ஒரு இடைவேளைக்குப் பிறகு இன்று நக்கீரன் அலுவலகத்தின் தொலைபேசி தொடர்ந்து ஒலிக்கிறது, மின்னஞ்சல்பெட்டி நிறைந்துள்ளது. தொடர்பு கொள்ளும் ஒவ்வொருவரும் நக்கீரன் ஆசிரியர் பேசிய வீடியோவை குறிப்பிட்டுப் பேசுகின்றனர்; பொள்ளாச்சியில் பல ஆண்டுகளாக நடைபெற்று இன்று உலகுக்குத் தெரியவந்திருக்கும் கொடூரத்தை திரும்பிப்பார்க்க வைத்ததில் நக்கீரனின் பங்கை பாராட்டுகின்றனர்; அந்தப் பாவிகளுக்கு என்ன தண்டனை வழங்கவேண்டுமென்று கொந்தளிக்கின்றனர்; அரசியலும் அதிகாரமும் சேர்ந்து முந்தைய பல வழக்குகளைப் போல இதையும் விட்டுவிடுமோ என்று அஞ்சுகின்றனர்; நக்கீரன் இந்தப் பிரச்சனையை விட்டுவிடக் கூடாதென்று கேட்டுக்கொள்கின்றனர்.
பொள்ளாச்சியில் பல ஆண்டுகளாக நடந்து, ஒரு தைரியமான பெண்ணின் புகாரால் வெளிவந்திருக்கும் இந்தக் கொடுமை அமைதியாகக் கடந்து போய்விடப்படும் அபாயம் இருந்தது. இதில் தொடர்புடைய முக்கிய அரசியல் புள்ளிகளின் உறவுகள் தப்பிக்க, மேல் அடுக்கில் இருந்த சில குற்றவாளிகளை கைது செய்து அவர்கள் மட்டும்தான் குற்றவாளிகள் என்பதுபோல் காட்டுகிறது காவல்துறை. அவர்களுக்குப் பின் இருப்பவர்கள் பெயர் உச்சரிக்கப்படாமலேயே இருந்தது. நக்கீரன் ஆசிரியர் பேசிய வீடியோவில் முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு இந்தக் கொடூரத்தில் இருக்கக்கூடிய தொடர்பு குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். நம்மை தொலைபேசியில் அழைத்த சிலர் அதையும் குறிப்பிட்டு வாழ்த்துகின்றனர். இன்னும் சிலர், இந்தக் குற்றத்தில் இன்னும் பலருக்குத் தொடர்புள்ளது என்றும் பல கோடி ரூபாய் பணம் சார்ந்த விஷயமாக இது நடைபெற்றுள்ளது என்றும் தகவல்களைத் தருகின்றனர்.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்குக் கொண்டு செல்ல முயன்ற பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் அவருக்குப் பின் இருக்கும் பெரும்புள்ளிகளை வெளிக்கொண்டுவரவும் நிர்மலாதேவியின் உயிருக்கு இருக்கும் ஆபத்தை உலகுக்குத் தெரியப்படுத்துவதில் நக்கீரன் காட்டிய வேகமும் அதனால் எதிர்கொண்டதும் அனைவரும் அறிந்ததே. இன்று அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. அவர் உண்மைகளைப் பேசினால், பல பெருந்தலைகள் இந்தப் பிரச்சனையில் உருளலாம்.
நக்கீரனின் இந்த வீடியோவின் வீச்சு, சமூக ஊடகங்களில் இந்தக் கொடுஞ்செயலுகெதிரான தீயைப் பற்றவைத்துள்ளது. பிரபலங்களை இது குறித்துப் பேச வைத்துள்ளது. மதியம் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றிய அரசு, மாலை சிபிஐ விசாரணைக்கு மாற்ற ஆலோசிக்கிறது. இன்னொரு புறம் இந்த வழக்குக்குப் பொறுப்பான கோவை மாவட்ட எஸ்.பி பாண்டியராஜன், 'இந்த வழக்கில் அரசியல் பின்புலம் எதுவும் இல்லை, வெறும் நான்கு வீடியோக்கள் மட்டுமே கிடைத்துள்ளது' என்று உறுதியாகக் கூறுகிறார். பாண்டியராஜன், திருப்பூர் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்தில் ஒரு பெண்ணை முரட்டுத் தனமாகத் தாக்கி ஆள்வோரின் அபிமானத்தைப் பெற்றவர். சமீப ஆண்டுகளில் தமிழகத்தின் கல்லூரி மாணவிகளும் இளம் பெண்களும் எதிர்கொண்டு வரும் இத்தகைய புதிய வகை அச்சுறுத்தல்கள், கொடுமைகளின் பின்னணியில் உள்ளவர்களின் முகத்தை நக்கீரன் உலகுக்குக் காட்டும். இதற்குக் கிடைக்கும் வாசகர்களின் ஆதரவு மட்டுமே நக்கீரனின் பலம்.
support@nakkheeran.in