நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண் டாகப் பிரித்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி பொது மக்களும் வர்த்தகர்களும் போராடி ஓய்ந்து விட்டனர். ஆனால் நாகை மாவட்ட அ.தி. மு.க.விலோ, "கட்சி ரீதியாக மாவட்டத்தை இரண்டாகப் பிரித்தே ஆகவேண்டும்' என்ற சலசலப்பு ஆரம்பமாகியுள்ளது. இதற்கு முழுமுதற் காரணம் அமைச்சர் ஓ.எஸ். மணியன்தான்.
அந்த மாவட்டத்தின் அ.தி.மு.க. சீனியர் ஒருவர் நம்மிடம் பேச ஆரம்பித்தார். சசிகலா குடும்பத்தின் விசுவாசியாக இருந்த ஓ.எஸ்.மணியன்தான் இந்த மாவட்டத்தின் மா.செ.வாக இருந்தார். ஒரு கட்டத்தில் இவரின் நடவடிக்கைகளால் கடுப்பான ஜெயலலிதா, மா.செ.பதவியிலிருந்து மணியனை நீக்கிவிட்டு, அமைச்சர் ஜெயபாலை மா.செ.வாக்கினார். கட்சிக்காரர்களும் பொதுமக்களும் அமைச்சர் ஜெயபாலை எளிதாக சந்திக்கலாம். அவரும் கட்சிக்காரர்களுடன் மிக எளிமையாக பழகி, அரவணைத்துச் செல்வார். அப்போதே மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு சென்றார் ஜெயபால்.
சசிகலா குடும்பத்தின் கிருபையால், திடீரென ஜெயபாலுக்கு கல்தா கொடுத்து விட்டு, மீண்டும் ஓ.எஸ்.மணியனை மா.செ.வாக்கினார் ஜெயலலிதா. அன்றிலிருந்து இன்று வரை மணியனின் ராஜ்யம்தான். இப்போதுகூட மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி, ஊரின் முக்கியப் பிரமுகர்கள் சந்திக்கச் சென்றபோது, அவர்களை அவமானப்படுத்தி அனுப்பிவிட்டார் மணியன். இவரின் தர்பாரை பொறுக்க முடியாமல்தான் பூம்புகார் எம்.எல்.ஏ. பவுன்ராஜ், முதல்வர் எடப்பாடியை சமீபத்தில் சந்தித்தார்.
அப்போது, நான் இரண்டு முறை எம்.எல்.ஏ.வா இருந்திருக்கேன். ஆனா அவரோ இப்பதான் எம்.எல்.ஏ.வானாரு. அவருக்கு அமைச்சர் பதவியும் மா.செ.பதவியும் கொடுத்திருக்கீங்க. அதனால என்னை அமைச்சராக்குங்க, இல்லேன்னா மா.செ.பதவி கொடுங்க. அப்படி கொடுக்கலேன்னா, மாவட்டத்தைப் பிரிக்கப் போராடும் மக்களுடன் நானும், எனது ஆட்களும் களத்தில் இறங்குவோம்''’என ஓப்பனாகவே பேசிவிட்டுத் திரும்பியிருக்கிறார்''’என்றார். "இதெல்லாம் உண்மையா?' என எம்.எல்.ஏ. பவுன்ராஜின் ஆதரவாளர் ஒருவரிடம் கேட்டோம். உண்மைதாங்க. இந்த மாவட்டத்திலேயே அதிக வருமானம் தரக்கூடிய கோட்டம் மயிலாடுதுறைதான். அதை முழுமையா அறுவடை செய்பவர் மணியன்தான். கொள்ளிடம் பெட் டேமுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைக்கூட, அவரது இறால் குட்டையை வளப்படுத்த வேதாரண்யம் கள்ளி மேட்டுக்கு கொண்டு போய்ட்டார். அதேபோல் கொள்ளிடம் ஆற்று மணல் சம்பாத்தியம் மொத்தத்தையும் மணியனே சுருட்றாரு.
தேர்தலப்ப மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுப்பேன்னு பவுன்ராஜ் கொடுத்த வாக்குறுதிய மக்கள் இப்ப அவர்ட்ட கேக்குறாங்க. இதைத்தான் கட்சியின் செயற்குழுவில் இ.பி.எஸ்.சிடமும் ஓ.பி.எஸ்.சிடமும் கேட்டார் பவுன்ராஜ். இதனால் கடுப்பான மணியன், கூட்டத்திலிருந்து பாதியிலேயே கிளம்பிவிட்டார். அரசாங்க ரீதியாக மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்கிறார்களோ, இல்லையோ... கட்சி ரீதியாக இரண்டாகப் பிரித்தால் சரிப்பட்டு வரும், அதற்கான வேலைகளும் நடக்கிறது''’என்றார். கட்சிக்குள் மாவட்ட பிரிப்பு புகைச்சல் இருப்பது உண்மையா என தெரிந்துகொள்ள அமைச்சர் ஓ.எஸ்.மணியனை பலமுறை தொடர்புகொண்டும் பலனில்லை. அமைச்சருக்கு உதவியாக இருக்கும் ஒருவர் நம்மைத் தொடர்புகொண்டு, “எம்.எல்.ஏ. பவுன்ராஜ், மா.செ. பதவியோ, அமைச்சர் பதவியோ கேட்டாரான்னு தெரியாது. ஆனா அன்னைக்கு கூட்டத்திலிருந்து அமைச்சர் பாதியிலேயே வந்ததுக்கு காரணம், அவரின் உறவினர் ஒருவர் இறந்து விட்டதால்தான்''’என்றார்.
இரண்டு தரப்புக்கும் பொதுவான ர.ர. ஒருவர், தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., வி.சி.க., பா.ம.க., பா.ஜ.க. கட்சிகளில் நாகை வடக்கு, தெற்கு என இரண்டு மாவட்டங்கள் இருப்பது போல் எங்க கட்சியிலும் இருந்தா என்ன தப்பு?''’என்கிறார்.