நடிகை சித்ராவின் தற்கொலை, இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் (‘எம்.எஸ்.தோனி’ படத்தில் நடித்தவர்) வழக்கை ஒத்திருக்கிறது என்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள். கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி, சுஷாந்த் சிங் மும்பை பாந்திரா பகுதியிலுள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். முதலில் இந்த வழக்கை விசாரித்த மும்பை போலீஸ், சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டார் என வழக்கை முடித்துக்கொண்டது.
ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதைப் பொருள் தடுப்பு வாரியம் (நேஷனல் நார்கோட்டிக்ஸ் கண்ட்ரோல் பீரோ), சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்ரபர்த்தி, அவரது சகோதரர் சோவிக் மற்றும் மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்தது. செப்டம்பர் மாதம் ரியா சக்ரவர்த்தி, சோவிக் மற்றும் சுஷாந்த் சிங்கின் வீட்டு வேலைக்காரர் ஆகியோரை போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது. இவர்களுடன் சேர்ந்து 20 பேர் கைது செய்யப்பட்டார்கள். இந்த 20 பேரும் இந்திய போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் சுஷாந்த் சிங்கிற்கு கஞ்சா கொடுத்ததாக கைது செய்யப்பட்டனர்.
அதன்பிறகு மும்பை உயர்நீதிமன்றம், சுஷாந்த் சிங் கஞ்சா உபயோகிக்கும் பழக்கம் கொண்டவராக இருந்தாலும், அதற்கு ரியா சக்ரபர்த்தி எந்த வகையிலும் உதவுபவராக இருக்கவில்லை. ரியா சக்ரபர்த்திக்கும், போதைப் பொருட்களை சுஷாந்த் சிங்கிற்கு கொடுக்கும் போதைப் பொருள் கும்பலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனக் கூறி ரியா சக்ரபர்த்தியை அக்டோபர் மாதம் ஜாமீனில் வெளியே விட்டது.
சுஷாந்த் சிங்கை போலவே, சித்ராவும் போதை தரக்கூடிய கஞ்சாவை உபயோகிப்பவராக இருந்துள்ளார். இறந்த பிறகு அவரது ஹேண்ட் பேக்கைப் பரிசோதித்த போலீசார், அதில் 150 கிராம் கஞ்சா இருந்ததைக் கண்டு அதிர்ந்து போனார்கள். அந்த கஞ்சாவுடன் கஞ்சா லோட் செய்யப்பட்ட சிகரெட்டும் அவரது கைப்பையில் இருந்துள்ளது.
சித்ராவுக்கு மதுப்பழக்கம் உண்டு. அவரும் அவரது கணவர் ஹேமந்த்தும் ஒன்றாக மது குடிப்பார்கள் என ஹேமந்த்தின் தந்தை சென்னை மாநகர கமிஷனருக்கு எழுதிய புகாரில் தெரிவித்திருந்தார். மதுப்பழக்கம் உள்ள சித்ராவின் கஞ்சா பழக்கம், அவரது உறவினர்களுக்குத் தெரியுமா, சித்ராவுக்கு கஞ்சா சப்ளை செய்யும் நபர் யார் என்கிற கோணத்தில் போலீசார் விசாரித்த போது, சித்ராவின் உறவினர்கள் யாருக்கும் அவரது கஞ்சா பழக்கம் பற்றி தெரிந்திருக்கவில்லை.
பொதுவாக கஞ்சா, கொக்கைன், ஸ்டாம்ப் போன்ற போதைப் பொருட்கள் தமிழ் சினிமா வட்டாரத்தில் தாராளமாகப் புழங்குகிறது. அது சின்னத்திரை வட்டாரத்திலும் பரவியுள்ளது. நள்ளிரவு முழுவதும் விழித்திருந்து நடிக்கும் நடிகர், நடிகைகள் பலர் இந்தப் பழக்கத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்.
அடிக்கடி நடக்கும் நள்ளிரவு கொண்டாட்டங்களில் கலந்துகொள்வோர் பலரும் இந்த போதைப் பொருட்களை உபயோகிப்பார்கள். இவற்றை சப்ளை செய்வதற்கென்றே சுமார் 2,000 கல்லூரி மாணவர்கள் சென்னையில் இயங்குகிறார்கள். அவர்கள் ரகசிய நெட் வொர்க்குகளை வைத்திருக்கிறார்கள். சங்கேத வார்த்தைகளில் இயங்கும் அந்த நெட்வொர்க்கில், அறிமுகம் இல்லாதவர்கள் யாரும் நுழைந்து போதைப் பொருட்களை வாங்கிவிட முடியாது. சித்ராவுக்கு கஞ்சா கிடைத்திருக்கிறது என்றால், அது அவருக்கு மிக நெருக்கமான நண்பர்கள் மூலமாகத்தான் கிடைத்திருக்கக்கூடும் என்ற அடிப்படையில் போலீசார் அவரது நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்த நடித்த நடிகர் நடிகைகளை விசாரித்து வருகிறார்கள்.
சுஷாந்த் சிங் தற்கொலையில் அவரது காதலி ரியா சக்ரபர்த்தி, சுஷாந்த் சிங்கிற்கு கஞ்சா சப்ளை செய்தார் எனக் குற்றச்சாட்டு எழுந்தது. அதுபோல சித்ராவின் காதல் கணவரான ஹேமந்த், சித்ராவுக்கு கஞ்சா சப்ளை செய்தாரா? எந்த பின்னணியும், பிரபலமும் இல்லாத ஹேமந்த் எப்படி சித்ராவைக் கவர்ந்தார்? போதைப் பொருளை சப்ளை செய்வதன் மூலம் சித்ராவை நெருங்கினாரா? என்கிற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இதற்கிடையே தூக்கில் தொங்கிய சித்ராவின் உடலில் சாராயம், கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் இருந்ததா என அவரை போஸ்ட் மாட்டம் செய்த கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தடயவியல் துறை மருத்துவர்களிடம் கேட்டோம், “சித்ரா சாகும்போது போதைப் பொருட்களை உபயோகப்படுத்தினாரா என்பதைக் கண்டறிய அவரது உடல் பகுதிகளை எடுத்து, நச்சுயியல் (TOXICOLOGY) சோதனைக்கு அனுப்பியுள்ளோம். அது வந்த பிறகுதான் சித்ராவின் போதைப் பழக்கத்தை பற்றித் தெளிவாக சொல்ல முடியும்” என்றார்கள்.
"எங்களைப் பொறுத்தவரை சித்ரா தற்கொலை செய்து கொண்டார் என்கிற தகவல் வந்ததும், அவர் தூக்கிட்டு இறந்த அறையைச் சென்று பார்த்தோம். அவரது கழுத்துப் பகுதியை ஆராய்ந்த போது அவர் தூக்கிட்டு இறந்ததற்கான காயம் கழுத்தின் முன்பகுதியில் இல்லை. ஆனால் கழுத்தின் பின் பகுதியில் அந்த வடு தெளிவாகக் காணப்பட்டது. கழுத்தின் பகுதிகளை எடுத்து அவரது மரணத்திற்கு காரணம் என்ன என்று ஆராய்ந்தோம். தூக்கிட்டுக் கொண்டதால் ஏற்பட்ட மூச்சுத்திணறல்தான் அவரது மரணத்திற்கு காரணம் எனக் கண்டறிந்தோம். ஒருவர் தூக்கிட்டுக் கொள்வாரேயானால் அவரது மரணம் இரண்டு நிமிடத்தில் முடிந்துவிடும். போலீஸ் லாக்கப்பிற்குள் பனியன் துணியால் தூக்கிட்டு இறந்த பல நிகழ்வுகளை நாங்கள் பார்த்திருக்கிறோம்.
இந்த விஷயத்தில் நாங்கள் பொய் சொல்லமாட்டோம். ஏனென்றால் நாளை ஒருவர் நான்தான் கொன்றேன் என ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பாரேயானால், நாங்கள் தற்கொலை என சொன்ன விவரங்கள் அனைத்தும் பொய்யாகிவிடும். எனவே இறந்தவரின் உடலில் உள்ள காயங்கள், அவர் இறந்த சூழல் மற்றும் மருத்துவ ஆய்வுகள் மூலமாகவே அது நாங்கள் கொலையா? தற்கொலையா? என்ற முடிவுக்கு வருவோம்.
சித்ரா இறந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் எல்லாரும், அவரது முன்பக்க கழுத்தைப் பார்த்து தூக்கு போட்டுக்கொண்ட காயம் எதுவும் காணப்படவில்லை என்றார்கள். ஆனால் அவரது பின்பக்க கழுத்தில் அவர் தூக்கு மாட்டிக்கொண்ட வடு இருந்தது. அது போட்டோவில் தெரியவில்லை'' என்றார்கள் டாக்டர்கள்.
சித்ராவுக்கு நண்பர்கள் வட்டம் பெரிது. ஆண் - பெண் பேதமின்றி பழகியிருக்கிறார். வித்தியாசமான பழக்கங்களை உடையவராக இருந்திருக்கிறார். ஹேமந்த்தும் சித்ராவை சந்திப்பதற்கு முன்பே பல பெண்களைக் காதலித்திருந்திருக்கிறார். பல அரசியல் பிரபலங்களுடன் சித்ராவுக்கு தொடர்பு இருந்திருக்கிறது. சித்ராவின் மரணத்திற்கு முன்பு, வி.ஐ.பிக்கள் பயணிக்கும் விலை உயர்ந்த கார் ஒன்று சித்ரா தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்து சென்றிருக்கிறது.
ஹேமந்த்திற்கோ, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் சித்ராவுடன் நடித்த ஒரு நடிகருடன் சித்ராவுக்குக் காதல் என்கிற சந்தேகமும் இருந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து சித்ராவுக்கும், ஹேமந்த்திற்கும் நிறைய சண்டைகள் நடந்திருக்கின்றன. அதுமட்டுமல்ல சித்ராவிற்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கடன் இருந்திருக்கிறது. அத்துடன் கஞ்சா, மது, சிகரெட் போன்ற போதைப் பழக்கங்களும் சித்ராவிற்கு உண்டு என கண்டறிந்த போலீசார், சித்ராவின் மரணம் தற்கொலை என முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
சுஷாந்த் சிங்கின் மரணமும் தற்கொலைதான். அதற்கு, பாலிவுட்டில் அவருக்கு கொடுக்கப்பட்ட தொல்லைகள், அவரது போதைப் பழக்கம், அவருக்கு இருந்த மனச்சிதைவு நோய் ஆகியவைதான் காரணம் எனச் சொல்லப்பட்டாலும், பிரதமர் நரேந்திர மோடி, சச்சின் டெண்டுல்கர் போன்ற பிரபலங்கள் தலையிட்டதால் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுஷாந்த் சிங்கின் மரணத்தை அந்த மாநில தேர்தலுக்கான அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்த பா.ஜ.க. நினைத்தது. அதற்காக சி.பி.ஐ, போதைப் பொருள் தடுப்பு வாரியம், அமலாக்கத்துறை என மூன்று துறைகளும் களமிறக்கப்பட்டன.
"சித்ராவின் விஷயத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டிருப்பதால் வெளிப்படையான விசாரணை எதுவும் நடைபெறவில்லை. பத்திரிகையாளர்களிடம் குறைந்தபட்ச உண்மைகளை சொல்லக்கூட போலீசார் தயாராக இல்லை. இது சித்ராவின் மரணத்தில் பல சந்தேகங்களைக் கிளப்பி வருகிறது'' என்கிறார்கள் சித்ராவின் நண்பர்கள்.