உள்ளாட்சி அமைப்புகளின் முதல்கட்ட தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க. தலைமைக்கு அதிர்ச்சியையும் தி.மு.க.வுக்கு நம்பிக்கையையும் தந்திருக்கிறது. அப்செட்டான எடப்பாடி, அமைச்சர்கள் பலருக்கும் செம டோஸ் கொடுத்திருக்கிறார்.
மூன்றாண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டிருந்த உள்ளாட்சிகளுக்கு 9 மாவட்டங்களைத் தவிர்த்து 27 மாவட்டங்களுக்கு இரண்டு கட்டமாக தேர்தலை நடத்தியது மாநில தேர்தல் ஆணையம். போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைத் தவிர மீதியுள்ள 5067 ஒன்றிய கவுன்சிலர்கள், 515 மாவட்ட கவுன்சிலர்கள் உள்பட 73,405 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. அதற்கான வாக்குகள் 2-ந்தேதி எண்ணப்பட்டன.
அ.தி.மு.க.வுக்கே அதிக வெற்றி கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்போடு 10 மணிக்கெல்லாம் எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும் தலைமைச் செயலகம் வந்திருந்தனர். ஆனால், முடிவுகள் எதிர்பார்த்தமாதிரி வரவில்லை. அதனால் கோட்டையில் இருக்கப் பிடிக்காமல் வீட்டுக்கு கிளம்பிச் சென்றார் எடப்பாடி. வீட்டிலிருந்தபடியே மாவட்ட அமைச்சர்களை தொடர்புகொண்டு எந்தெந்த மாவட்டத்தில் வீக்காக இருந்ததோ அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்களை வறுத்தெடுத்தார் எடப்பாடி.
வாக்கு எண்ணிக்கை நடப்பதற்கு முதல்நாள் (ஜனவரி 1) புத்தாண்டு வாழ்த்துகள் சொல்வதற்காக எடப்பாடியின் இல்லத்துக்குச் சென்றார் ஓ.பி.எஸ். இருவரும் பரஸ்பரம் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். அந்த சந்திப்பில் தேர்தல் முடிவுகள் எப்படி வரும் என மனம் விட்டுப் பேசியிருக்கிறார்கள்.
இதுகுறித்து அ.தி.மு.க.வில் விசாரித்தபோது, "தேர்தல் முடிவுகளைப் பற்றி பேசிய எடப்பாடி, "அதிகபட்சம் 40 சதவீத இடங்களைத்தான் நாம் கைப்பற்றுவோம்' என தகவல் வருகிறது. ஆனா, நம்முடைய அமைச்சர்களோ "80 சதவீதம் ஜெயிப்போம்'னு மார்தட்டிச் சொல்கிறார்கள். எனக்கு நம்பிக்கை இல்லை'' என ஆதங்கப்பட்டிருக்கிறார்.
இதனை ஆமோதித்த ஓ.பி.எஸ்., "எனக்கும் அப்படித்தான் தகவல் வருகிறது. ஆனாலும் அவ்வளவு மோசமாக போய்விடாது. 65 சதவீதம் வெற்றி கிடைக்கும். அப்படியே குறைந்தாலும் 50 சதவீதத்திற்கு குறையாது. நம்பிக்கையாக இருங்கள். குறிப்பிட்டு சொல்லணும்னா ஊராட்சிகளில் அ.தி.மு.க.வை தி.மு.க.வால் வெல்ல முடியாது. கட்சியும் சின்னமும் போட்டியிடுகிற மாவட்டம் மற்றும் ஒன்றிய கவுன்சில்களில் 50 சதவீதம் வெற்றி நமக்கு கிடைக்கும்' என தெரிவித்திருக்கிறார்.
எடப்பாடியோ, "கோவை, தேனி, நாமக்கல், புதுக்கோட்டை, நாகை, கரூர் என சில மாவட்டங்கள்தான் ஆறுதலாகத் தெரிகிறது. என்னுடைய சேலம் மாவட்டம்கூட எனக்கு நம்பிக்கையைத் தரவில்லை என சொல்ல, ஏன் கவலைப்படுகிறீர்கள்? கூட்டணி பலமும் அ.தி.மு.க. நிர்வாகிகளின் உழைப்பும் சேலம் உங்களை கைவிடாது' என நம்பிக்கை கொடுத்துவிட்டு கிளம்பிப்போனார் ஓ.பி.எஸ்.
இதனையடுத்து, தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, ராஜலெட்சுமி, செல்லூர் ராஜு, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும், மாநில நிர்வாகிகளும் எடப்பாடியை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர். தங்கமணி, வேலுமணியை தவிர மற்றவர்களிடம், "தேர்தல் முடிவுகள் குறித்து நிறைய நம்பிக்கை கொடுத்திருக்கீங்க. நீங்க சொன்ன மாதிரி முடிவுகள் வரலைன்னா என்னுடைய இன்னொரு முகத்தைப் பார்ப்பீங்க. இனி எந்த ஒரு தேர்தல் வந்தாலும் உங்களுடைய சிபாரிசுகளை ஏற்க போவதில்லை' என எச்சரித்தார் எடப்பாடி. இதனால் அமைச்சர்களும் நிர்வாகிகளும் ஆடிப்போனார்கள்'' என்கிறார்கள் அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள்.
இந்த மனநிலையோடு இருந்த எடப்பாடி, பல மாவட்டங்களில் அ.தி.மு.க.வை வீழ்த்தி தி.மு.க. முன்னேறுகிறது என வந்துகொண்டிருந்த தகவல்களால் ஏகத்துக்கும் அதிர்ச்சியடைந்தார். அதேபோல, அமைச்சர்கள் பலருக்கும் தேர்தல் முடிவுகள் கிலியை தந்திருக்கிறது. நம்மிடம் பேசிய அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள், "தேர்தலில் கோட்டைவிடும் அமைச்சர்களை பதவியிலிருந்து உடனடியாக நீக்கி அவர்களுக்கு தண்டனை கொடுப்பார் ஜெயலலிதா. அதே அஸ்திரத்தை எடுத்தால்தான் அமைச்சர்கள் திருந்துவார்கள் என எடப்பாடிக்கு உளவுத்துறை யோசனை சொல்லியிருக்கிறது''’ என்கின்றனர்.