அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு வரலாம் என உச்சநீதிமன்றம் அறிவித்த நாள்முதல் இன்றுவரை பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் செல்கிறது கேரள அரசியல். மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை திறக்கும் இந்த நேரத்தில், கண்டிப்பாக சபரிமலைக்கு செல்வேன் என கூறியிருக்கிறார் த்ருப்தி தேசாய் எனும் பெண். இப்படி கூறி மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த த்ருப்தி தேசாய் யார்?
பெங்களூருவில் உள்ள நிபானி தாலுகாவில் பிறந்த இந்த பெண் தனது 8 வயதில் குடும்பத்துடன் புனேவில் குடியேறினார். பள்ளிப்படிப்பை முடித்தபின் புனே கல்லூரியில் சேர்ந்த இவர், பின்னர் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கல்லூரி படிப்பை பாதியில் கைவிட்டார். இந்நிலையில் சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்தி கொள்ள முடிவு செய்த இந்த பெண் விகாஸ் சங் என்பவருடன் இணைந்து 2003 ஆம் ஆண்டு புனேவில் உள்ள குடிசைவாசிகளின் மறுவாழ்விற்காக செயல்பட்டார். பிறகு பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட அவர், 2010 ஆம் ஆண்டு ’பூமாதா இயக்கம்’ என்ற ஒன்றை ஆரம்பித்து அதில் 4000 பெண்களை உறுப்பினராக சேர்த்தார். 2011 ல் அண்ணா ஹசாரே தலைமையில் நடைபெற்ற ஊழல் ஒழிப்பு போராட்டத்திலும் கலந்து கொண்டார்.
2013 ஆம் ஆண்டு சரத் பவாரின் குடும்பத்துக்கு எதிராக போராடி கைது செய்யப்பட்டு, பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். 2016 ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கான பெண்களை சேர்த்துக்கொண்டு, பெண்களை உள்ளே அனுமதிக்காத சனி சிங்னாபூர் கோவிலுக்குள் நுழைந்தார். இதனை போலவே கோல்ஹாபுரில் உள்ள மஹாலக்ஷ்மி கோவிலில் நுழைய முற்பட்டபொழுது அங்குள்ள அர்ச்சகர்களால் தாக்கப்பட்டார். இதுபோல் மேலும் பல கோவில்களுக்குள் நுழைய முயற்சித்த அவர், அதே 2016 ல் ஹாஜி அலி தர்காவில் உள்ளே செல்ல முயற்சித்த பொழுது அங்கிருந்தவர்களின் போராட்டத்தால் உள்ளே செல்லாமல் மீண்டும் திரும்பினார். ஒரு மாதத்திற்கு பிறகு போலீஸ் பாதுகாப்புடன் தர்காவில் நுழைந்த அவர் அதன் உட்பகுதிக்கு செல்லாமல் தடுக்கப்பட்டார்.
இந்நிலையில் சென்ற மாதம் உச்சநீதிமன்றம் சபரிமலை தீர்ப்பை அளித்த பின்பு, அதனை பின்பற்றி பெண்களை உள்ளே அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்த, புனே வந்த பிரதமர் மோடியை அனுமதியின்றி நேரில் பார்க்க சென்றார். போலீசார் இவரை கைது செய்து, பிரதமர் சென்ற பின் விடுவித்தனர். த்ருப்தி தேசாய்க்கு திருமணமாகி, 8 வயதில் ஒரு மகன் இருக்கிறார், அவரது குடும்பம் அவரது செயல்களுக்கு முழு ஆதரவு தருவதாகவும் அவர் கூறுகிறார்