‘இது தேர்தல் அல்ல. நம் இனத்தவர்க்கான கணக்கெடுப்பு. நம் இனத்தவரைப் பழித்தவரைப் பழிவாங்கு. நீ எந்தக் கட்சிக்காரனாக இருந்தாலும், வாக்களிக்க வேண்டிய சின்னம் இது மட்டும்தான். நம் இனத்திற்குத் துணை போனால், நாளை உன் தலைமுறை வாழும்’ - நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் களத்தில், தமிழகம் முழுவதும் வாட்ஸ்-ஆப்பில் பரப்பப்பட்ட தகவல் இது!
குறிப்பிட்ட ஒரு சாதியைத்தான் ‘இனம்’ என்று குறிப்பிட்டுள்ளனர். தங்கள் இனம் வாழ வேண்டுமென்றால், ஆட்சியிலோ, கட்சியிலோ, அத்தனை அதிகாரமும் தங்கள் கைக்கு வந்தாக வேண்டுமென்பதே, அந்த இனத்தில் ஒரு சிலரது நோக்கமும் திட்டமுமாக உள்ளது. ஒவ்வொரு சாதியினரும் இதே ரீதியில் வாக்களிக்க முற்பட்டால் தமிழகம் என்னாவது? சில கட்சிகள், சாதி அரசியலை மையமாக வைத்தே இயங்கி வருகின்றன. அவற்றைப் புறந்தள்ளிவிட்டு, பிரதான கட்சிகளைக் கவனத்தில் கொள்வோம்!
1949இல் திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கிய நாளில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் அறிஞர் அண்ணா ‘கொள்கை பரப்புவதே நமது முதல் பணி.’ என்றார். வைதீக மதத்தினூடாகவே தமிழரிடையே சாதி புகுத்தப்பட்ட நிலையில், ‘வைதீகக் காட்டை அழித்து சமதர்மப் பூங்காவை, திராவிடத்தைச் செழிக்கச் செய்தல் வேண்டும்.’ என்று வலியுறுத்தினார். அவர், தமிழ்நாட்டின் முதலமைச்சரான பிறகு, ஜாதி மறுப்பு திருமணங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், 1967இல் சட்டமன்றத்தில், இந்து திருமணச் சட்டத்தில் திருத்தம் செய்து, சுயமரியாதை திருமணச் சட்டத்தை நிறைவேறச் செய்தார். அவருக்குப் பிறகு முதலமைச்சராகவும், இறக்கும் வரையில் திமுக தலைவராகவும் இருந்த கலைஞர் கருணாநிதி, உறுதியான கொள்கைப் பிடிப்புடனே வாழ்ந்தார்.
கலைஞருக்குப் பிறகு அக்கட்சியின் தலைவராகி 2021 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்ட மு.க.ஸ்டாலின் வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும்கூட, ‘பிறப்பு அடிப்படையிலான சாதி, இன வேறுபாட்டை அகற்றி, தீண்டாமையை ஒழிக்கும் நோக்கத்தில், திமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட கலப்பு திருமண நிதியுதவி திட்டம் புதுப்பிக்கப்பட்டுச் செயல்படுத்த அரசாணை வெளியிடப்படும். ஆதிதிராவிடரோ, மலைவாழ் பழங்குடியினரோ, பிற இனத்தவரை மணந்துகொண்டால், நிதியுதவி 60 ஆயிரம் ரூபாயும், தாலிக்கு 8 கிராம் தங்கக் காசும் வழங்கப்படும்.’ எனக் குறிப்பிட்டு, பெரியார், அண்ணா, கலைஞர் உயர்த்திப் பிடித்த சாதி மறுப்பு கொள்கையில், உறுதியாகவே நிற்கிறது திமுக.
பிரம்மாவின் நெற்றியிலிருந்து பிறந்த ‘உயர்ந்த பிரிவினர்’ என்று மனு ஸ்மிருதி குறிப்பிடுவதால், மற்ற அனைவரையும் தங்களுக்கு கீழானவர்களாகவே நடத்திய பிராமணர்களுக்கு எதிராக, வகுப்புவாரி பிரதிநிதித்துவக் கோரிக்கையை வலியுறுத்தி, பிராமணரல்லாதோருக்காக உருவாக்கப்பட்ட அரசியலமைப்பே, நீதிக்கட்சி என்று அறியப்பட்டுவந்த தென்னிந்திய நல உரிமைச் சங்கம். நீதிக்கட்சியை சுயமரியாதை இயக்கத்தோடு இணைத்து, பகுத்தறிவு, சாதி எதிர்ப்பு, பெண் உரிமைகளுக்காகப் போராடும் மக்கள் விழிப்புணர்வு இயக்கமாக மாற்றியமைத்து, திராவிடர் கழகம் எனப் பெயரிட்டார் பெரியார். திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து உருவானதுதான் திராவிட முன்னேற்ற கழகம். ஆக, சாதி ஆதிக்கத்துக்கு எதிராகவே இன்றளவிலும் செயல்பட்டு வருகிறது திமுக.
திமுகவிலிருந்து பிரிந்து எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிலையோ, அதன் கொள்கைகளோ(?), காலப்போக்கில் மாற்றம் கண்டுவிட்டதால், குறிப்பிட்ட ஒரு சாதியினரின் பிடியில் அக்கட்சியைக் கொண்டுவர, ‘ஒற்றுமையான வாக்களிப்பே பலனளிக்கும்’ என இத்தேர்தலில், தமிழகம் முழுவதும் பரவலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதிமுகவுக்கு இப்படியொரு நிலைமை ஏன் வந்ததென்றால், ‘அக்கட்சியின் அம்சமே அப்படித்தான்!’ எனச் சொல்லும்படியாக இருக்கிறது. ஏன் தெரியுமா?
தொடரும்..