அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு ஒரு கடிதம் போயிருக்கிறது என்று அ.தி.மு.க. மேலிட வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. அதில், 'அம்மா ஜெ. எனக்குக் கொடுத்த கட்சியின் பொருளாளர் பதவியிலேயே நான் தொடரனும். அதேபோல் அம்மா இருந்த பொதுச் செயலாளர் பதவியில் சின்னம்மாவான நீங்கள்தான் இருக்கனும். அப்போதுதான், கட்சியைப் பழையபடி பலப்படுத்த முடியும். எடப்பாடி முழு நம்பிக்கைக்கு உரியவர் அல்ல. அவர், அம்மாவின் நம்பிக்கையைப் பெற்ற என்னையே மரியாதை இல்லாமல் நடத்துகிறார் என்று குறிப்பிட்டிருப்பதோடு, அமைச்சர்களில் 90 சதவீதம் பேர், உங்களைத்தான் அம்மாவின் மறுவடிவமாகப் பார்க்கிறார்கள் எனக் குறிப்பிட்டு, சசியின் மனதைக் குளிர வைத்துள்ளார் ஓ.பி.எஸ்' என்கிறார்கள்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ்ஸை அழைத்து பேசியிருக்கிறார். இவர்கள் இருவர் மட்டுமே இந்தச் சந்திப்பில் இருந்தாகவும், நீண்ட நேரம் இந்த ஆலோசனை நீடித்ததாகவும், இதில் தனது மன குமுறலைக் கொட்டித் தீர்த்திருக்கிறார் ஓ.பி.எஸ். என்கிறார்கள். நீண்ட நேரம் நடந்த இந்தச் சந்திப்பில் சில வாக்குறுதிகளை ஓ.பி.எஸ்.க்கு அளித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள் அ.தி.மு.க. மேலிட தொடர்பில் உள்ளவர்கள்.
அமைச்சர்கள் தங்கள் துறையையே கவனிக்க வேண்டும், அடுத்த துறையில் தலையிடுவது கூடாது, கட்சிப் பொறுப்புகள் வழங்குவது, மாற்றுவது நமது இரண்டு பேருக்குள்ளேயே முடிவு எடுக்க வேண்டும், தேர்தல் வருவதால் சில மாவட்டச் செயலாளர்களை மாற்ற வேண்டும், மற்ற கட்சிக்கு இணையாக ஐ.டி. விங்கை பலப்படுத்த நிர்வாகிகளை மாற்ற வேண்டும், ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். இடமாறுதல் தொடர்பாக மற்ற அமைச்சர்கள் தலையீடுகள் இருக்கக் கூடாது, கரோனா விவகாரம் முடிந்த பின்னர் ஐ.பி.எஸ். இடமாற்றம் வைத்துக்கொள்ளலாம் என பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான உறுதிகளையும் ஓ.பி.எஸ்.க்கு எடப்பாடி கொடுத்துள்ளாராம்.
இந்தநிலையில்தான் அ.தி.மு.க.வின் ஊராட்சிக் கழகச் செயலாளர் பொறுப்புகளும் ரத்து செய்யப்படுகிறது என மே 19ஆம் தேதி அதிரடியாக இருவரும் அறிவித்துள்ளனர். மேலும், தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் மற்றும் துணை நிர்வாகப் பொறுப்புகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் அனைவரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் அறிவித்து, சென்னை, மதுரை, கோவை, வேலூர் என நான்கு மண்டலங்களாகப் பிரித்து, இந்த நான்கு மண்டலத்திற்கும் நான்கு செயலாளர்களை நியமித்துள்ளனர். இந்த நான்கு மண்டலங்களுக்கும் துணை நிர்வாகிகள் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இதில் கோவை, வேலூர் மண்டலங்களில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் அதிகம் இருப்பார்கள், சென்னை, மதுரை மண்டலங்களில் இ.பி.எஸ். ஆதரவாளர்கள் அதிகம் இருப்பார்கள் எனவும், ஓ.பி.எஸ்.ஸை எடப்பாடி பழனிசாமி சமாதானப்படுத்தியுள்ளதால் கட்சியில் மா.செ.க்கள் மாற்றம் என எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வரலாம்? எனவும் தெரிவிக்கிறார்கள் அ.தி.மு.க. மேலிட தொடர்பில் உள்ளவர்கள். இந்தத் தகவலால் அ.தி.மு.க. நிர்வாகிகள் மட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-மகேஷ்