Skip to main content

100 நாட்களில் 10,000 கிமீ ஓட்டம்.. நூலிழையில் தவறவிட்ட சாதனை!!

Published on 09/08/2017 | Edited on 09/08/2017
100 நாட்களில் 10,000 கிமீ ஓட்டம்.. 
நூலிழையில் தவறவிட்ட சாதனை!!

ஒரு சராசரி நாளில் எவ்வளவு தூரம் உங்களால் ஓடமுடியும்? நன்கு திட்டமிட்டு ஓடினாலும் குறிப்பிட்ட சில தூரத்திற்கு மேல் ஓட முடியாது. ஆனால், ஒரு நாளுக்கு நூறு கிலோமீட்டர்கள் என்ற கணக்கில் நூறு நாட்களில் 10,000 கிமீ தூரம் ஓட முயற்சித்து, நூலிழையில் தன் சாதனையைத் தவறவிட்ட ஒருவரைப் பற்றி தெரியுமா உங்களுக்கு? அவர்தான் மும்பையைச் சேர்ந்த சமீர் சிங்.



கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி ஒரு வெப்பமான காலை நேரத்தில், மும்பையில் உள்ள ஒரு சேரி பகுதியில் இருந்து, தனது பள்ளிக்கால நண்பர் ரமேஷ் உடன் இணைந்து வெறுங்காலுடன் ஓடத்தொடங்கியிருக்கிறார் சமீர். அன்றுமுதல் இந்த ஓட்டம் அன்றைய நாளுக்கான இலக்கை அடையாமல் ஓயவேயில்லை.

இந்த சாதனைக்கான நீண்ட ஓட்டத்தின் இறுதிநாளான ஆகஸ்ட் 6-ஆம் தேதியன்று, தீராத இரைப்பைப் பிரச்சனை, வைரஸ் காய்ச்சல் போன்ற காரணங்களால் ஓட்டத்தை நிறுத்திவிட்டார் சமீர். அந்த கடைசி நாளில் அவர் ஓடவேண்டிய தூரம் 150 கிலோமீட்டர்களாக இருந்துள்ளது. அவரது ஜிபிஎஸ் கைக்கடிகாரம் அவர் ஓடிய தூரத்தை 9964.19 கிமீ எனக் காட்டியுள்ளது. வெறும் 36 கிமீ-களில் தனது சாதனையை சமீர் தவறவிட்டாலும், அவரது இந்த சாதனை நாடு முழுவதும் பெரும் பாராட்டுகளைப் பெற்றது.

44 வயதைக் கடந்த சமீர் ஒவ்வொரு நாளும் அதிகாலையில், தனது சேரிப்பகுதியில் இருந்து மும்பையின் தெற்கில் உள்ள தொழில் வளர்ச்சியடைந்த பகுதியை நோக்கி ஓடத்தொடங்குவார். இவர் இந்த 100 நாட்களில் ஓடிய மொத்த தூரம் சினப்பெருஞ்சுவரின் நீளமான 5,500 கிமீ மற்றும் மும்பை-லண்டன் இடையேயான தூரமான 7187 கிமீ-ஐ விட அதிகம். மேலும், பூமியின் சுற்றளவில் கால்பங்கு தூரத்தை இவர் வெறும் நூறு நாட்களில் ஓடிக் கடந்துவிட்டார்.



ஒலிம்பிக் மாரத்தான் போட்டிகளிலேயே வெறும் 43 கிமீ தூரம்தான் இலக்கு என்று இருக்கும்போது, எதற்காக இப்படியொரு உயிரை மாய்த்துக்கொள்ளும் சவாலை எடுத்துக்கொண்டீர்கள்? என்ற ஆங்கில ஊடகமொன்றின் கேள்விக்கு சமீர் அளிக்கும் பதில் ரொம்பவும் வித்தியாசனது. ‘மனித உடலுக்கென்று சில வரைமுறைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், நான் ஒருபோதும் அதை ஏற்றுக்கொண்டதில்லை. உங்கள் கனவுகளுக்கு ஏற்றாற்போல், உங்கள் உடலமைப்பும் மாற்றியமைக்கப்படுகிறது. இதை என் அனுபவத்தில் இருந்து நான் சொல்கிறேன்’ என்கிறார்.

மேலும், ‘ஒன்பது மாதங்களாக நான் வேலையேதும் இல்லாமல் கஷ்டப்பட்டேன். மக்கள் தாமாகவே முன்வந்து எனது இந்த ஓட்டத்திற்கான நன்கொடைகளை வழங்கினர். ஒரு நாளைக்கு 100 கிமீ என்பது அசாத்தியமானது. ஆனால், மனித ஆன்மாவின் தாக்குப்பிடிக்கும் திறனை நான் நிரூபிக்க எண்ணியதால் அது சாத்தியமானது. ஒரு நாளில் வெறும் ரூ.180 எனது செலவுகளுக்கு போதுமானதாக இருந்தது. எனது சகோதரர் என் உடல்வலியைப் போக்க பக்க பலமாக இருந்தார். ஒவ்வொரு விடியலும் எனக்கு புத்துணர்ச்சி தருவதாக அமைந்தது. ஓடிக்கொண்டே இருந்தேன்’ என்கிறார் உற்சாகமாக.

இவரது ஓட்டத்தின் 47-ஆவது நாளில் ஆவணப்பட இயக்குனர் வந்தனா பாரதி என்பவரின் பார்வையில் சிக்கியுள்ளார். பின்னர் இவரது வாழ்க்கை வந்தனாவால் ‘தி ஃபெயித் ரன்னர்’ என்ற பெயரால் ஆவணப்படமாகியது. மக்கள் இவரை எலும்புக்கூடு, பைத்தியக்காரன், 100 கிமீ போன்ற புனைப்பெயர்களுடன் அழைக்கத் தொடங்கிவிட்டனர். ஐந்துமுறை மாரத்தான் சாம்பியன் பட்டம் வென்ற சமீர், சமீபத்திய நூறுநாள் ஓட்டங்களில் 16 கிலோ எடை குறைந்து உண்மையிலேயே எலும்புக்கூடு போல காட்சியளிக்கிறார்.



இப்படியே போய் என் அம்மா முன் நின்றால் அவர் பெரிதும் மனம் வருந்தி, என் வாழ்க்கை குறித்த அச்சத்தில் மூழ்கிவிடுவார். அதனால், கொஞ்சம் எடையை அதிகரித்துவிட்டு அவரைச் சந்திக்க இருக்கிறேன் எனச்சொல்லும் சமீர், தனது அடுத்த இலக்கு 40,000 கிமீ என அறிவித்துள்ளார். ‘என் இலக்கின் மீதான தீராத வெறிதான் என்னை இத்தனை தூரம் ஓடச்செய்தது. கிழிந்துபோன பாதங்களின் காயங்களையும், கால் இணைப்புகளில் ஏற்பட்ட கொடூரமான வலியையும் என் கனவுகள் மென்று தின்றுவிட்டன’ என மன உறுதியோடு சொல்லும் இந்தியாவின் ஃபெயித் ரன்னரை நாமும் வாழ்த்தலாம்.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்