Skip to main content

"ஸ்டாலின் மீது இருந்த பாசம் அளவிட முடியாதது; அவசர நிலையின்போது ஸ்டாலினுக்காக கொதித்தெழுந்த அழகிரி..." - காந்தராஜ்

Published on 29/11/2022 | Edited on 30/11/2022

 

xம

 

இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட சம்பவத்தை யாரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது. கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் இந்தச் சட்டத்தை அப்போது பதவியிலிருந்த இந்திரா காந்தி அமல்படுத்தினார். இந்தியாவில் பெரிய அளவிலான களேபரங்கள் நடைபெறுவதற்கு மூலகாரணமாக இருந்த இந்த அவசரநிலை பிரகடனம் இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கம் இன்றளவும் இருந்து வருகிறது.

 

இதன் அடிமூலம் எதிலிருந்து துவங்குகிறது, இதில் பாதிக்கப்பட்டவர்கள் யார் யார் போன்ற கேள்விகளுக்குப் பதிலளித்திருந்தார் பிரபல அரசியல் விமர்சகர் காந்தராஜ். அவரிடம் இதுதொடர்பாக நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள், " அவசர நிலையின் போது தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது மு.க.அழகிரி தம்பியின் கைதை தாங்க முடியாமல் துடித்த துடிப்பை நான் அருகிலிருந்து பார்த்தவன். 

 

என் தம்பியை உள்ளே தள்ளியவர்களை சும்மா விடக்கூடாது டாக்டர் என்று கூறுவார். ரொம்ப கோபமாகப் பேசிக்கொண்டே அமருவார். நான் அவரிடம் அழகிரி நாம் எவ்வளவு கோபமாகப் பேசினாலும் அதிகாரம் மத்திய அரசிடம் இருக்கிறது. நாம் என்ன செய் முடியும் என்று கூறுவேன். நம்ம கோவத்தை நாம் நமக்குள்ளேதான் காட்ட முடியும். அதைத்தவிர வேறு வழி எதுவும் இல்லை என்பேன். ஆனால் அவர் அப்படி கோவமாகப் பேசுவார் அதே ராஜீவ்காந்தியை உள்ளே தள்ள வேண்டும் என்பார். அப்படி வேகமாகப் பேசுவார். அந்த அளவுக்கு பாசக்கார அண்ணனாக அவர் இருந்தார். 

 

இது பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இன்றைக்கு அரசியலில் இருவரையும் வேறு கோணத்தில் பார்த்து கருத்து கூறுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் நேரில் அவர்களின் பாசத்தைப் பார்த்தவன் என்ற அடிப்படியில் இதைக் கூறுகிறேன். ஸ்டாலின் சிறைச்சாலையிலிருந்த வரையிலும் அவருக்கு அந்தக் கோபம் கொஞ்சம் கூட குறைந்தபாடில்லை. எப்போது என்னைப் பார்த்தாலும் தம்பி மீது உள்ள பாசத்தால் கோபத்தின் உச்சிக்கே சென்று மத்திய அரசை விமர்சனம் செய்வார். அவர்களை விடக்கூடாது என்று கோபமாகப் பேசுவார். அந்த அளவுக்கு ஸ்டாலின் மீது பாசமாக இருந்தார்".