''சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் எம்எல்ஏக்கள் ஒன்று கூடி அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பார்கள். ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். தலைமையில் அதிமுக நடைபெறும்; அதில் மாற்று கருத்தே இல்லை'' என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு நேற்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், ''இலக்கை நிர்ணயித்துவிட்டு களத்தை சந்திப்போம்! எடப்பாடியாரை முன்னிருத்தி தளம் அமைப்போம்! களம் கான்போம்! வெற்றி கொள்வோம்! 2021-ம் நமதே!'' என இன்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர்கள் இருவரும் இருவேறு கருத்துகளை தெரிவித்துள்ள நிலையில் நம்மிடம் பேசிய பெங்களூரு புகழேந்தி,
''தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்பதை உயர்ந்த உள்ளத்துடன் ஏற்றுக்கொண்டுதான் ஓ.பன்னீர்செல்வம் துணை முதலமைச்சரானார். அதுதான் நடைமுறையில் உள்ளது. வரும் காலத்திலும் அதிமுகவில் முதல்வராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வத்தையும் முன்னுறுத்திதான் தேர்தலை சந்திப்பார்கள். கட்சியில் உயர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் வகிக்கிறார். சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கிறார்.
என்னைப் பொறுத்தவரையில் என்னுடைய தனிப்பட்ட கருத்தாக, அமைச்சர்கள் மாறி மாறி இப்படி கருத்துகளை சொல்வதன் மூலம் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படுகிறது என்பதை இவர்கள் உணர வேண்டும். அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும், அமைச்சர்களும் சேர்ந்துதான் இந்த இரட்டை தலைமையை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இதுபற்றி கருத்துகளை சொல்லி குழப்பதை ஏற்படுத்த வேண்டாம். மாற்று கருத்துகளை தெரிவிக்க வேண்டாம். இல்லையென்றால் தலைமையிடம் கலந்து ஆலோசித்து கருத்து தெரிவித்தால் நன்றாக இருக்கும் என்பது எனது பணிவான வேண்டுகோள்'' என்றார்.