Skip to main content

காதலும் கோஷ்டி மோதலும்? - ‘வருணன்’ விமர்சனம்

Published on 15/03/2025 | Edited on 15/03/2025
varunan movie review

மாநகரங்களில் பெருகிவரும் தண்ணீர் கேன் தொழிலை கதை கருவாக வைத்து இதுவரை தமிழ் சினிமாவில் உருவாகாத ஒரு புது ஜானரில் இந்த வருணன் உருவாகியிருக்கிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் குடிதண்ணீர் இலவசமாக இல்லாமல் பணம் கொடுத்து வாங்கி வரும் அவலம் இந்த நாட்டில் நிகழ்ந்து வருகிறது. அதை மையக்கருவாக வைத்து அதற்குள் நடக்கும் அரசியலை கூறும் இந்த வருணன் கவர்ந்தாரா, இல்லையா?

வடசென்னை பகுதியில் இரண்டு ஏரியாக்களை பிரித்துக் கொண்டு ஒரு ஏரியாவில் ராதாரவியும் இன்னொரு ஏரியாவில் சரண்ராஜும் தண்ணீர் கேன் பிசினஸ் செய்து வருகின்றனர். இதில் ராதாரவி நேர்மையாக நாயகன் துஷ்யந்த் ஜெயபிரகாஷை வைத்துக்கொண்டு இந்த பிசினஸை நடத்திக் கொண்டு வருகிறார். ஆனால் சரண்ராஜூ அவரது மனைவி மகேஸ்வரியின் தம்பி உதவியுடன் சுண்டக்கஞ்சி வியாபாரமும் நடத்தி வருகின்றனர். இது அங்கு இருக்கும் போலீஸ் அதிகாரியான ஜீவா ரவிக்கு பிடிக்கவில்லை. இதனால் அந்த போலீஸ் அதிகாரி ராதாரவிக்கு ஆதரவாகவும் சரண்ராஜ் கூட்டத்துக்கு எதிராகவும் நடந்து வருகிறார். ஒரு கட்டத்தில் இவர் ராதாரவியை பகைத்துக் கொண்டு சரண்ராஜ் குரூப் உடன் இணைந்து விடுகிறார். இதனால் இரண்டு கோஷ்டிகளுக்கும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இவர்களுக்குள் வகைகள் உண்டாகி ஒருவருக்கொருவர் கொலை செய்கின்ற அளவுக்கு பகை கண்ணை மறைக்கிறது. இந்தப் பகை முடிவுக்கு வந்ததா, இல்லையா? தண்ணீர் கேன் விற்கும் தொழிலில் உள்ள அரசியல் என்ன? என்பதே இந்த வருணன் படத்தின் மீதி கதை. 

varunan movie review

ஒரு சிட்டியில் தண்ணீர் கேன் போடும் தொழிலில் இருக்கும் அரசியல் பின்னணியில் என்னென்ன விஷயங்கள் நடக்கிறது என்பதை ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாக்கி அதன் மூலம் பார்ப்பவர்களை ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் ஜெயவேல்முருகன். இந்த கால வடசென்னையில் உள்ள வாழ்வியலை மிக எதார்த்தமாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குநர் அதை ரசிக்கும்படி கொடுத்து பல இடங்களில் அயர்ச்சி இருந்தாலும் அதை மறக்கடிக்க செய்யும்படியான கதை அமைப்பை அதனுள் உட்பகுத்தி பார்ப்பவர்களுக்கு ஒரு புது அனுபவத்தை கொடுத்திருக்கிறார்.

குடிதண்ணீர் என்பது மக்களுக்கு இலவசமாக கிடைத்த காலம் போய் தற்பொழுது அதை காசு கொடுத்து வாங்கி குடிக்கும் இந்த அவல நிலையை எப்படி ஊர் பெரியவர்கள் அதை தன் சுயநலத்துக்கு பயன்படுத்திக்கொண்டு அதன் மூலம் எப்படி லாபம் பார்க்கிறார்கள் என்றவைகளை அழகாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குநர் அதனுள் நடக்கும் பகைகள் சண்டைகள் கொலைகள் என பல்வேறு பிரச்சனைகளை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார். கிட்டத்தட்ட மெட்ராஸ் படம் போல் திரைகதையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்ட இயக்குநர் அதில் ஓரளவு வெற்றியும் பெற்று இருக்கிறார். அதனுள் குடும்பம், காதல், நட்பு, ஏமாற்றம், கொலை,  பகை, பழிவாங்கல் போன்ற விஷயங்களை அளவுக்கு ஏற்ப திரை கதைக்குள் உட்பகுத்தி பார்ப்பவர்களை சாட்டிஸ்பை செய்ய முயற்சி செய்திருக்கிறார். 

varunan movie review

நாயகன் துஷ்யன் பிரகாஷ் எதார்த்தமான சென்னை பையன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக விஜய் டிவி கேபிரில்லா நடித்திருக்கிறார். இருவரும் பதின் பருவ காதலை வளர்க்கும் காட்சிகள் சிறப்பாக இருக்கின்றன. துடுக்கான இளைஞராக வரும் இவர் கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் நடித்திருக்கிறார். ஆண்டவராக வரும் ராதாரவி வழக்கம் போல் வில்லத்தனமான மற்றும் குணச்சித்திரமான நடிப்பை மிக்ஸ் செய்து சிறப்பாக நடித்திருக்கிறார். திக்குவாயாக நடித்திருக்கும் சரண்ராஜ் செய்வதறியாது தவிக்கும் கதாபாத்திரத்தில் அழகாக நடித்து கவனம் பெற்று இருக்கிறார். இவருக்கு ஜோடியாக வரும் பிக் பாஸ் மகேஸ்வரியும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மகேஸ்வரி தம்பியாக நடித்திருக்கும் வில்லன் சங்கர்நாத் மகேஷ் பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார். அதேபோல் நாயகன் துஷ்யந்த் நண்பராக வரும் நடிகரும் சிறப்பாக நடித்து கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கிறார். மற்றபடி உடனடித்த அத்தனை முக்கிய கதாபாத்திரங்களும் அவரவர் வேலையை சிறப்பாகவே செய்திருக்கின்றனர். 

போபோ சசி இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை ஆக்சன் காட்சிகளும் கேங்ஸ்டர் சம்பந்தப்பட்ட காட்சிகளும் எலிவேட் செய்ய நன்றாக உதவி இருக்கிறது. ஸ்ரீராம் சந்தோஷ் ஒளிப்பதிவில் வடசென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

நாட்டில் சர்வ சாதாரணமாக விற்கும் தண்ணீர் கேன் தொழிலில் நடக்கும் அரசியல் மற்றும் அதன் பின்னணியில் இருக்கும் கேங்ஸ்டர் சம்பந்தப்பட்ட விஷயங்களை வடசென்னை கதை களத்தை வைத்துக்கொண்டு சிறப்பாக கூறியுள்ள இயக்குநர் ஏனோ கதைக்கும் கதை சார்ந்த விஷயங்களுக்கும் சுற்றி சுற்றி ஒரே இடத்தில் வரும்படி திரைக்கதை அமைத்து ஆங்காங்கே சில அயர்ச்சியான விஷயங்களையும் கொடுத்து இருப்பது படத்திற்கு சற்றே மைனஸ் ஆக அமைந்திருக்கிறது. இருப்பினும் கதை கருவும் அதன் சம்பந்தப்பட்ட விஷயங்களும் புதிதாக அமைந்து பார்ப்பவர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுத்திருப்பது பிளஸ் ஆக மாறி இருக்கிறது. இருந்தும் கதை கருவுக்கு இன்னும் கூட முக்கியத்துவம் கொடுத்து ஆழமான கதையாக இதை உருவாக்கி இருக்கலாம். 

வருணன் - தாகம் குறைவு

சார்ந்த செய்திகள்