ஆளப்போகிறதா 'ஆக்குலஸ் கோ'?

புதிது புதிதாக தொழில்நுட்பங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. உலகில் எங்கு இருந்தாலும் அவர்களுடன் இருந்த இடத்திலேயே இருந்து தொடர்பு கொள்ளலாம், அவர்களின் குரல் கேட்கலாம் அல்லது அவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்றும் பார்க்கலாம் என்ற நிலை இப்பொழுது இருக்கிறது. அதையும் தாண்டி, தற்போது அவர்களுடன் நேரடியாக இருப்பது போன்று உணரச் செய்ய 'வர்ச்சுவல் ரியாலிட்டி' (Virtual Reality) தொழில்நுட்பத்தில் 'ஆக்குலஸ் கோ' என்ற கருவியை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஃபேஸ்புக் நிறுவனம். பெரிதாக இருக்கும் மூக்குக் கண்ணாடி போன்று இருக்கும் அதைத் தலையுடன் சேர்த்து மாட்டிக் கொண்டு பார்த்தால், அந்த இடத்திற்கே செல்வது போல ஒரு உணர்வை ஏற்படுத்தும். இதில் பார்க்கும் காட்சிகள் நம் முன்னே நடப்பது போலவே இருக்கும். ஒளி-ஒலி இரண்டுமே அப்படியொரு உணர்வைக் கொடுக்கும்.

கடந்த வாரம் நடந்த ஒரு மென்பொருள் வல்லுநர்கள் சந்திப்பில், ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பெர்க், "வர்ச்சுவல் ரியாலிட்டி' என்பது தொழில்நுட்பத்தின் ஒரு புரட்சி. இதனால் நம் சமூகத்திற்கு நிறைய பயன்கள் கிடைக்கவும் இருக்கின்றது. மக்களிடையே இதற்கு வரவேற்பு தற்போது வரை அவ்வளவாக இல்லையென்றாலும் இனி உண்டாகும்". ஏற்கனவே ஃபேஸ்புக் வர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் 'ஆக்குலஸ் ரிஃப்ட்' என்ற கருவியை 2014 ஆண்டிலேயே மார்க்கெட்டிற்கு கொண்டுவந்தது. ஆனால் இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெறவில்லை. காரணம்,இதன் விலை 599 டாலராய் (கிட்டத்தட்ட 39000 ரூபாய்) இருந்தது. அதுமட்டுமல்லாது இதனை உபயோகிக்க உயர் தர கணினிகள் தேவைப்பட்டது. அவர்களின் போட்டி நிறுவனங்களான 'ஹெச்.டி .சி' மற்றும் 'ஸோனி' நிறுவனங்களுக்கும் இதே நிலைமை தான். ஆதலால் மக்களிடையே இவர்களும் நல்ல வரவேற்பை பெறவில்லை.

'ஆக்குலஸ் கோ' வில் விளையாடும் மார்க் சக்கர்பெர்க்
இந்த அனைத்தையும் முறியடிக்கும் வகையில் ஃபேஸ்புக் நிறுவனம் 'ஆக்குலஸ் கோ' என்ற வர்ச்சுவல் ரியாலிட்டி பாக்ஸை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை 199 டாலர் (கிட்டத்தட்ட 13000 ரூபாய்) . இது தனியாகவே இயங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனுடன் வேறு கணினிகளோ, மொபைல்களோ இணைக்க தேவையில்லை. மேலும் 360 டிகிரி புகைப்படங்கள், காணொளிகள் பார்ப்பது, சமூக வலைத்தளங்களை 3டி முறையில் பயன்படுத்துவது, வர்ச்சுவல் ரியாலிட்டி விளையாட்டுகள் எல்லாம் சாத்தியம். இந்த பாக்ஸ் 2018 ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.
இது வரை அனைத்து 'ஸ்மார்ட் மொபைல்'களும் நம்மை குனிய வைத்துக்கொண்டு தான் இருக்கின்றது. சாலைகளில் மொபைல்களை பயன்படுத்திக் கொண்டே செல்வதால், பல விபத்துகள் நடந்து வருகிறது. இப்பொழுது மக்கள், ஹெட்செட்களைப் பயன்படுத்தி பாட்டுக் கேட்டுக்கொண்டே செல்கிறார்கள். இதைப் பயன்படுத்தி படம் பார்த்துக் கொண்டே செல்லாமல் இருந்தால் சரி...
சந்தோஷ்