உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது.இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது.53 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 50-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர்.2000-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இதன் உச்சகட்டமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில்,டெல்லியில் நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு கரோனா தொற்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இந்த சர்ச்சைகள் தொடர்பாக ஆளூர் ஷானவாஸிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்.நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
இந்தக் கூட்டம் சர்ச்சை ஆவதற்கும், மத ரீதியான பார்வை வருவதற்கும் என்ன காரணம் இருக்கு என்று நினைக்கிறீர்கள்?
முஸ்லிம்கள் மீது ஏற்கனவே கட்டி எழுப்பப்பட்டுள்ள வெறுப்பரசியல். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த ஒரு மாதமாக இந்த கரோனா வைரஸை சீன வைரஸ் என்று பரப்புரை செய்து வந்தார்கள்.இங்கே இருக்ககூடிய சங்கிகளும் சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அதனை கொண்டாடினார்கள்.தற்போது அவர்களுடைய முதலாளி ட்ரம்ப் தற்போது சீன அதிபருடன் பேசி சமாதானம் ஆகியுள்ளனர்.சீன வைரஸ் என்று சொல்வதைத் தற்போது ட்ரம்ப் நிறுத்தியுள்ளார். இதனால் அவர்களும் தற்போது அதனைக் கைவிட்டுள்ளார்கள்.அடுத்து அவர்களுக்கு யார் டார்கெட்.இங்கே இருப்பவர்களுக்கு வெறுப்பு அரசியல் செய்பவர்களுக்கு முஸ்லிம்கள்தான் பலிகடா ஆக்கப்படுகிறார்கள்.
இந்தியா முழுவதும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. கரோனா சாதி, மதம் பார்த்து வருவதில்லை. அப்படி இருக்கும்போது இந்த விஷயத்தில் மதச்சாயம் பூசப்படுவதாகக் கருதுகிறீர்களா?
ஊரடங்குக்குப் பிறகு கூடினார்கள் என்று முன்னணி பத்திரிகைகள் எழுதுகிறார்களே, அது உண்மையா? ஊரடங்குக்குப் பிறகு எப்படிக் கூட முடியும். சாதாரண மக்கள் கூட சிந்திப்பார்களே, ஊரடங்குக்குப் பிறகு எப்படிக் கூடுவார்கள் என்று. இது அவர்களுக்கு ஏன் தெரியவில்லை.ஏனென்றால் அவர்கள் செய்து வருவது வெறுப்பு அரசியல்.அதனால்தான் இந்த மாதிரியான விஷயங்களைப் பெரிதாக்க பார்க்கிறார்கள்.பல மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு எப்படி வர முடியும் என்று யோசிக்க வேண்டாம். இதை எல்லாம் யோசித்தார்கள் என்றால் அவர்களால் இந்த மாதிரி எழுத, பேச முடியாது. ஆனால் அவர்கள் யோசிப்பது கிடையாது.