யார் அ.தி.மு.க.வுக்கு தலைமை என நடக்கும் யுத்தம் குறித்து, அறந்தாங்கி மாஜி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதியிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
ஓ.பி.எஸ். - எடப்பாடி பழனிசாமி இடையே சமாதான முயற்சி எடுத்தீர்களா?
மூன்று சதவீதத்தில்தான் நாம் ஆட்சியை இழந்து எதிர்க்கட்சியாக இருக்கிறோம். எனவே சசிகலா, தினகரன், ஓ.பி.எஸ். அனைவரும் ஒன்றாக இணையவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் பேசினேன். அதனை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. தென்தமிழகத்தை ஈ.பி.எஸ். திட்டமிட்டே புறக்கணித்தார். வன்னியருக்காக 10.5% இட ஒதுக்கீட்டை கடைசி நேரத்தில் கொண்டுவந்து சட்டமாக்கினார். இதனால் அ.தி.மு.க. தென் மாவட்டத்தில் வெற்றி வாய்ப்பை இழந்து, ஆட்சியையும் இழந்தது. எடப்பாடி வன்னியர்களுக்கும் துரோகம்தான் செய்தார். அந்த சட்டம் முறையாகக் கொண்டுவரப்படாததால் நீதிமன்றம் தூக்கி வீசிவிட்டது.
ஒற்றைத் தலைமை தான் சிறந்தது என்கிறார்களே?
ஒற்றைத் தலைமையோ, ரெட்டைத் தலைமையோ, இப்படியே போனால் கட்சி மொட்டைத் தலையாகிவிடும்.
ஓ.பி.எஸ்.ஸுக்கு பதவிதான் முக்கியமா?
ஓ.பி.எஸ்ஸுக்கு பதவி முக்கியமில்லை. ஜெயலலிதா இருக்கும்போது ஓ.பி.எஸ்.ஸுக்கு 2 முறை முதல்வர் என்ற சட்டையைக் கொடுத்தார். மூன்றாவது முறையாக ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்தபோது, சசிகலா ஒருமுறை ஓ.பி.எஸ்.ஸுக்கு முதல்வர் என்ற சட்டையைக் கொடுத்தார். பின்னர் சசிகலா திரும்பக்கேட்டபோது மறுக்காமல் பதவி விலகினார். பின்னர் அந்த சட்டை எடப்பாடியாருக்கு வழங்கப்பட்டது. அதன்பிறகு எதிர்க்கட்சித் தலைவர் என்ற பனியனையும் ஓ.பி.எஸ்.ஸிடம் கழட்டிக் கேட்டார்கள். கழட்டிக் கொடுத்துவிட்டார். இப்போது ஒருங்கிணைப்பாளர் என்கிற வேட்டியையும் அவிழ்க்கப் பார்க்கிறார்கள். மானமுள்ள தமிழன் எவனும் இதை ஏற்றுக்கொள்ளமாட்டான்.
கட்சியை யார் உடைக்க நினைப்பது?
எடப்பாடியாரின் சர்வாதிகாரப் போக்கும், அதிகார பலமும், அவருடன் இருப்பவர்களும் தான் இந்த கட்சியைத் தவறான பாதைக்கு இழுத்துச் செல்கிறார்கள். பா.ஜ.க.வைப் பொறுத்தவரை எங்களின் தோழமைக் கட்சி. எங்கள் கட்சியை வலுப்படுத்தவும், ஒற்றுமைப்படுத்தவும் யோசனை சொல்வார்களே தவிர உடைக்க நினைக்கமாட்டார்கள்.
ஓ.பி.எஸ்.ஸுக்கு பதவி கிடைத்தால், கூடவரும் தொண்டர்களைக் கவனிக்கமாட்டார் என்ற பேச்சு உள்ளதே?
உண்மை இருக்கத்தான் செய்கிறது. எந்தப் பதவியும் வேண்டாம் என்றவரிடம், கட்சிப் பதவி உங்களுக்கு, ஆட்சிக்கு எடப்பாடி என்று சொன்னார்கள். ஆட்சி அதிகாரத்துக்கு வந்தபிறகு ஓ.பி.எஸ்.ஸுடன் போனவர்களைப் பழிவாங்கினார்கள். நான், புதுக்கோட்டை ராஜசேகர் உட்பட பலர் பழிவாங்கப்பட்டோம். ராஜசேகருக்கு கொடுத்த பதவியை ஒரே நாளில் பறித்தார்கள். பறிக்கப்பட்ட பதவியை அவருக்கு ஓ.பி.எஸ். பெற்றுத் தரவில்லை.
உட்கட்சிப் பிரச்சினையை ஏன் வீதிக்குக் கொண்டுவர வேண்டும்?
ஓ.பி.எஸ் ஒருங்கிணைப்பாளராகத் தொடர வேண்டும், அவரை நீக்குவது தவறு என்ற கருத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்லவேண்டும். அதேபோல, பொதுக்குழுவில் ஓ.பி.எஸ்.ஸை அசிங்கப்படுத்திய சம்பவங்களும் பொதுமக்களைச் சென்றடைய வேண்டும். மக்களிடம் நியாயம் கேட்கத்தான் வீதிக்கு வந்திருக்கிறோம்.
11-ஆம் தேதி பொதுக்குழு கூடுமா?
சட்டப்படி பொதுக்குழுவைக் கூட்டக்கூடாது. கூட்டினாலும் அது செல்லுபடியாகாது. தேர்தல் கமிஷன் கணக்கில் இப்போதுவரை கழக ஒருங் கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.தான். ஆனால் பொதுக்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் ஓ.பி.எஸ்.ஸை நீக்கிவிட்டதாகச் சொல்வது அபத்தமானது. நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.
தி.மு.க.வின் ஓராண்டுச் சாதனை என்ன?
நிறைய சாதனைகள் உண்டு. பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பு தமிழ்நாட்டுக்கே கிடைத்த வெற்றி. விவசாயத்திற்கான தனி பட்ஜெட் என்பதும் சாதனைதான். அதேபோல, இறையன்பு, சைலேந்திரபாபு போன்ற அதிகாரிகளை நியமித்து நேர்மையான ஆட்சியாளராகக் காண்பித்திருக்கிறார். ஆனால் தி.மு.க. அரசு பதவியேற்றபோது, கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை, கொலைச் சம்பவங்களுக்கு நீதி விசாரணை நடத்தப்பட்டு உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். ஜெயலலிதா மர்ம மரணம் குறித்தும் விசாரிக்கப்படும் என்றார். அவற்றைச் செய்துகாட்ட வேண்டும்.