அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளுக்கு சீட் எண்ணிக்கையை முடிவு செய்வதிலும், தொகுதிகளை ஒதுக்குவதிலும் கறாராக இருந்த எடப்பாடி, த.மா.கா.வுக்கு எண்ணிக்கையையே சொல்லாமல் இழுத்தடித்தபடியே இருந்தார். இந்த நிலையில், கடந்த 9-ந்தேதி, 'தமாகாவுக்கு 3 சீட் ஒதுக்குகிறோம்; இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுங்கள்' என வாசனிடம் அதிமுக தலைமை சொன்னது. ஜெயலலிதா பாணியை வாசனிடம் கடைப்பிடித்தார் எடப்பாடி.
அதாவது, கடந்த 2016 தேர்தலில் வாசனுக்கு 5 சீட்டு கொடுக்க சம்மதித்த ஜெயலலிதா, இரட்டை இலையில் போட்டியிட வலியுறுத்தினார். தனிச் சின்னத்தில்தான் போட்டியிட விரும்புகிறோம் என வாசன் வலியுறுத்தியபோதும், ஜெயலலிதா அதை ஏற்கவில்லை. இதனால், அதிமுகவுடன் கூட்டணி வைக்காமல் மக்கள் நலக் கூட்டணிக்குத் தாவினார் ஜி.கே.வாசன்.
அதேபோல, இந்த தேர்தலில் ஜெயலலிதா வலியுறுத்தியது போலவே எடப்பாடி தகவல் சொல்லியனுப்பியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார் வாசன். அவரை பொறுத்தவரை, 12 சீட்டுகளில் போட்டியிட விரும்பி, த.மா.கா.வின் விருப்பப் பட்டியலையும் ஏற்கனவே எடப்பாடியிடம் ஒப்படைத்திருந்தார்.
இதனை, அமைச்சர்களுடன் அலசி ஆராய்ந்த எடப்பாடி, "ஏற்கனவே வாசனுக்கு ராஜ்யசபா சீட் கொடுத்தாச்சு. ராஜ்யசபா சீட்டுக்காக அவருக்கு போடப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு 34. அதாவது, 34 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இது சமம். அப்படியிருக்கும் போது 12 சீட்டுகள் கேட்டு இப்போது அடம் பிடித்தால் எப்படி? அதனால், 3 சீட்; இரட்டை இலையில் போட்டியிட வேண்டும். இதுதவிர வேறு வழியில்லை" என்று விவாதித்து அதனை ஜி.கே.வாசனுக்கு அமைச்சர்கள் மூலம் பாஸ் செய்துள்ளார் எடப்பாடி.
ராஜ்யசபா சீட் கொடுத்துட்டோம்; அதனால், இந்த முறை இவ்வளவுதான் என்றால் எப்படி? பாமகவுக்கும் தான் ராஜ்யசபா சீட் கொடுத்தாங்க. அவங்களுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கலையா? என்று ஜி.கே.வாசனிடம் தமாகா சீனியர் நிர்வாகிகள் ஆதங்கப்பட்டுள்ளனர். ராஜ்யசபா சீட் கொடுத்ததைச் சொல்லிக் காட்டிய விதம் வாசனை மிகவும் காயப்படுத்தியிருக்கிறது.
எடப்பாடி சொல்வதை ஏற்பதா? இல்லை தேமுதிக போல விலகிவிடுவதா? என்கிற குழப்பத்தில் இருந்துவந்த வாசன், மீண்டும் எண்ணிக்கையை உயர்த்துங்கள்; எங்கள் சின்னத்தில் போட்டியிடுகிறோம் எனச் சொல்லியிருக்கிறார். ஆனால், அதற்கு மறுத்த எடப்பாடி, "அதிமுகவின் முடிவு இதுதான். அதில், மாற்றமில்லை எனத் தெரிவித்து இருக்கிறார். இதனிடையே, வாசனுக்காக டெல்லியும் தலையிட்டுள்ளது. இந்நிலையில், இன்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்துப் பேசினார். இவ்வளவு கடுமை காட்டவேண்டாமே என்று டெல்லியிலிருந்து சொல்லப்பட்டிருப்பதால், எடப்பாடியின் மனம் மாறும் என தமாகாவினர் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில், 6 தொகுதிக்கு எடப்பாடி ஒத்துக்கொண்டுள்ளதாகவும் இரட்டை இலையில் போட்டியிட ஜி.கே.வாசன் சம்மதம் தெரிவித்ததாகவும் தமாகா மூத்த நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில், நேற்று இரவு அதிமுக கூட்டணியில் த.மா.கவுக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.