தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களுக்கும் மார்ச் 26-ந் தேதி தேர்தலை நடத்துகிறது தலைமைத் தேர்தல் ஆணையம். இதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 6 முதல் 13-ந் தேதிவரை நடக்கிறது. இதனால் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடியும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் தீவிர கவனம் செலுத்தினர்.
தமிழக சட்டமன்றத்தில் அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையின் மூலம் இரண்டு கட்சிகளும் தலா 3 இடங்களை எளிதாக கைப்பற்ற முடியும். அந்த வகையில், 6 வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் நிற்கும்பட்சத்தில் போட்டியின்றி அனைவரும் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர். 6 இடங்களுக்கு 7 பேர் போட்டியிட்டால் தேர்தல் நடக்கும்.
இந்த நிலையில் அ.தி.மு.க., தி.மு.க. இரண்டு கட்சிகளிலும் அதன் கூட்டணிக் கட்சிகள் சீட் கேட்டு கச்சைகட்டியுள்ளன. குறிப்பாக, அ.தி.மு.க. கூட்டணியிலுள்ள தே.மு.தி.க. கட்சியின் பொருளாளர் பிரேமலதா, "லோக்சபா தேர்தலின்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதியின்படி எங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டை அ.தி.மு.க. ஒதுக்கும். கூட்டணி தர்மத்தை நாங்கள் கடைப்பிடிக்கிறோம்'' என்று சொன்னதுடன்... முதல்வர் எடப்பாடியை சந்திக்க, தனது சகோதரரும் தே.மு.தி.க. இளைஞரணிச் செயலாளருமான சுதீஷை அனுப்பி வைத்தார். சந்திப்பும் நடந்தது.
அந்த சந்திப்பில், லோக்சபா தேர்தலில் நாங்கள் உங்களோடு கூட்டணி வெச்சோம். அந்த பேச்சுவார்த்தையில், "பா.ம.க.வுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கியதுபோல எங்களுக்கும் ஒதுக்க வேண்டும்' என நாங்க கேட்டபோது, "ராஜ்யசபா தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம்' என சொன்னீர்கள். அதற்கு ஒப்புக்கொண்டு லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க.வுக்காக உழைச்சோம். கடந்த வருடம் (2019) ராஜ்யசபா தேர்தலும் வந்தது. "எங்களுக்கு சீட் வேண்டும்' என நினைவுபடுத்தினோம். நீங்களோ, "அ.தி.மு.க.வுக்கு கிடைக்கப்போறது 3 சீட்டுதான். இதில் ஒன்னு பா.ம.க.வுக்கு போய்டும். உங்களுக்கும் ஒதுக்கினால் கட்சியின் சீனியர்கள் ஒத்துக்கொள்ளமாட்டார்கள். அடுத்த முறை பார்க்கலாம்'னு சொன்னீர்கள். இப்போ, மீண்டும் தேர்தல் வந்திருக்கிறது. போனமுறை பா.ம.க.வுக்கு கொடுத்தது போல இந்த முறை எங்களுக்குக் கொடுங்கள்'' என கேட்டுள்ளார் சுதீஷ்.
எடப்பாடியோ, "பா.ம.க.விடம் போட்டுக்கொண்டது போல எந்த அக்ரிமெண்டும் தே.மு.தி.க.வுடன் போட்டுக்கொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால், உங்களுடன் கூட்டணி பற்றி பேசியதெல்லாம் பா.ஜ.க.தானே. "ராஜ்யசபா சீட்டெல்லாம் தே.மு.தி.க. எதிர்பார்க்க வேண்டாம்' என அப்போதே பா.ஜ.க.விடம் சொல்லிவிட்டோம். இது உங்களுக்கும் தெரியும். அப்படியிருக்க இப்போது நீங்கள் கேட்பதும் அதற்கு கூட்டணி தர்மத்தைப் பற்றி பேசுவதும் நியாயமில்லை. இருப்பினும், உங்கள் எதிர்பார்ப்பினை கட்சியின் சீனியர்களிடம் விவாதிக்கிறேன். அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்'' என சொல்லி, பிரேமலதாவின் எதிர்பார்ப்பை நிராகரித்திருக்கிறார். இதனால் விரக்தியுடன் வெளியேறிவிட்டார் சுதீஷ்.
இதற்கிடையே, "ராஜ்யசபா குறித்து தே.மு.தி.க.வுடன் எந்த ஒப்பந்தமும் போடவில்லை' என அமைச்சர் ஜெயக்குமார் மூலம் அறிவிக்கவும் செய்தார் எடப்பாடி. அ.தி.மு.க.வின் இத்தகைய அணுகுமுறையை பிரேமலதா ரசிக்கவில்லை. இதனை விஜயகாந்திடம், பிரேமலதா தெரிவிக்க, "அவங்க தலைவி போலவே எடப்பாடியும் நடந்துக்கிறாரு' என கமெண்ட் பண்ணியிருக்கிறார் விஜயகாந்த் என்கிறார்கள், இது குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க., தே.மு.தி.க. கட்சிகளின் சீனியர்கள்.
அ.தி.மு.க. கூட்டணியிலுள்ள தே.மு.தி.க.வுக்கு சட்டமன்றத்தில் ஒரு எம்.எல்.ஏ.கூட இல்லை என்பதால் அக்கட்சி தலைமையின் எதிர்பார்ப்பை எடப்பாடி உள்ளிட்ட அ.தி.மு.க. தலைமை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், தி.மு.க.வின் நிலை அப்படி அல்ல. தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.சாமியும், காத்தவராயனும் அடுத்தடுத்து காலமானதை தொடர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான காங்கிரசிடமுள்ள 7 எம்.எல்.ஏ.க்களில் 3 பேரின் ஆதரவு தி.மு.க.வுக்கு அவசியமாக இருக்கிறது. அப்போதுதான் 3-வது சீட்டை தி.மு.க.வால் கைப்பற்ற முடியும். இப்படியான சூழலில், தங்களுக்கு சீட் வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்துவதால் தி.மு.க.வுக்கு நெருக்கடி அதிகரித்திருக்கிறது.
இது குறித்து ராகுல்காந்தியின் நேரடி வட்டத்திலுள்ள தமிழக எம்.பி. ஒருவரிடம் நாம் பேசியபோது, "கடந்த வருடம் நடந்த ராஜ்யசபா தேர்தலில் முன்னாள் முதல்வர் மன்மோகன்சிங்கிற்காக ஒரு சீட் வேண்டுமென மு.க.ஸ்டாலினுக்கு தகவல் தந்தோம். ஆனா, தி.மு.க.வோ "வைகோவுக்கு சீட் தருவதால் காங்கிரசுக்கு வாய்ப்பில்லை' என மறுத்துவிட்டது. சோனியாவும் ராகுலும் அதைப்பற்றி கவலைப்படவில்லை. அதேசமயம், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரித்ததால்தான் 3 சீட்டுகளையும் கடந்தமுறை தி.மு.க. கூட்டணியால் கைப்பற்ற முடிந்தது. அதேபோல, தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. எங்கள் கட்சியில் மூத்த தலைவர்கள் பலரும் "தி.மு.க.விடமிருந்து ஒரு சீட் வாங்க வேண்டும்' என வற்புறுத்தினர். ராகுல்காந்தியும் இதுகுறித்து சோனியாவிடம் பேசினார். ஆனால் தி.மு.க.விலிருந்தே 3 வேட்பாளர்களை நிறுத்திவிட்டார்கள். அதிருப்தியிலிருக்கும் காங்கிரசை எப்படி தி.மு.க. சமாதானப்படுத்தப்போகிறது என தெரியவில்லை'' என்கிறார் அழுத்தமாக. சட்டமன்றத்தில் தி.மு.க.விற்கு 100 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். 2 எம்.எல்.ஏ.க்கள் காலமானதால் அதன் எண்ணிக்கை 98 ஆக குறைந்துள்ளது. தி.மு.க. கூட்டணிக் கட்சிகளான காங்கிரசுக்கு 7 எம்.எல்.ஏ.க்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 எம்.எல்.ஏ.வும் என தி.மு.க. கூட்டணியின் பலம் 106 ஆக இருக்கிறது. ஒரு எம்.பி.யை தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்பதால், தி.மு.க.வின் 3 எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க 102 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு வேண்டும். முஸ்லிம் லீக்கின் 1 எம்.எல்.ஏ.வின் ஆதரவில் எந்த சிக்கலும் இருக்காது என்பதால் தி.மு.க.வின் பலம் 99 ஆக இருக்கும். அந்த வகையில், 3-வது எம்.பி.யை தேர்வு செய்ய இன்னும் 3 எம்.எல்.ஏ.க்கள் தேவை. அதற்கு காங்கிரசின் ஆதரவு அவசியம். இதனைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்தது காங்கிரஸ்.
அ.தி.மு.க.வை பொறுத்தவரை சபாநாயகர் தனபாலையும் சேர்த்து 125 எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர் (இதில் இரட்டை இலையில் போட்டியிட்ட தோழமைக் கட்சிகளின் தலைவர் களான தனியரசு, கருணாஸ், தமீமுன் அன்சாரி ஆகிய 3 எம்.எல்.ஏ.க்களும் அடங்குவர்). இந்த எண்ணிக்கையின்படி 3 எம்.பி.க்களை அ.தி.மு.க. எளிதாக கைப்பற்ற முடியும். 3 எம்.பி.க்களை தேர்வு செய்ய 102 எம்.எல்.ஏ.க்கள் போதும். அதனை கணக்கிட்டால் அ.தி.மு.க.வில் 23 எம்.எல்.ஏ.க்கள் உபரியாக இருக்கிறார்கள். கூடுதலாக இருக்கும் இந்த எம்.எல்.ஏ.க்களையும், தி.மு.க. மீது காங்கிரஸ் அதிருப்தியடையும் பட்சத்தில் காங்கிரஸை முன்னிறுத்தி தி.மு.க.விடமிருந்து 1 எம்.பி.யை கைப்பற்ற விளையாடிப் பார்க்கலாமா? என முதல்வர் எடப்பாடி திட்டமிடுவதாக அ.தி.மு.க. தரப்பிலிருந்து தகவல்கள் கசிகின்றன.
இது குறித்து தமிழக தேர்தல் ஆணைய வட்டாரங்களில் விசாரித்தபோது, "தி.மு.க.விடமிருந்து 1 சீட்டை கைப்பற்ற முடியுமா? என அதிகாரிகளிடம் முதல்வர் எடப்பாடி விவாதித்திருக்கிறார். அதாவது, நடக்கவிருக்கும் ராஜ்யசபா தேர்தலை 2013-ல் நடந்த ராஜ்யசபா தேர்தலோடு ஒப்பிட்டு ஆராய்கிறார் முதல்வர். 2013 தேர்தலின் போது அ.தி.மு.க.வுக்கு 146 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். இரட்டை இலையில் போட்டியிட்ட அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகளான சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சிக்கு 2, பார்வர்டு பிளாக், தமிழக குடியரசு கட்சி (செ.கு.தமிழரசன்), கொங்கு இளைஞர் பேரவை (தனியரசு ) ஆகிய கட்சிகளுக்கு தலா 1 எம்.எல்.ஏ. என மொத்தம் 151 எம்.எல்.ஏ.க்களாக அதன் பலம் இருந்தது. அதே சமயம், தனிச் சின்னத்தில் போட்டியிட்ட அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகளான தே.மு.தி.க.விடம் 29, சி.பி.எம்.மிடம் 10, சி.பி.ஐ.யிடம் 9, மனிதநேய மக்கள் கட்சியிடம் 2, புதிய தமிழக கட்சியிடம் 2 என 52 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர்.
ராஜ்யசபா தேர்தல் நடந்த காலக்கட்டத்தில் தே.மு.தி.க., மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகியவை மூன்றும் ஜெயலலிதாவோடு முரண்பட்டிருந்தன. இந்தச் சூழலில், 151 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட அ.தி.மு.க. 4 எம்.பி.க்களை எளிதாக வெற்றிபெற முடியும். வெற்றிக்குத் தேவையான 136 எம்.எல்.ஏ.க்கள் போக 15 பேர் உபரியாக இருந்தனர். அந்தச் சூழலில் 5 பேரை களத்தில் இறக்கினார் ஜெயலலிதா. காரணம், விஜயகாந்த் வைத்திருந்த 29 எம்.எல்.ஏ.க்களில் 7 பேர் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக மாறி அ.தி.மு.க.வை ஆதரித்ததும், அதனால் தே.மு.தி.க.வின் பலம் 22 ஆக குறைந்துபோனதும், தி.மு.க.வில் வெற்றிக்கான மேஜிக் நெம்பர் இல்லாததும், தி.மு.க. கூட்டணியிலிருந்த பா.ம.க. தி.மு.க.வோடு முரண்பட்டிருந்ததும்தான்.
இதனை வைத்து விளையாடிப் பார்க்கலாம் என 5 பேரை களத்தில் இறக்கினார் ஜெயலலிதா. அப்போது, 23 ஓட்டுகள் வைத்திருந்த தி.மு.க. சார்பில் கனிமொழியும், 22 ஓட்டுகள் வைத்திருந்த தே.மு.தி.க. சார்பில் இளங்கோவனும் நிறுத்தப்பட்டனர். அதேசமயம், 9 ஓட்டுகள் வைத்திருந்த சி.பி.ஐ. கட்சி, டி.ராஜாவை நிறுத்தியது. இதனால் பரபரப்பானது தேர்தல். ஒரு கட்டத்தில் தனது 5-வது வேட்பாளரை வாபஸ் பெற வைத்துவிட்டு, டி.ராஜாவுக்கு ஆதரவளித்தார் ஜெயலலிதா. ஆக, 6-வது இடத்துக்கு கனிமொழிக்கும் இளங்கோவனுக்கும் போட்டி அதிகரித்தது.
அன்றைக்கு அ.தி.மு.க.விடம் ஒரு சீட் கேட்டது சி.பி.ஐ. அதனை மறுத்த ஜெயலலிதா, அ.தி.மு.க.விடம் உபரியாக இருக்கும் 15, தே.மு.தி.க. அதிருப்தியாளர்கள் 7, தி.மு.க.வோடு முரண்பட்டிருந்த பா.ம.க.வின் 3 என 25 எம்.எல்.ஏ.க்களை வைத்து எலிமினேஷன் நடைமுறையில் ஜெயித்து விடலாம் என கணக்கிட்டார் ஜெயலலிதா. அதாவது, தேவையான 34 எம்.எல்.ஏ.க்கள் இல்லாத பட்சத்தில் போட்டியில் இருக்கும் கட்சிகளில் அதிக ஓட்டுகளை எந்த கட்சி வேட்பாளர் வாங்குகிறாரோ அவரையே வெற்றி.பெற்றவராக அறிவிக்க முடியும்.
இந்தத் திட்டத்தில்தான் 5-வது வேட்பாளரை களமிறக்கினார் ஜெயலலிதா. ஆனால், ஜெயலலிதா எதிர்பார்த்தபடி பா.ம.க. எம்.எல்.ஏ.க்களை வளைக்க முடியவில்லை. பா.ம.க.வோ தேர்தலைப் புறக்கணித்தது. அந்த வகையில் அ.தி.மு.க.விடமும் தே.மு.தி.க.விடமும் தலா 22 ஓட்டுகள் இருந்தன. இதில் அ.தி.மு.க. கஸ்டடியில் இருக்கும் தே.மு.தி.க. அதிருப்தியாளர்கள் 7 பேரில் ஒரு நபர் மாற்றிப்போட்டாலும் தனது வேட்பாளர் தோற்றுப் போய் விடுவார் என கணக்கிட்டு கடைசி நேரத்தில் சி.பி.ஐ.யின் டி.ராஜாவை ஆதரிக்கும் முடிவை எடுத்தார் ஜெயலலிதா.
அப்போது, தி.மு.க.விடம் 23, அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசில் 5 என 28 எம்.எல்.ஏ.க்களும், தே.மு.தி.க.விடம் 22 பேரும் இருந்தனர். இந்த நிலையில், மனிதநேய மக்கள் கட்சியும் புதிய தமிழகமும் தி.மு.க.வை ஆதரிக்க கனிமொழிக்கு 32 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்தது. தேர்தல் முடிவில் அ.தி.மு.க. 4 , சி.பி.ஐ. 1 என 5 பேர் எளிதாக வென்றனர். 6-வது இடத்துக்கு தி.மு.க.வுக்கும் தே.மு. தி.க.வுக்கும் நடந்த போட்டியில் கனிமொழிக்கு 31 வாக்குகளும் (ஒரு ஓட்டு செல்லாத ஓட்டு) இளங்கோவனுக்கு 22 வாக்குகளும் கிடைத்தன. ஒரு எம்.பி.க்கு தேவையான 34 வாக்குகள் இல்லாத நிலையில் ‘எலிமினேஷன்’ நடைமுறையில் கனிமொழி ஜெயித்ததாக அறிவிக்கப்பட்டது.
அதேபோல, இன்றைக்கு தி.மு.க.வை காங்கிரஸ் ஆதரிக்கும்பட்சத் தில் 3 எம்.பி.க்கள் தி.மு.க.வுக்கு கிடைக்கும். அதேசமயம், அ.தி.மு.க.வில் 3 எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கு தேவையான எம்.எல்.ஏ.க்கள் போக உபரியாக 23 பேர் இருக்கின்றனர். அதேபோல, 99 எம்.எல்.ஏ.க்களை (முஸ்லிம் லீக் உள்பட) வைத்திருக்கும் தி.மு.க., 2 எம்.பி.க்களை எளிதாக பெற்றது போக உபரியாக 31 எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர். தி.மு.க. வுடன் காங்கிரஸ் முரண்படுகிறபட்சத்தில் அதன் ஆதரவு அ.தி.மு.க. வுக்கு கிடைத்தால் அதன் பலம் 30 ஆக உயரும். தினகரனின் ஆதரவும் அ.தி.மு.க.வுக்கு கிடைத்தால் 31 ஆக மாறும். இரண்டு கட்சிகளும் சம நிலையில் இருக்கும்போது இரண்டாவது விருப்பத் தேர்வு மூலம் அ.தி.மு.க.வின் பலம் கூடும். வெற்றி பெறுவதற்கும் வாய்ப்பு உண்டு. காங்கிரசும் தினகரனும் ஒத்துழைத்தால் மட்டுமே இது சாத்தியம்.
தி.மு.க.விடமிருந்து 1 இடத்தை அபகரிக்க அ.தி.மு.க. சார்பில் வேட்பாளரை எடப்பாடி நிறுத்தினால் சாத்தியப்படாது. அதற்கு மாறாக, காங்கிரசை அ.தி.மு.க. ஆதரிக்க முன்வரும் பட்சத்தில் அதனை காங் கிரஸ் தலைமை ஏற்றுக்கொண்டு வேட்பாளரை நிறுத்தினால் போட்டி அதிகரித்து தி.மு.க.வுக்கு சிக்கலை ஏற்படுத்தும். இத்தகைய விபரங்களைத்தான் அதிகாரிகளிடமும் கட்சியின் மூத்த அமைச்சர்களிடமும் விவாதித்திருக்கிறார் எடப்பாடி. அதற்காக தி.மு.க. மீது காங்கிரசுக்கு இருக்கும் அதிருப்தியை பயன்படுத்தலாமா? எனவும் ஆலோசித்துள்ள னர். அப்போது, "இது நல்ல யோசனைதான்... ஆனால், காங்கிரஸ் ஒத்துழைக்காத பட்சத்தில் இந்த ரிஸ்க்கை எடுக்கக்கூடாது' என சொல்லியுள்ளனர் சீனியர் அமைச்சர்களும் மூத்த நிர்வாகிகளும்'' ‘என விரிவாக பல விசயங்களை சுட்டிக்காட்டுகின்றனர். இது குறித்து தேர்தல் வழக்குகளில் அனுபவம் மிக்க தி.மு.க.வின் மூத்த வழக்கறிஞர்களிடம் நாம் விவாதித்தபோது, "மூன்று இடங்களை தி.மு.க. கைப்பற்றுவதில் எந்த சிக்கலும் இல்லை. காங்கிரசை சமாளிப்பது எப்படிங்கிறது தலைவர் ஸ்டாலினுக்குத் தெரியும். தற்போதைய சூழலில், தி.மு.க.வைப் புறக்கணித்து அ.தி.மு.க. வலையில் காங்கிரஸ் சிக்கினால் அதன் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறிதான். அதனால் ஆளும் கட்சி போடும் தில்லாலங்கடி திட்டமெல்லாம் செல்லுபடி ஆகாது. ஆக, ராஜ்யசபா தேர்தலில் 6 பேரும் போட்டியின்றி வெற்றி பெறுவர்'' என்கிறார்கள் அழுத்தமாக.