சேலம் ஆவின் பால் பண்ணைக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டு மனைகளுக்கு பட்டா வழங்காமல் 44 ஆண்டுகளாக ஏமாற்றி வரும் நிர்வாகத்தைக் கண்டித்து, சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளனர்.
சேலத்தை அடுத்த சித்தனூரில், 1984ம் ஆண்டு முதல் ஆவின் பால் பண்ணை இயங்கி வருகிறது. இதற்காக சித்தனூர், ரொட்டிக்காரன் வட்டம், தளவாய்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 44 விவசாயிகளிடம் இருந்து 1979ம் ஆண்டு, 54 ஏக்கர் நிலத்தை ஆவின் நிர்வாகம் கையகப்படுத்தியது.
கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் வீடு கட்டி வசித்து வந்த 25 குடும்பத்தினருக்கு மட்டும், பால் பண்ணைக்கு ஒதுக்குப்புறமாக தலா மூன்று சென்ட் பரப்பளவுள்ள 38 வீட்டு மனைகளை ஆவின் நிர்வாகம் ஒதுக்கியது. அந்த நிலத்தில் விவசாயிகள் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
நிலம் வழங்கியவர்களின் குடும்பத்தினருக்கு கல்வித் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு, வாழ்வாதாரத்திற்கு வீட்டு மனை ஒதுக்கீடு, மனைக்கான கிரயப் பத்திரம் ஆகியவை வழங்கப்படும் என அப்போது ஆவின் நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. ஆனால் 44 ஆண்டுகள் ஆகியும் வீட்டு மனைகளுக்கு கிரயம் செய்து தராமல் ஆவின் நிர்வாகம், ஏழை விவசாயிகளை வயிற்றில் அடித்து விட்டதாக புலம்புகின்றனர்.
நிலம் வழங்கிய விவசாயிகள் தமிழக முதல்வர், பால்வளத்துறை ஆணையர், செயலாளர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை அனைவரின் அலுவலக கதவுகளையும் தட்டிப்பார்த்தும், தீர்வு கிடைக்கவில்லை என்கிறார்கள். இது தொடர்பாக, சேலம் ஆவின் பால் பண்ணைக்கு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சிவராமன் நக்கீரனிடம் பேசினார்.
அவர் தெரிவித்ததாவது; ''சேலம் ஆவின் பால் பண்ணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு, அன்றைய அரசு வழிகாட்டி மதிப்பின்படி உரிய விலையைக் கொடுத்து நிர்வாகம் கிரயம் செய்து கொண்டது. அப்போது ஏற்பட்ட உடன்படிக்கையின்படி, ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலத்தில் குடியிருந்த 25 குடும்பத்தினருக்கு 38 காலி மனைகளை நிர்வாகம் ஒதுக்கியது.
ஆனால், அந்த வீட்டு மனைகளுக்கு இன்று வரை பயனாளிகள் பெயரில் தனி நபர் கிரயம் செய்து கொடுக்காமல் ஆவின் நிறுவனம் தந்திரமாக இழுத்தடித்து வருகிறது. ஆவின் பொது மேலாளரைக் கேட்டால், பால்வளத்துறை ஆணையர்தான் இப்பிரச்சனையில் முடிவெடுக்க முடியும் என்கிறார். ஆணையர் அலுவலகத்தில் கேட்டால், வருவாய்த்துறையைக் கையைக் காட்டுகின்றனர். கடந்த 2022ம் ஆண்டு, ஆவின் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தியபோது, அப்போது பால் வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் நேரடியாக எங்களிடம் பேசினார். 30 நாள்களில் கிரய பத்திரம் வழங்கப்படும் என்றார். அதுவும் பொய்யாகி விட்டது.
வீட்டு மனைகளுக்கு தனி நபர் கிரயம் செய்து கொடுக்கப்படாததால் பட்டா பெற முடியவில்லை. பட்டா இல்லாததால் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் மானியம், வங்கிக் கடன் உள்ளிட்ட பயன்களைப் பெற முடியவில்லை. நிலத்தையும் விற்க முடியவில்லை. ஆவின் அதிகாரிகள் திடீரென்று, 'மேற்கூரை உங்களுக்கு; அடிநிலம் எங்களுக்கு,' எனக் கூறுகின்றனர்.
எங்கள் பிரச்சனையை ஆரம்பம் முதல் நக்கீரன் பத்திரிகை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. நக்கீரனில் செய்தி வந்த பிறகுதான் எங்கள் பிரச்சனை மீது அரசின் கவனம் குவிந்தது. இத்தனை நாளாக எங்களுக்கும் ஆவினுக்கும் மட்டுமே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்நிலையில், நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு வேறு இடத்தில் 2 ஏக்கர் நிலத்தை ஒதுக்கித் தரும்படி வருவாய்த்துறையிடம் ஆவின் நிர்வாகம் கேட்கிறது.
ஆனால் வருவாய்த்துறையோ, வணிக ரீதியான பயன்பாட்டிற்காக தனியார் கிரயம் பெற்ற நிலத்திற்கு மாற்று இடம் ஒதுக்க முடியாது என கைவிரித்துவிட்டது. இதில், வருவாய்த்துறையை சம்பந்தப்படுத்தவே தேவை இல்லை என்பதுதான் எங்கள் தரப்பு வாதம். நிலம் வழங்கிய அப்பாவி விவசாயிகளை ஏமாற்றுவதற்காக ஆவின் நிர்வாகம் இப்படியான தந்திரங்களை கையாள்கிறது. எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்'' என்கிறார் சிவராமன்.
இது ஒருபுறம் இருக்க, 1987ம் ஆண்டு மே 5ம் தேதி நடந்த ஆவின் நிர்வாகக்குழுக் கூட்டத்தில், 'பால் பண்ணைக்கு நிலம் வழங்கியவர்களுக்கு அளித்த வீட்டு மனைகளுக்கு பால்வளத்துறை ஆணையரின் அனுமதி பெற்று தனிநபர் கிரயம் செய்து கொடுக்கலாம்,' என தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது நமது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
அதேநேரம், 1997ம் ஆண்டு செப். 11ம் தேதி, ஐஏஎஸ் அதிகாரி முத்துசாமி தலைமையில் நடந்த நிர்வாகக்குழு கூட்டத்தில், 'நிலம் வழங்கிய விவசாயிகள் அல்லது அவர்களின் வாரிசுகளுக்கு கிரய பத்திரம் வழங்க ஆவின் நிர்வாக இயக்குநருக்கே அதிகாரம் உள்ளது,' என பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதகமாக இவ்வளவு தரவுகள் இருந்தும் சேலம் ஆவின் அதிகாரிகளும், சென்னை பால்வளத்துறை அதிகாரிகளும் மாறி மாறி கடிதம் அனுப்பிக் கொண்டிருக்கின்றனர்.
ஆவினுக்கு நிலம் வழங்கியவர்களுள் ஒருவரான சரோஜா கூறுகையில், ''பால் பண்ணைக்கு நிலம் கொடுத்தோம். அதற்காக எங்களுக்கு கொடுத்த வீட்டு மனைக்கு தனி நபர் கிரயமோ பட்டாவோ ஆவின் தரவில்லை. வீட்டுக்கு பட்டா இல்லாததால் எங்களை புறம்போக்குனு சொல்றாங்க. சொந்தமாக வீடு இல்லாததால் மகன், மகளுக்கு திருமணம் கூட செய்து வைக்க முடியல.
எங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டு மனையில் 10 லட்ச ரூபாய் கடனை உடனை வாங்கி இரண்டு வருஷத்துக்கு முன்பு வீடு கட்டிட்டோம். கரண்டு ஆபீசுல போய் கரண்டு கேட்டோம். அவங்களோ ஆவின் பால் பண்ணையில் போயி தடையில்லா சான்று வாங்கிட்டு வாங்கனு சொல்லிட்டாங்க. மறுபடியும் அவங்க காலில் போயி விழணுமான்னு போகவே இல்ல. ரெண்டு வருஷமாக கரண்டு இல்லாம மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்துலதான் இருக்கோம்'' என்றார்.
விவசாயிகள் அலங்காரம்மாள், மயில்வேல் கவுண்டர் ஆகியோர் கூறுகையில், ''44 வருஷத்துக்கு முன்னாடி போலீசு வண்டிய கூட்டிக்கிட்டு வந்து ஆறு காசுக்கும் மூணு காசுக்கும் எங்க நிலத்தை எல்லாம் பால் பண்ணைக்கு எடுத்துக்கிட்டாங்க. தண்ணீ பாயற காட்டுக்கு 6000 ரூபாயும், தண்ணீ பாயாத காட்டுக்கு ஏக்கருக்கு 5000 ரூபாயும் கொடுத்தாங்க.
எங்களுக்கு பால் பண்ணை நிர்வாகம் இலவச வீட்டு மனை கொடுத்தாங்க. அந்த நிலத்தை எங்கள் பெயரில் கிரயம் செய்து, பட்டா கொடுக்கும்படி யார் யார் காலிலோ விழுந்துட்டோம். இதுவரை கிடைக்கல. எங்களுக்கு இப்பவே 85 வயசாச்சுங்க. சாகும்போது நாங்க புறம்போக்கா சாகக்கூடாது. எங்கள் நிலத்துக்கு ஆவின் நிர்வாகம் கிரய பத்திரம் கொடுக்கணும்'' என கண் கலங்கச் சொன்னார்கள்.
சேலம் ஆவின் நிறுவன பொது மேலாளர் (பொறுப்பு) சண்முகத்திடம் கேட்டபோது, ''நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு ஆவின் ஒதுக்கீடு செய்த நிலத்திற்கு தனி நபர் கிரயம் வழங்குவது தொடர்பான கோப்புகள் பரிசீலனையில் உள்ளது. இது தொடர்பாக பால்வளத்துறை ஆணையர், ஆவின் நிர்வாக இயக்குநர் ஆகியோர்தான் முடிவெடுக்க முடியும். எங்கள் அளவில் எந்த முடிவும் எடுக்க இயலாது'' எனத் தெரிவித்தர்.
இதுகுறித்து தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜிடம் கேட்டபோது, ''சேலம் ஆவின் நிறுவனத்துக்கு நிலம் கொடுத்தவர்கள் தொடர்பான பிரச்சனை குறித்து கவனத்துக்கு வந்தது. அது தொடர்பான கோப்புகளை விரைவில் ஆய்வு செய்து நல்ல முடிவெடுக்கப்படும்'' என நம்பிக்கையூட்டும் பதிலைச் சொன்னார்.