Skip to main content

இணையத்தில் ஆபாசப் படம் பார்ப்பவர்களுக்கு நடக்கும் மோசடி - விழிப்புணர்வை ஏற்படுத்திய வழக்கறிஞர் பாலு!

Published on 13/11/2024 | Edited on 13/11/2024
advocate balu interview

‘அரசியல் சடுகுடு’ என்ற தலைப்பில் நக்கீரன் நடத்தி வரும் நேர்காணலில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துகளை அரசியல் விமர்சகர்கள் பலர் பேசி வருகின்றனர். அந்த வகையில் மூத்த வழக்கறிஞர் பாலு, இணையவழி பண மோசடி குறித்து தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.  

வாட்ஸ் அப், முகநூல், ட்ரூ காலர் உள்ளிட்ட பல செயலிகளைப் பயன்படுத்துபவர்கள் தங்களுக்குத் தெரியாமலேயே அவர்களின் தரவுகளை அந்நிறுவனத்திடம் கொடுத்து விடுகின்றனர். நாம் பயன்படுத்தும் சமூக வலைத்தள நிறுவனங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை இல்லை என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அந்நிறுனக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் தகவல் தொழில்நுட்ப  சட்டங்கள் மிகக் குறைவாகத்தான் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. நீதிமன்றங்களே சில நேரங்களில் அந்த நிறுவனங்கள் வெளிநாட்டில் இருப்பதால் நடவடிக்கை மேற்கொள்ள முடியாது சூழலில் உள்ளது. இந்தியாவின் சட்டவிதிமுறைகளுக்கு அந்நிறுவனங்கள் ஓப்புதல் பெற்றுளாதா? என்ற கேள்விக்கு இன்னும் பல நிறுவனங்கள் பதிலளிக்காமல் இருக்கின்றனர்.

ஆன்லைன் டிரேடிங் மூலம் முதலீடு செய்தால் அதிக பணம் கிடைக்கும் என்று திருமணமான பெண் ஒருவர் தொடர்ந்து  ௪ மாதங்களில் ரூ.10 கோடிக்கும் மேற்பட்ட தொகையை அனுப்பியிருக்கிறார். இதற்கிடையில் அவருக்கு லாபம் வருவதைக் கணக்கு காட்டி வந்திருக்கின்றனர். தீடிரென ஒருநாள் தன்னுடைய பணத்தை அந்த பெண் எடுக்க முயற்சித்த போது  எடுக்க முடியவில்லை. அதன் பின்பு அந்த பெண் காவல் துறையில் புகார் கொடுத்த பிறகு பணம் செலுத்திய வங்கிக் கணக்குகளை வைத்து 4 நபரைக் கைது செய்கின்றனர். அந்த நபர்களிடமிருந்து வெறும் ரூ.40 லட்சத்துக்கும் மேற்பட்ட தொகையை மட்டும் காவல்துறையினர் மீட்டுக் கொடுத்தனர்.

அதன் பிறகு அந்த நான்கு பேரை போலீசார் விசாரிக்கையில் பணம் பல வெளிநாடுகளுக்குக் கைமாறி இருப்பது தெரிய வந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் காவல்துறையினரால் ஒன்றுமே செய்ய முடியாது. ஏனென்றால் இது சர்வதேச அளவிலான வழக்கு என்பதால் வெளிநாடுகளில் விசாரிக்க ஒப்புதல் வழங்க வேண்டும் அந்தளவிற்கு இங்குள்ள காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்படுவதில்லை. நீதிமன்றங்களே சில நேரங்களில் தடுமாறுகிறது. ஆன்லைன் செயலிகளால் பாமர மக்கள் ஏமாறும் எண்ணிக்கை தற்போது அதிகமாகிவிட்டது.

சில நேரம் மொபைல் பயன்படுத்திக்கொண்டிருக்கும்போது பெண்களின் நிர்வாண புகைப்படங்கள் வரும் அதைத் தொடர்ந்து ஒரு அலர்ட் மெசேஜ் வரும். பின்பு சிறிது நேரம் கழித்து சில நபர்கள் கால் செய்து ஆன்லைன் கைது என்ற பெயரில் தனி அறைக்கு அந்த மொபைல் உரிமையாளரை வரவழைத்து பணம் கேட்டு மிரட்டுவார்கள். இந்த மிரட்டல்கள் மொபைல்களில் ஆபாசப் படங்கள் பார்ப்பவர்களுக்கும் நடக்கும். இதுபோல பல மிரட்டல் தொடர்பான வழக்குகள் அதிகமானதால் பிரதமரே விழிப்புணர்வு கொடுத்தார்.

இந்தியாவில் பல பகுதியிலுள்ள அந்தந்த மொழி தெரிந்த இளைஞர்களை சில வெளிநாட்டு கும்பல்கள் இங்குள்ள ஏஜெண்டுகளின் உதவியால் வேலை தருவதாக அழைத்து அவர்களின் பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்துக்கொண்டு அடைத்து  சித்திரவதை செய்து இணையவழி அடிமைகளாகப் பயன்படுத்தி வருகின்றனர். அந்த இளைஞர்களின்மொழி தெரிந்த நபர்களுக்கு கால் செய்து மிரட்டி பணம் பறிக்கின்றனர். தமிழக அரசாங்கம் இதற்கு நடவடிக்கை எடுத்து சமீபத்தில் கம்போடியா பகுதியிலிருந்து சில இளைஞர்களை மீட்டுள்ளனர். ஆனால் மீட்கப்படாத நிறைய இளைஞர்கள்  உள்ளனர். பொதுமக்கள் முடிந்தளவிற்கு ஆன்லைன் வழியாக தரவுகளைக் கொடுப்பதில் விழிப்புணர்வாக இருக்க வேண்டும் அல்லது தவிர்க்க வேண்டும் என்றார்.