![eps](http://image.nakkheeran.in/cdn/farfuture/4agiXtsbzFpL9nq7qrEZ6NfEX2KCvNipSxvTTi2Ppew/1542971916/sites/default/files/inline-images/eps_46.jpg)
எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளிக்கும்போதும், மேடையில் பேசும்போதும் பலமுறை உளறியிருக்கிறார். டெல்லியில் பிரதமரைச் சந்தித்துவிட்டு அவர் பேட்டியளிக்கும்போது எடப்பாடி தொகுதியில் 9 முறை வெற்றிபெற்றவன் என்று பெருமையாக சொன்னார்.
அவருடைய இந்த கூற்று சமூகவலைத்தளங்களில் பலவாறாக கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி இருக்கிறது. அவரை வறுத்தெடுக்கும் வகையில் மீம்ஸ்களும் வெளியாகின்றன.
அவர் எடப்பாடி தொகுதியில் 9 முறை போட்டியிடக்கூட வாய்ப்பே இல்லை. 1977ல் அதிமுக வெற்றிபெற்ற முதல் தேர்தலில் இருந்து 2016 ஆம் ஆண்டு நடந்த பேரவைத் தேர்தல்வரை மொத்தமே 10 தேர்தல்கள்தான் நடந்திருக்கின்றன.
1989 சட்டமன்றத் தேர்தலில்தான் ஜெயலலிதா அணியில் முதலில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறார். 1991 தேர்தலில் ஜெயித்த அவர், 1996ல் பாமக வேட்பாளர் ஐ.கணேசன் என்பவரிடம் தோல்வி அடைந்திருக்கிறார்.
![eps](http://image.nakkheeran.in/cdn/farfuture/72urymGpLJtyKS42coFZzh7APAjvd-xAWaBA8uML5TQ/1542972220/sites/default/files/inline-images/eps-1_0.jpg)
1998 நாடாளுமன்றத் தேர்தலில் திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எடப்பாடி பழனிச்சாமி, 1999ல் மீண்டும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மதிமுக வேட்பாளர் கண்ணப்பனிடம் தோல்வி அடைந்திருக்கிறார்.
2001 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக அணியில் இடம்பெற்ற பாமகவைச் சேர்ந்த ஐ.கணேசனுக்கே எடப்பாடி தொகுதி கொடுக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிடவே இல்லை. அடுத்து வந்த 2006 தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமகவுக்கு எடப்பாடி தொகுதி மீண்டும் கொடுக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் வி.காவேரி என்பவரிடம் பழனிச்சாமி தோல்வி அடைந்தார். அதாவது தொடர்ந்து மூன்றுமுறை அந்தத் தொகுதியை இழந்திருக்கிறார்.
அடுத்து, 2011 தேர்தலிலும், 2016 தேர்தலிலும் வெற்றிபெற்றிருக்கிறார். ஆக, சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் ஆறுமுறை போட்டியிட்டு 4 முறை வெற்றி பெற்றிருக்கிறார். மக்களவைத் தேர்தலில் அன்றைக்கு எடப்பாடி தொகுதியை உள்ளடக்கிய திருச்செங்கோடு தொகுதியில் இரண்டுமுறை போட்டியிட்டு ஒருமுறை வெற்றி பெற்றிருக்கிறார் என்பதுதான் உண்மை.
மக்களிடம் எதையும் சொல்லி நம்பவைத்துவிடலாம் என்று பொய்யைக் கூசாமல் பேசுவது அதிமுகவினருக்கு வழக்கம்தான். இப்படித்தான் 4 முறை மட்டுமே பொதுத்தேர்தலைச் சந்தித்த ஜெயலலிதா ஆறுமுறை முதல்வர் பதவியேற்றவர் என்று ஒரு பொய்த்தோற்றத்தை ஏற்படுத்தினார்கள். அதிலும், கூடுதலாக ஏன் இருமுறை பதவியேற்க வேண்டியிருந்தது என்பதற்கான காரணத்தை சொல்லவே மாட்டார்கள். சிறைக்குப் போனதால் முதல்வர் பதவியை இருமுறை இழந்தார் என்பதை கணக்கில் சேர்க்கவே மாட்டார்கள்.