Skip to main content

எம்.ஜி.ஆர் மேல் எங்க அப்பா போட்ட கேஸ்!  ரமேஷ் கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #1

 

ramesh kanna young


வணக்கம்! உங்க எல்லாருக்கும் என்னை நல்லா தெரியும், 90ஸ் கிட்ஸ்க்கு ரொம்ப நல்லா தெரியும். ஆமா, 1998ல ஆரம்பிச்சு ஒரு பதினஞ்சு வருஷமா எக்கச்சக்க படங்கள் நடிச்சிருக்கேன். பெரும்பாலும் சூப்பர் ஹிட் படங்கள். ஒரு நாளைக்கு ரெண்டு மூணு படங்களோட ஷூட்டிங்குக்குப் போக வேண்டிய அளவுக்கு பிஸியா இருந்துருக்கேன். இதெல்லாம் உங்களுக்குத் தெரிஞ்ச காலகட்டம். ஆனா, அதுக்கு முன்னாடியும் சரி, அதுக்கு அப்புறமும் சரி, நான் சினிமாவுலதான் இருந்தேன், இருக்கேன். சொல்லப் போனா நான் பிறந்ததுல இருந்தே சினிமாலதான் இருக்கேன். எங்க அம்மா வயிற்றில் நான் இருந்தப்போவே எங்க அம்மா சினிமா நினைவாதான் இருந்தாங்க. சினிமா, எனக்குள்ள கலந்து இருக்கு.


இந்த நீண்ட பயணத்துல எத்தனையோ பேரை சந்திச்சிருக்கேன், எத்தனையோ பேரிடம் பழகியிருக்கேன். அவர்கள் எல்லோரும் உங்களுக்கும் தெரிஞ்சவங்கதான். உங்களுக்கு நல்லா தெரிஞ்ச அவர்களுக்கும், உங்களுக்குத் தெரிஞ்ச எனக்குமிடையே இதுவரை பெரிதாக வெளியே தெரியாத எத்தனையோ விஷயங்கள் நடந்துருக்கு. ஒவ்வொருவரும் எனக்கு ஒவ்வொரு வகையில் முக்கியமானவர்கள், உதவியவர்கள், எனக்கு மகிழ்ச்சியையும், ஏன் சோகத்தையும் கூட தந்தவர்கள். திரையில் உங்களை மகிழ்வித்த நான் (மகிழ்வித்தேன்னு நம்புறேன்), என் நினைவுகளை எந்தத் திரையுமில்லாமல் உங்களிடம் பகிர்ந்துகொள்வதுதான் இந்த 'திரையிடாத நினைவுகள்'. எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், இன்னும் பலர்... இவர்களுடனெல்லாம் பழகிய என் மகிழ்ச்சியை இங்க உங்களோட பகிர்ந்துகொள்கிறேன். பயப்படாதீங்க, இது என் வாழ்க்கை வரலாறு இல்ல. நான் அந்த அளவுக்குப் பெரிய ஆள் இல்ல. எனக்கு பழக வாய்ப்பு கிடைச்ச, ஏதோ வகையில் சம்மந்தப்பட்ட  ஒவ்வொருத்தரைப் பற்றி ஒவ்வொரு பகுதியிலும் உங்களிடம் சொல்லுறேன். முதலில் என்னைப் பற்றி, என் பின்னணி பற்றி கொஞ்சம் சொல்லணும்.

'மன்னாதி மன்னன்' படத்துல 'கருவினில் வளரும் குழந்தையின் மனதில் தைரியம் வளர்ப்பாள் தமிழ் அன்னை, பெற்றவள் மானம் காத்திட எழுவான், அவன் பிள்ளை' என்று கவியரசு கண்ணதாசன் எழுதி எம்.ஜி.ஆர் பாடுவதாய் வரும் வரிகளைப் போல, தாய் தன் வயிற்றில் இருக்கும் பிள்ளை குறித்து என்னவெல்லாம் நினைக்கிறாளோ, ஆசைப்படுகிறாளோ அப்படித்தான் அந்தப் பிள்ளை வளரும். இது உலகம் முழுவதும் நாம் பார்க்கக் கூடிய உண்மை. அப்படித்தான் நானும். எங்க அம்மாவோட சொந்த ஊர் கேரளால எர்ணாகுளம். அவுங்களுக்கு பதிமூணு வயசிருக்கும்போதே சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னைக்கு ஓடி வந்துட்டாங்க. அவுங்களும் அவுங்க அக்கா தங்கச்சியோட ஜெமினி கம்பெனில டான்ஸரா சேர்ந்து சினிமாவுல இருந்தாங்க. 'சந்திரலேகா' படத்துல வரும் புகழ் பெற்ற, பிரம்மாண்டமான 'ட்ரம் டான்ஸ்'ல எங்க அம்மாவும் இருந்தாங்க. 
 

 

drum dance

 

சந்திரலேகா ட்ரம் டான்ஸ் - ஆடுகிறவர்களில் எங்க அம்மாவும் ஒன்னு, யாருன்னு கண்டுபிடிங்க பாப்போம்

 

'பக்த மீரா' படத்துல எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அம்மா கூட நடிச்சாங்க, அவுங்களோட பழகி அவுங்களுக்கு ரொம்ப நட்பா இருந்தாங்க. அதுபோல ஜெமினிகணேசனின் முதல் மனைவியான பாப்ஜி (எ) புஷ்பவள்ளி அப்போ பெரிய நடிகை. அவுங்க நடிச்ச ஒரு படத்துல எங்க அண்ணன் குழந்தை நட்சத்திரமா நடிச்சார். குழந்தை அழாம பாத்துக்கணும்னு எங்க அம்மாவும் கூட போனாங்க. அவுங்களும் சின்ன வேடத்தில் நடிச்சாங்க. இப்படி, சினிமாவுல நடிக்கிற ஆசை அவுங்களுக்கு இருந்துக்கிட்டே இருந்தது. ஆனா, அவுங்களுக்கு பெரிய வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. அப்போதுதான் நான் கருவாகியிருந்தேன். அந்த ஆசை எனக்குள்ளும் அப்போதே உருவாகியது போல.

எங்க அப்பா நாராயணன், பாம்பே ஜெனரல் மோட்டார்ஸ்ல ஜெனரல் மேனேஜரா இருந்தாரு. வி.என்.ஜானகியுடைய அம்மாவான நாராயணி அம்மா, எங்க அப்பாவுக்கு சகோதரி. அவுங்க, என் அப்பாவைக் கூப்பிட்டு, "டேய் நாராயணா, இவ சினிமாவுல நடிக்க ரொம்ப ஆசைப்படுறா. நீ இவளுக்கு ஏதாவது பண்ணு, இவளைக் கூட்டிட்டுப் போ"னு சொல்லவும் எங்க அப்பா, பாம்பேயில தன் வேலையை விட்டுட்டு சென்னையில் வி.என். ஜானகி கூட இருந்து, சினிமா வாய்ப்புக்காக பல பேரைப் பார்த்து, ஒவ்வொரு படத்தின் போதும் கூட இருந்து உதவியா இருந்தாரு. ஜானகிக்கு முதல் திருமணமாகி, அது இருவருக்கும் ஒத்து வராம பிரிஞ்சது இன்னொரு கதை. அப்போ புகழ் பெற்ற இசையமைப்பாளரா இருந்த பாபநாசம் சிவன், எங்க அப்பாவுக்கு உறவு. வி.என். ஜானகிக்கும் அவர் பெரியப்பா முறை வேணும்.

 

ramesh kanna family

 

         தொப்பி போட்டுக்கிட்டு தாத்தா மடியில் உட்கார்ந்திருப்பது நான், பக்கத்துல இருக்குறது எங்க அம்மா ஷ்யாமளா
 

எங்க அப்பா அவுங்க கூட இருந்தப்போ 'ராஜமுக்தி' பட வாய்ப்பு வந்தது. அந்த வாய்ப்பு பிரச்சனையையும் கூட்டிகிட்டு வருதுன்னு இவங்களுக்குத் தெரியாது. தியாகராஜ பாகவதர் நடிச்ச அந்தப் படத்துல வி.என். ஜானகிதான் ஹீரோயின். எம்.ஜி.ஆர் அதுல ஒரு வேடத்துல நடிச்சாரு. அப்போ அவரு சிறிய கதாபாத்திரங்கள்தான் பண்ணிக்கிட்டு இருந்தார். இந்தப் பட ஷூட்டிங்கின் போது, எம்.ஜி.ஆர்க்கும்  வி.என். ஜானகிக்கும் ஒரு புரிதல் ஏற்பட்டு, காதலானது. ஆனால், எம்.ஜி.ஆரோ ஏற்கனவே திருமணமானவர். இவங்களோட காதல் விஷயம் தெரிஞ்சு எங்க அப்பா கோபமாகிட்டாரு. ஜானகி வீட்டிலும் இது பிரச்சனை ஆச்சு. எம்.ஜி.ஆர் அப்போ சின்ன நடிகர், ஏற்கனவே திருமணம் ஆனவர். ஜானகி,  பிரபலமாகியிருந்தாங்க. அவரின் புகழுக்கும் பணத்துக்கும்தான் எம்.ஜி.ஆர் ஆசைப்பட்டாரென்று எங்க அப்பா அப்போ நினைத்தார்.


அவர்களிருவரும் திருமணமும் செஞ்சுக்கிட்டாங்க. ஆனா, அது சட்டப்பூர்வமாக செல்லாது. எங்க அப்பா அவங்க திருமணத்தை எதிர்த்து  கோர்ட்ல கேஸ் போட்டாரு, கேசும் ஜெயிச்சது. ஆனாலும் அவர்கள் பிரியல. அவர்கள் திருமணமும் ரொம்ப நாள் கழிச்சுத்தான் சட்டபூர்வமாச்சு. அப்புறம்தான் எங்க அப்பாக்கு அவுங்க காதல் புரிஞ்சது. ஆனா, அப்பாவுக்கும் ஜானகிக்குமான உறவு தூரமாகிடுச்சு. பின்னாடி ரொம்ப நாள் கழிச்சு, எம்.ஜி.ஆர் அரசியலில் தீவிரமாக இறங்கி, முதல்வரான பின், அப்போ அந்த கேஸ்ல எங்கப்பாவே கோர்ட்ல வாதாடியதை நினைவு வைத்து சொல்லியிருக்கார், "நாராயணனை சட்ட அமைச்சர் ஆகிடலாமா? அவருக்கு எல்லா விவரமும் தெரியுது" என்று. ஆனால், வி.என்.ஜானகி அதுக்கு ஒத்துக்கலை. இப்படி, உறவு விலகியிருந்தாலும் பின்னாடி, என் சித்தி பொண்ணு, அதாவது என் தங்கையை வி.என்.ஜானகி மகனுக்கு திருமணம் செய்து கொடுத்தோம். 'திருமலை'ல விஜய் சொன்ன மாதிரி வாழ்க்கை ஒரு வட்டம்தான், இல்ல?
 

 

mgr janaki surendran

 

              எங்க வீட்டில் இருக்கும் எம்.ஜி.ஆர் குடும்பப் படம் - எம்.ஜி.ஆர், வி.என்.ஜானகியுடன் அவரது மகன் சுரேந்திரன்

 

ஆனால், நான் இந்த உறவு விஷயங்களை சினிமாவுல யார்கிட்டயும் சொல்லிக்கிட்டது இல்லை. இப்போதான் பகிர்கிறேன். அதுவும் சத்யராஜ்க்கு தெரிஞ்சதுக்கு அப்புறம்தான். வி.என்.ஜானகியின் சகோதரர் பையன் தீபன் வீட்டு திருமணத்திற்கு போயிருந்தப்போ சத்யராஜும் வந்திருந்தார். அப்போ தீபன் சத்யராஜ்கிட்ட, "இவரு யார் தெரியுமா?"னு என்னைக் காட்டி கேக்குறாரு. சத்யராஜ் சிரிச்சுக்கிட்டே, "இவரைத் தெரியாதா, ரமேஷ் கண்ணா. நாங்க மகாநடிகன் படத்துல ஒண்ணா நடிச்சிருக்கோமே"னு சொல்றாரு. "உங்களுக்குத் தெரிஞ்ச ரமேஷ் கண்ணா வேற... எங்க குடும்பத்துக்கு ஒரே தாய்மாமன் இவருதான்"னு தீபன் சொல்ல, சத்யராஜ்க்கு ஒரே ஆச்சரியம். அவரு நடிகர் ராஜேஷ்கிட்ட சொல்ல, அப்புறம் அப்படியே சினிமால பலருக்கும் தெரிஞ்சுது.

ரஜினி சார்க்கு நான் எழுதுன ஒரு வசனம், பட்டிதொட்டியெல்லாம் ஹிட் ஆச்சு. ஆனா, அந்த வசனத்தை எழுதுனதுக்காக அவர் என்னை திட்டுனாரு. அடுத்து ஒரு படத்துல அதே மாதிரி ஒரு வசனம் சொன்னப்போ பேச மாட்டேன்னு சொல்லிட்டாரு. ஆனா, அந்த வசனத்தை அப்போ அவரு பேசியிருந்தா, இப்போ அவருக்கு நல்லா யூஸாகியிருக்கும். அந்த வசனம் எந்த வசனம் தெரியுமா? பில்ட்-அப் ரொம்ப ஓவரா இருக்கோ? அடுத்த பகுதியில அதை சொல்றேன்.
   

அடுத்த பகுதி...

நான் எழுதிய வசனத்தைப் பேச மறுத்த ரஜினி! திரையிடாத நினைவுகள் #2 

rajini ramesh ravi

 

 

 

 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்