Skip to main content

அரசியலுக்கு வரும்போதே சி.எம். ஆவது எப்படி?

Published on 05/10/2018 | Edited on 05/10/2018
kamal rajini vijay


 

கமல் அரசியல் பேசக்கூடாது என்று சொல்லி எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக அமைச்சர்கள் கேலி செய்து செய்தே அவரை அரசியல் கட்சியைத் தொடங்க வைத்தார்கள்.

 

அந்தச் சமயத்திலேயே பாரதிராஜா சொன்னார். கமலை சீண்டாதீர்கள். அரசியல் கட்சியை தொடங்கி நடத்துவது என்று கற்றுக்கொண்டு வந்துவிடுவான் என்றார். அதன்படியே, வெறும் வாய்ச்சவடாலாக இல்லாமல், சொன்னபடியே அரசியல் கட்சியைத் தொடங்கி, படிப்படியாக வளர்வோம் என்று அரசியலை நடத்துகிறார்.

 

அவர் தனது கட்சி நாளையே ஆட்சியைப் பிடிக்கும் என்றோ, தான் முதல்வராவோம் என்றோ ஒருபோதும் கூறியதில்லை.

 

அரசியலுக்கு வரவே மாட்டார் என்று கருதிய கமல் சட்டென்று அரசியலுக்குள் வந்துவிட்ட நிலையில், 1996 ஆம் ஆண்டிலிருந்து அரசியலுக்கு வந்துவிடுவார் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்த் இன்னமும் தனது முடிவை இறுதிப்படுத்த முடியாமல், தனக்கு வரும் புதிய படங்களை ஒப்புக்கொள்வதும், அந்த படங்களின் ரிலீஸுக்கு முன்பு அரசியல் பேசுவதுமாக காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.

 

“நான் எப்போ வருவேன் எப்டி வருவேன்னு தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்துல வந்துருவேன்”னு ரஜினி தனது ரசிகர்களின் அரசியல் ஆசைக்கு உயிர்கொடுத்துக் கொண்டே, தனது சினிமா வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்திலேயே, தனது திருமண மண்டபத்தின் சிறு பகுதியை கோயம்பேடு சாலை நெருக்கடியை தீர்க்க உதவும் பாலத்திற்காக கையகப்படுத்தியதை காரணமாக கொண்டு கட்சியைத் தொடங்கி அரசியல் தலைவரானார் விஜயகாந்த்.

 

மக்கள் பயன்பாட்டுக்காக அரசு கையகப்படுத்திய சிறு இடத்திற்கு பெரிய இழப்பீடைப் பெற்றுக்கொண்டு, அரசியல் தலைவராகவும் ஆன விஜயகாந்த், பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பை ஏற்கிற அளவுக்கு வளர்ந்தார். ஒரு கட்டத்தில் வைகோவே இவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கும் நிலைக்கு உயர்ந்தார்.

 

அவரைக் காட்டிலும் ரொம்ப சீனியரான ரஜினியோ தனது ரசிகர்கள் எண்ணிக்கையை இழந்த நிலையில் வயதான காலகட்டத்திலும் இதோ அதோ என்று அரசியல் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கிறார். அப்படியே இருந்தால்கூட பரவாயில்லை. தனது படங்களில் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கும் ரஜினி, நிஜத்தில் மக்கள் போராட்டங்களுக்கு எதிராக கருத்துச் சொல்லி மாட்டிக் கொள்கிறார். எம்ஜியார் ஆட்சியை கொண்டு வருவேன் என்று காமெடி செய்கிறார். அதிமுக கூட்டங்களில் கலைஞர் படத்தை வைக்க வேண்டும் என்று குழப்புகிறார். சிஸ்டம் சரியில்லை என்று சொல்லிக்கொண்டே, திரைப்பட வியாபாரத்திலும், பள்ளிக்கூடம் நடத்தியதிலும் மனைவி மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலே சொல்லாமல் தவிர்க்கிறார்.

 

இவர்கள் இப்படியென்றால், விஜய் தனது பங்கிற்கு முதல்வர் ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் சர்கார் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசும்போது நிஜத்தில் முதல்வரானால் நடிக்க மாட்டேன் என்று உறுதி அளித்திருக்கிறார். அவர் இப்படிச் சொன்னதும், சினிமாவிலேயே நீங்க நடிக்கிறதில்லையே பாஸ் என்று மீம்ஸ்கள் தூள்பறந்தன.

 

சினிமா நடிகர்கள் எல்லோரும் வரும்போதே எம்ஜியாராக கற்பனை செய்துகொண்டே வருகிறார்கள். அவர்கள் ஒரு உண்மையை மறந்துவிடுகிறார்கள். திமுக காங்கிரஸ் என்ற இரண்டு அரசியல் இயக்கங்கள் இருந்த நிலையில் திமுக மாபெரும் மக்கள் சக்தியாக உருவெடுத்திருந்தது. திமுகவில் ஒவ்வொரு ஊரிலும் திமுக கிளைக்கு நிகராக எம்ஜியார் மன்றங்களும் இருந்தன.

 

எம்ஜியார் கட்சி தொடங்கியபோது அந்த மன்றங்கள் அனைத்தும் அதிமுக கிளைகளாக மாற்றப்பட்டன. எனவே, எம்ஜியாருக்கு தமிழ்நாடு முழவதும் கட்சிக் கிளை இல்லாத ஊர்களே இல்லை என்ற நிலையை உடனே எட்ட முடிந்தது. அன்றைக்கு தமிழக அரசியலில் திமுக, காங்கிரஸ், அதிமுக என்ற மூன்று கட்சிகள் மட்டும் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்தன.

 

இப்போது நிலைமை அப்படியல்ல. ரஜினிகாந்தின் ரசிகர்கள் அனைவரும் அவரைப் போலவே வயதானவர்களாக இருக்கிறார்கள். கமல் ரசிகர்களும் அப்படித்தான். அவர்களால் சுறுசுறுப்பாக கட்சிப் பணியாற்ற முடியாது. மக்கள் ஆதரவு இல்லையென்ற உண்மையும் இருக்கிற ரசிகர்களுக்கு புரியும். எனவே, ரஜினியின் கட்சிக்கோ, கமல் கட்சிக்கோ பெரிய அளவில் பணம் செலவழிக்க யாரும் தயாராக இல்லை.

 

இதேதான் எல்லா நடிகருக்கும். ஒரு கட்சியில் இணைகிற யாரும் அந்தக் கட்சிக்கு அல்லது தலைவருக்கு உடனே ஆட்சியைப் பிடிக்கிற சக்தி இருக்கிறதா என்று பார்த்துத்தான் சேர்கிறார்கள். பணம் செலவழிக்கிறார்கள். அப்படி இல்லையென்றால், புதிதாக தொடங்கப்படும் கட்சி, தங்களுடைய செலவுக்கு பணம் தருமா என்று பார்த்தே சேர்கிறார்கள்.

 

மத்தியில் பாஜக ஆளுங்கட்சியாக இருந்தும் அந்தக் கட்சி இன்னமும் இரண்டு சதவீத வாக்குகளைக்கூட எட்ட முடியவில்லை என்ற உண்மை தெரியாமல் யாரும் இல்லை.

 

விஜய், தனது சர்க்கார் படம் வியாபாரம் முடியும்வரை தனது ரசிகர்களுக்கு உற்சாகம் ஊட்ட அரசியல் பேசுவார். படம் ரிலீஸ் ஆனதும், அடுத்த படத்தில் நடிக்கப் போய்விடுவார். சன் பிக்சர்ஸும் ரஜினியை வைத்து தான் தயாரிக்கும் பேட்ட படத்தின் வியாபாரத்துக்காக இதேபோன்ற மேடையை ரஜினிக்கு ஏற்பாடு செய்யும். அவரும் அரசியல் சாக்கடையை சுத்தம் செய்வதற்காக அவதரித்தவரைப் போல பேசிவிட்டு, இமயமலைக்கு போய்விடுவார்.

 

பாவம் நடிகர்களை தலைவர்களாக நம்பியிருக்கிற ரசிகர்கள்தான்.
 

 

 

 

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.