Skip to main content

சென்னையில் ரூ.110, வெளியூரில் ரூ.80..! ‘கிர்’ரென விலை உயர்ந்த போதை வஸ்து..!

Published on 22/05/2020 | Edited on 22/05/2020

 

tamilnadu shops police pan masala sales peoples


விமல், சாந்தி, சைனி கைனி, மாணிக் சந்த், கார்கில்... இதெல்லாம் வடநாட்டு பெயர்கள் மாதிரி இருக்கிறது ஆனால் எங்கோ எப்போதோ கேட்ட பெயர்களாக இருக்கிறதே? என நீங்கள் யோசிக்கலாம்.
 


ஆம்.! போதைவஸ்து பிரியர்களுக்கு பரிச்சயமான பெயர்கள் இவை.! இந்தப் பெயரில் இப்போது குட்கா, பான்மசாலாக்கள் இல்லை. ஆனால், இவற்றின் லேட்டஸ்ட் வெர்சன் ‘ஹான்ஸ்,’ ‘கூல் லிப்’ போன்றவை இப்போது தமிழகத்தில் புழக்கத்தில் இருக்கின்றன.

புகையிலை கலந்து தயாரிக்கப்படும் குட்கா, பான்மசாலா போன்ற மெல்லும் புகையிலை பொருட்களைத் தமிழ்நாட்டில் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தமிழக அரசு 2013- ஆம் ஆண்டு தடை கொண்டு வந்தது. இருந்தாலும், இன்னமும் இந்தப் பொருட்கள் ஆங்காங்கே புழக்கத்தில் இருக்கத்தான் செய்கின்றன. தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு மார்க்கெட்டில் எப்போதுமே கிராக்கி அதிகமாக இருக்கும். தாராளமாக இந்தப் பொட்டலங்கள் சந்தையில் விற்கபட்டபோது ரூ.5 லிருந்து அதிகபட்சம் ரூ.15 வரை விற்கப்பட்டது. ஆனால், கடந்த 7 ஆண்டுகளில் கிடுகிடுவென உயர்ந்து இப்போது ரூ.100 முதல் ரூ.140 வரைக்கு விற்கப்படுகிறது.

அதுவும் லாக்டவுன் பீரியடில் மதுக்கடைகளையும் மூடியாச்சு, பெட்டிக் கடைகளையும் மூடியதால், புகையிலை கிடைக்காமல் நிறைய பேர் தவித்து போனார்கள். இப்போது ஒரளவு நிலைமை சீரடைந்து, பெட்டிக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், விலையை 2 மடங்கு உயர்த்தி விட்டனர். முன்பு சென்னையில் ரூ.40 விற்கப்பட்ட ஹான்ஸ் இப்போது ரூ.120, ரூ.60-க்கு விற்கப்பட்ட கூல் லிப் இப்போது ரூ.150. அதுவும் பழைய கஸ்டமர்கள் மட்டுமே பர்ச்சேஸ் பண்ணமுடியும். புது நபர்களுக்கு இந்தப் பொருள் கிடையாது.
 

tamilnadu shops police pan masala sales peoples


சென்னையைப் பொறுத்தவரை இந்தப் போதை வஸ்துகளை யார் யார் விற்கிறார்கள் என்பது, லோக்கல் போலீஸாருக்கு நன்றாகத் தெரியும். ஒவ்வொரு மாதமும் கட்டிங் கரெக்டாக வந்து சேரும். 2 மாதத்திற்கு ஒருமுறை ஒரு கேஸ். அவ்வளவுதான் போலீஸார் கண்டு கொள்வதில்லை. ஆனால், பத்திரிகைகளில் அவ்வப்போது பான்மசாலா பிடித்ததாகப் புகைப்படங்களோடு செய்தி வரும். தனிப்படை போலீஸார், உள்ளூர் போலீஸாருக்கே தெரியாமல் பிடிக்கும் போது எடுக்கும் படங்கள் தான் அவை.
 


தமிழகத்தில் இப்போது நேரக் கட்டுப்பாட்டோடு கடைகள் திறக்கப்பட்டாலும், சென்னையில் மட்டும் இன்னும் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. இதனால், இதுபோன்ற வஸ்துகள் தான் போதைப் பிரியர்களுக்கு ஒரே ஆறுதல். “ஒரு பொட்டலம் வாங்கினா 4 தடவை தான் வாயில் வைத்து அதக்கிக் கொள்ள முடியுது. இதைப் போட்டாத் தான் சுறுசுறுப்பாக வேலை ஓடுது. முதல்ல ரூ.40- க்கு வித்தாங்க... இப்ப ரூ.110-ங்கிறான். இதுக்கு கூட ரூ.10 போட்டா ஒரு குவாட்டர் வாங்கி அடிச்சிடலாம். அதுக்கும் வழியில்லாம போச்சே” என்றார் சென்னையில் கட்டிட வேலை பார்க்கும் தொழிலாளி. 

சென்னையைப் பொறுத்தவரை பான்மசாலா கடைகளைக் கண்காணிக்க வேண்டியது செக்டார் பார்ட்டிகள் தான். ஆனால், ஒவ்வொரு காவல் நிலைய எல்கையிலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட ஏரியாக்களை கவர் செய்வதே அவர்களுக்கு பெரும்பாடாகி விடுகிறது. இதனால், போலீசுக்கு மாமுல் கொடுப்பதாகக் கூறி, பெட்டிக் கடைக்காரர்கள் கஸ்டமர்களிடம் புகுந்து விளையாடுகின்றனர். வெளிமாநிலங்களில் இருந்து வரத்து தடைபட்டதால், குட்கா மாபியாக்கள், கைவசம் வைத்திருக்கும் சரக்குகளைக் கூடுதல் விலைக்கு கடைக்காரர்களிடம் தள்ளிவிடுகின்றனர்.

இந்தப் புகையிலை விற்கும் கடைக்காரர் ஒருவரிடம் பேச்சுக் கொடுத்தோம். “தலைவரே... கடையிலை இந்த சோப்பு, சீப்பு, எண்ணைய், பிஸ்கட் விற்கிறதுல... பெருசா ஒன்னும் லாபம் கிடைக்காது. ஆனா இந்தப் பொட்டலத்தில் ஒரே நாளில் குறைஞ்சது ரூ.3,000 லாபம் எடுத்திடலாம். இந்தப் பக்கம் இந்திக்கார பசங்க... நிறைய வேலை பார்க்கிறாங்க. அவங்க தான் நம்ம ரெகுலர் கஸ்டமர். போலீசு விற்கக் கூடாதுன்னு சொன்னாலும், கஸ்டமர் ‘இதத்தான்’ ரெகுலராகக் கேட்டு வருகிறார்கள். அதனால போலீசை ‘கரெக்ட்’ பண்ணி வச்சிகிட்டு பிழைப்பை ஓட்டிகிட்டு இருக்கேன்” எனத் தன்னிலை விளக்கம் கொடுத்தார்.
 

http://onelink.to/nknapp


நாம் விசாரித்த வகையில் இந்த போதைவஸ்துகள் கோவில்பட்டி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை வட்டாரத்தில் ரூ.60 முதல் ரூ.80 வரை விற்கப்படுகிறது. இனி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம். காத்திருப்போம்..!



 

 

சார்ந்த செய்திகள்