2021 பொங்கலுக்கு தமிழக அரசு ரூ.2,500 கொடுத்தது. இது தேர்தலுக்காகக் கொடுக்கப்பட்டது என எதிர்க் கட்சிகள் விமர்சனம் செய்தனர். அது தேர்தலுக்காகக் கொடுக்கப்பட்டதா என்பது தனி விவாதம். ஆனால், தமிழக மக்கள் அவ்வளவு எளிதில் பணத்திற்காக தங்களது வாக்குகளை விற்பதில்லை. ஆனால், அரசியல் கட்சிகள் வாக்குக்காக பணம் பரிசு பொருட்களை கொடுத்துகொண்டேதான் இருக்கின்றன.
1967 தேர்தலில் திமுக விரிவான ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் அரிசி தட்டுபாடு பிரச்சனைக்குத் தீர்வாக ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி; மூன்று படி முடியவில்லை என்றாலும் ஒரு படி; எனும் வாக்குறுதி திமுக வெற்றிக்கு வலுவானது. அண்ணா, “மூன்று படி இலட்சியம் ஒரு படி நிச்சயம்” என்று பிரச்சாரங்களில் முழங்கினார். நெடுங்காலமாக தீர்க்கப்படாமல் இருந்த அரிசி தட்டுபாடு பிரச்சனை, இந்தி திணிப்பு, திமுகவின் பிரச்சார விதம், பக்தவச்சலம் ஆட்சியில் இந்திக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது நடைபெற்ற பெரும் அடக்குமுறை, திமுகவின் பிரச்சார பீரங்கியாக இருந்த எம்.ஜி.ஆரை தேர்தலுக்கு முன் எம்.ஆர்.ராதா சுட்ட நிகழ்வு, சிகிச்சை பெறும் அவரது படங்கள்.. என அனைத்தும் திமுகவிற்கு சாதகமாக அமைந்தது.
இது ஒருபுறமிருக்க, உண்மையில் தமிழக மக்களுக்கு எதிரான சில காரியங்களையும் செய்தது பக்தவச்சலம் தலைமையிலான காங்கிரஸ். இதுவும் 1967 தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேவேளையில், தமிழகத்தின் அடிமட்ட விளிம்பு நிலை மக்களை நேரில் சந்திப்பது; பொதுக்கூட்டங்கள், தெருமுனை பிரச்சாரக்கூட்டங்கள் என தேர்தல் வெற்றியை வலுப்பெறச் செய்துகொண்டிருந்தது திமுக. இதன் நீட்சிவடிவம்தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலினின், ‘நமக்கு நாமே’ எனும் முன்னெடுப்பு. அதேதான், இந்த 2021 சட்டமன்றத் தேர்தலில்,‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ ஆகிய பிரச்சார பயணமும். 1967 தேர்தலில் திமுக 137 இடங்களில் வென்றது. அண்ணா தலைமையில் திமுக அரசு அமைந்தது. இந்தத் தேர்தலில் காமராஜர் தோற்றார். தேர்தல் முடிவுகள் குறித்து காமராஜர், “மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பி தி.மு.கவிற்கு வாக்களித்துள்ளனர். மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறேன். தி.மு.க. மந்திரிசபை அமைத்து வெற்றிகரமாகச் செயல்பட வாழ்த்துகள்" என்றார். தமிழக மக்கள் பணத்திற்காக தங்களது வாக்குகளை விற்பதில்லை, அரசியல் மற்றும் சமூக மாற்றத்திற்காகவே வாக்களிக்கின்றனர்.
எம்.ஜி.ஆர். அதிமுகவின் தலைமை பொறுப்பில் இருந்தவரை அடிமட்ட மக்களை எளிதில் சந்திப்பது அவர்களின் குறைகளை நேரடியாக கேட்பது, அதற்கு தீர்வு காண்பது உள்ளிட்ட நடைமுறை இருந்தது. ஆனால், எம்.ஜி.ஆரின் தலைமைக்கு பின்பு ஜெயலலிதாவின் அதிமுக கட்சியில் இது சற்றே தோய்ந்துதான் போனது. எம்.ஜி.ஆர். மக்களிடம் எவ்வளவு நெருங்கிவந்தாரோ அதே அளவு தனது கட்சியின் சின்னமான இரட்டை இலையை வெகுஜன மக்களிடம் பரிட்சியம் ஆக்கினார். கட்சியின் கொள்கையுடன் கலந்த வாக்காளர்கள், வேட்பாளரை அறிந்து வாக்களிப்பார்களோ இல்லையோ; கட்சியின் கொள்கையில் பிணைந்திருக்கும் சின்னத்திற்கே வாக்களிப்பர். அதனாலே பெரிதும் பிரச்சாரங்களில் வேட்பாளர் குறித்து பேசுவதை காட்டிலும் கட்சியின் சின்னம் குறித்தும் கட்சியின் தலைமை, கொள்கை குறித்தும் பெரும் அளவில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். இப்படியான நிலையில், அதிமுக கடந்த பத்துவருடங்களாக தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது. இது பெரிதே மாறுபட்ட தேர்தல் அரசியல். இது எப்படி சாத்தியமானது..?
கலைஞர் செய்து காட்டியதை எடப்பாடி பழனிசாமி செய்வாரா? | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #3