கிகி, மோமோ, ஃபிட்நெஸ், ஐஸ் பக்கெட், பேட் பாக்ஸ் ஆகிய சேலஞ்ச்களைத் தொடர்ந்து, அந்த வரிசையில் தற்போது புதிதாக வந்துள்ளதுதான் 10yearchallenge. 10 வருடங்களுக்கு முன்பு எடுத்த புகைப்படங்களையும், தற்போது எடுத்த புகைப்படங்களையும் ஒன்றாக சேர்த்து பதிவிடவேண்டும். இரண்டுக்குமிடையேயான வித்தியாசத்தை ஒப்பிடும் படியான சேலஞ்ச்தான் இது. அதாவது 2009 களில் எடுத்த புகைப்படங்களையும் 2019ல் எடுத்த புகைப்படங்களையும் பதிவேற்றி வருகின்றனர். இது தொடர்பாக பல மீம்களும் வலம் வருகின்றன.
சிலர் இந்த சேலஞ்ச்களை விடாப்பிடியாக கடைபிடித்து வருகின்றனர். சிலர் இதை விமர்சித்து வருகின்றனர். சிலர் அப்போலாம் நான் ஃபோட்டோவே எடுக்கல என புலம்பி வருகின்றனர். இவ்வாறாக இந்த சேலஞ்ச் ஒருபுறம் மீம்களாலும், ஒருபுறம் ஃபோட்டோக்களாலும் பிரபலமடைந்துகொண்டே வருகிறது. பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை பெரும்பாலானோர் இந்த சேலஞ்சில் கலந்துகொண்டு தங்களது புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.
இது வெறும் பொழுதுபோக்கு தானே என நாம் கடந்து போனாலும், இதற்கு பின் பெரிய ஆபத்து ஒன்று காத்துக்கொண்டிருக்கிறது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பிரபல எழுத்தாளர் கேட் ஓ நெய்ல் கூறியுள்ளது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அவர் கூறி்யதாவது, ஃபேஸ்புக் மக்களின் முகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை வைத்து ஃபேஷியல் ரெககனேஷன் என்ற தொழில்நுட்பத்தை அப்டேட் செய்கிறது. ஃபேஷியல் ரெககனேஷன் என்பதே மக்களின் சுதந்திரத்திற்கு எதிரானது. பேஸ்புக் அதை மேலும் தவறாக பயன்படுத்த பார்க்கிறது.
இவர் கூற்று மேலும் பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது. ஏற்கனவே கேம் பிரிட்ஜ் அனலிடிகா போன்ற மூன்றாம் தரப்பு நிறுவனங்களிடம் பேஸ்புக் தங்கள் பயனர்களின் தகவல்களைக் கொடுத்தது. தற்போதும் அதுபோல ஏதும் முயற்சிக்கிறதா என சந்தேகத்தை கிளப்பியுள்ளது. பேஸ்புக் இனி இப்படியான சம்பவங்கள் நிகழாது என உறுதியளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த இணைய உலகத்தில் எதுவுமே தனிமனித தகவல்களாக இருப்பதில்லை. இதில் இதுவேறு என வருத்தம் கொள்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.