமுதலில் சாத்தியமா என்று பார்க்க வேண்டும். இது நிரந்திர தொழிலாளர்களுக்கு மட்டுமே சாத்தியப்படும். ஆனால் பெரும்பாலான தொழிலாளர்கள் அன்றாடம் காட்சிகளாக இருக்கிறார்கள். அவர்கள் உணவிற்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஆனால் அப்படி ஏதும் செய்யாமல் உணவிற்கு தற்போது அல்லாட வைத்துள்ளார்கள். உணவில்லாமல் தான் அவர்கள் இத்தனை கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள். அதனால் தான் அவர்களை நோயை பற்றி கவலை படாமல் பேருந்துக்காக அடித்து மோதுகிறார்கள். கிடைக்கவில்லை என்றதும் நடை பயணமாகவே நடந்து அவர்கள் தங்களுடைய இடத்தை நோக்கி செல்கிறார்கள். ஏழைகளின் சாப்பாட்டிற்கு ஆட்சியாளர்கள் வழி செய்யவில்லை என்பதுதான் உண்மை நிலமை. ஆயிரம் ரூபாய் நோட்டு, ஐநூறு ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்ததே பரவாயில்லை என்று சொல்லுமளவுக்கு நிலமை இருக்கின்றது.