“நான் அரசியலுக்கு வரவில்லை, ஆனால், ரஜினி மக்கள் மன்றம் செயல்படும், பொதுசேவைகள் வழக்கம் போல் நடக்கும்'' என்பதுதான் நெடுங்கால எதிர்பார்ப்புக்கு ரஜினி வைத்த முற்றுப்புள்ளி. அதையும் மீறி அவரை “வா... தலைவா வா...” என அரசியலுக்கு வரச்சொல்லி பிரார்த்தனை போராட்டம் நடத்தியதிலும் தனக்கு உடன்பாடில்லை என்பதை அறிக்கை மூலம் தெளிவுபடுத்திவிட்டார் ரஜினி.
அவரது ரசிகர் மன்றத்தினர் சோர்வடைந்து விடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில லட்சங்களைச் செலவு செய்து பொங்கல் நலத்திட்ட உதவிகள் வழங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர்.
‘பகிர்ந்து வாழ்வோம், பாசத்தோடு பொங்கலை கொண்டாடுவோம்' என்ற பெயரில் ஜனவரி 13 ஆம் தேதி இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகரில், பொங்கல் விழாவினை முன்னிட்டு 200 ஏழை மக்களுக்கு 10 கிலோ அரிசி சிப்பம், புடவை, வேட்டி, துண்டு, கரும்பு, இனிப்பு ஆகியவற்றை மாவட்டச் செயலாளர் சோளிங்கர் ரவி வழங்கினார். கடந்த மாதம் வரை ரஜினி மன்ற நிகழ்ச்சி என்றால் முன்கூட்டியே வந்த மன்ற நிர்வாகிகள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை, ரசிகர்கள் மட்டும் வந்திருந்தனர்.
நிகழ்ச்சியில் மா.செ ரவி பேசும்போது, "எதையாவது எதிர்பார்த்து செயலாற்றுபவர்களுக்குத்தான் ஏமாற்றம் வரும். நாங்கள் தலைவரிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை, அவர் சொல்வதை செய்கிறோம். தலைவர் பெயரில் மக்களுக்கு உதவி செய்வதை நாங்கள் பெருமையாகவே கருதுகிறோம். தலைவர் எப்போதோ சொல்லிவிட்டார், ‘பணத்துக்கும் பதவிக்கும் ஆசைப்படுபவர்கள் என்னுடன் வர வேண்டாம், வந்தால் ஏமாந்து போவீர்கள்’ என்று. அவர் ஒருபோதும் எங்களை செலவு செய்யுங்கள் என்று சொல்லவில்லை. அவர் மீதுள்ள அன்பின் காரணமாக நாங்கள்தான் அவர் பெயரில் மக்களுக்கு உதவி வருகிறோம். என் இறுதி மூச்சு இருக்கும் வரை என் தலைவர் பெயரில் செய்யப்படும் உதவிகள் தொய்வின்றி நடைபெறும்'' என்றார் உறுதியான குரலில்.
‘அரசியல் களத்துக்கு வா தலைவா’ என ரசிகர்களின் போராட்டம் ஒருபுறம், பொங்கல் உதவிகள் செய்யும் ரசிகர்கள் ஒருபுறம் என நடப்பவை குறித்து ரஜினி என்ன நினைக்கிறார் என அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் கேட்டபோது, "‘என்னை அரசியலுக்கு வா என அழைக்கும் போராட்டத்துக்குப் போலீஸ் பாதுகாப்பும், அனுமதியும் கிடைத்தது என்றால் ஆட்சியில் இருப்பவர்கள் உத்தரவில்லாமல் நடந்திருக்காது. முதல்வர் ஏன் இப்படி நடந்துக்கறார்’ என எங்கள் தலைவர் வருத்தப்பட்டார். 2017ல் அவர் அரசியல் வருகை பற்றி உறுதி கொடுத்ததிலிருந்து நாங்கள் பல லட்சம் செலவு செய்திருக்கிறோம் என மன்ற நிர்வாகிகள் சிலர் மீடியாவில் பேசுவதும் தலைவரின் கவனத்துக்கு வந்தது. உண்மையாகவே அப்படி செலவு செய்து ஏழ்மையானவர்கள் இருக்கிறார்களா, என்ன செலவு செய்தார்கள்? யாருக்காக செய்தார்கள் என விசாரிக்கச் சொல்லியுள்ளார். அரசியலுக்கு வரவில்லை என சொன்னபிறகும் தன்மீது உண்மையான அக்கறையுள்ள ரசிகர்கள், மக்கள் சேவையில் இறங்கியிருப்பது அவரை நெகிழ வைத்துள்ளது'' என்றார்கள்.