கரோனா பெருந்தோற்று தொடங்கிய நாள் முதலே ஒட்டு மொத்த மக்களையும் வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. கூலி வேலை கிடைக்கவில்லை. இதனால் தொழிலாளர்களின் குடும்பங்கள் பட்டினி கிடக்கும் அவல நிலையும் இருந்தது. சில மாதங்களாக கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் நேரத்தில் மீண்டும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை உயரத் தொடங்கியதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பழைய நிலைக்கு போய்க் கொண்டிருக்கிறார்கள் மக்கள்.
தமிழகம் முழுவதும் திருவிழாக்களில் பாசி, மணி, ஊசி, விளையாட்டுப் பொருள், பொம்மைகள் விற்பனை செய்யும் நரிக்குறவர்களின் நிலை ரொம்பவே பரிதாபமாக உள்ளது. ரூபாய் 5 வட்டி, ரூபாய் 10 வட்டிக்கு கடன் வாங்கிப் பொருள் வாங்கி விற்பனை செய்யத் தொடங்கும் போது, கோயில் திருவிழாக்கள் ரத்து என்ற அறிவிப்பு இவர்களின் தலையில் பேரிடியாக விழுந்துள்ளது. இதனால் சுமார் 50 ஆயிரம் பாசி, மணி விற்கும் நரிக்குறவர் மக்கள் வாங்கியக் கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாமல் தவியாய் தவிக்கிறார்கள்.
இந்த நிலையில்தான் புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அறிவொளி நகரில் வசிக்கும் உமா, ரகு போன்ற பலரும் நம்மிடம், "எங்கள் வாழ்வாதாரம் பலூன், பாசி, மணி, ஊசி, விளையாட்டுப் பொருள் விற்கிறது தான். நாங்கள் கட்டும் மாலை தான் ஐயப்ப பக்தர்களும், பழனி முருகன் பக்தர்களும் மாலையாக போடுவாங்க. நாங்க யாரையும் ஏமாற்றி பிழைக்க மாட்டோம். திருவிழா நேரங்கள்ல வட்டிக்கு கடன் வாங்கிப் பொருள் வாங்கி கோயில்ல வித்துட்டு உடனே கடனையும் வட்டியும் திருப்பிக் கொடுப்போம். அதனால எங்கள் நாணயத்தைப் பார்த்து அடுத்த முறையும் பணம் கேட்டால் கொடுப்பாங்க.
ஆனா கஜா புயல் வந்து மொத்தமா எல்லாத்தையும் அழிச்சது. அடுத்து போன வருசம் கரோனா வந்து அழிச்சது. எங்க ஊர்ல மட்டும் 100 பேர் வியாபாரம் செய்றோம். ஒவ்வொருத்தரும் ரூபாய் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை கடன் வாங்கிப் பொருள் வாங்கி வந்து, திருவிழா இல்லாம வீட்டுக்குள்ளேயேக் கிடந்தது. இந்த வருசமாவது திருவிழா இருக்கும்னு மறுபடியும் கடன் வாங்கிப் பொருள் வாங்கி முடிச்சு 2 திருவிழா வியாபாரம் முடியும் போது திருவிழாவை நிறுத்திட்டாங்க. பொருள் எல்லாம் மூட்டையா கட்டி வீட்டுக்குள்ள கிடக்குது. வாங்கின கடனை கேட்டு கடன் கொடுத்தவங்க கேட்கும் போது பதில் சொல்ல முடியாம ஓடி ஒழியுறோம். ஒருவேளை சோத்துக்கு தொட்டுக்கக் காய்கறி வாங்க காசு இல்லாமப் போச்சு.
வாங்கினக் கடனை அடைக்க முடியல. நாங்க ரேசன் அரிசியால பசியாறினாலும் எங்க குழந்தைங்க பசியால அழும் போது பால் வாங்கிக் கொடுக்க காசு இல்லாம நாங்களும் சேர்ந்து அழுறோம். கரோனாவுல சாகுறதைவிட பசியால செத்துடுவோம் போலிருக்கு. இதையெலலாம் பார்க்கும் போது கரோனா வந்து எங்கள ஒரேயடியா கொன்னுட்டாலும் சரினு தோனுதுய்யா.. எங்களைப் போல அன்றாடம் பிழைப்புக்காக பலூன் விக்கிற நரிக்குறவர் கூட்டத்தைப் பார்க்க யாருக்கும் மனசு வரல. எங்க நிலைமையை நினைச்சுப் பாருங்கய்யா.. எங்களுக்கும் இந்த அரசாங்கம் கொஞ்சம் கருணை காட்டி நிவாரணம் கொடுத்தால் எங்க குழந்தைகளுக்கு பால் வாங்கி கொடுப்போம். இல்லன்னா பசி நோயாலயே செத்துடுவோம்" என்றனர்.
இது போன்ற சிறு சிறு வியாபாரிகள் மீது அரசாங்கத்தின் கவனம் திரும்பினால் அவர்களையும் காப்பாற்றலாம்.