Skip to main content

இரவில் நடக்கும் விசாரணை வென்றதா? - ‘டென் ஹவர்ஸ்’ விமர்சனம்! 

Published on 18/04/2025 | Edited on 18/04/2025

 

Ten Hours movie review

நீண்ட இடைவெளிக்கு பிறகு சிபிராஜ் நடிப்பில் வெளியாகியிருக்கும் ஒரு இன்வெஸ்டிகேட்டர் திரில்லர் திரைப்படம் இந்த டென் ஹவர்ஸ். சமீப காலங்களாக ஓர் இரவில் நடக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் வெற்றி படங்களாகவே அமைகிறது. அந்த வகையில் எப்படியாவது ஒரு வெற்றிப்படம் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் சிபிராஜ் இந்த முறை ஓர் இரவில் நடக்கும் கதைக்களத்தை கையில் எடுத்து கோதாவில் குதித்து இருக்கிறார். அப்படி ஓர் இரவில் நடக்கும் இந்த டென் ஹவர்ஸ் திரைப்படம் சிபிக்கு கை கொடுத்ததா, இல்லையா? என்பதை பார்ப்போம்...

தனக்குத் தவறு என்று படும் பட்சத்தில் அது யாராக வேண்டுமானாலும் சரி, எவராக வேண்டுமானாலும் சரி அவர்களுக்கு தண்டனை அளிக்கும் ஸ்ட்ரிக்ட் போலீசாக வருகிறார் சிபிராஜ். ஒரு நாள் ஒரு அம்மாவும் தாத்தாவும் தங்கள் பெண்ணை காணவில்லை என போலீசில் புகார் அளிக்கின்றனர். காணாமல் போன அந்தப் பெண்ணை தேடி சிபிராஜ் இன்வெஸ்டிகேஷனில் இறங்குகிறார். அந்த சமயம் ஒரு பஸ்ஸில் ஒரு பெண் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார் என அவருக்கு தகவல் கிடைக்க பஸ்ஸை மடக்கி சென்று பார்க்கும் பொழுது தகவல் கொடுத்த நபர் அந்த பஸ்லயே இறந்து கிடக்கிறார். இதைத்தொடர்ந்து காணாமல் போன பெண்ணுக்கும் அந்த பஸ்ஸில் நடந்த கொலைக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது என யூகிக்கும் சிபிராஜ் அதன் பிறகு 10 மணி நேரத்தில் பல்வேறு கொலைகள் நடக்கிறது. இதைத்தொடர்ந்து கொலையாளி யார்? கொலைக்கும் காணாமல் போன பெண்ணுக்கும் என்ன சம்பந்தம்?  கொலைக்கான காரணம் என்ன? அவைகளை சிபிராஜ் கண்டுபிடித்தாரா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.

பொதுவாக சஸ்பென்ஸ் திரில்லர் படங்கள் என்றாலே படம் மெதுவாக நகரும். கொலைக்கான காரணத்தை போலீசார் இன்வெஸ்டிகேட்டிவ் செய்வது சட்டுல் ஆகவே இருக்கும். ஆனால் இந்த படத்தில் ஹீரோயின் கிடையாது பாடல்கள் கிடையாது நேராக கதைக்குள் செல்லும் திரைப்படம் அடுத்தடுத்து நடக்கும் விஷயங்களை பரபரப்பாக காட்டி இருக்கிறது. படம் ஆரம்பித்தது முதல் காட்சி முதல் இன்வெஸ்டிகேஷன் ஆரம்பிக்கிறது அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் அதை ஒவ்வொன்றாக நாயகன் சிபிராஜ் கண்டுபிடிப்பது போன்ற திரைக்கதை அமைத்து அதன் மூலம் படத்தோடு நம்மை ஒட்ட வைத்திருக்கிறார் இயக்குனர் இளையராஜா கலியபெருமாள். ஓர் இரவில் நடக்கும் கதையாக உருவாக்கியிருக்கும் இயக்குனர் அதை கன கச்சிதமாக விறுவிறுப்பாக உருவாக்கி காட்சிக்கு காட்சி அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற விறுவிறுப்பை கொடுத்து படத்தை கரை சேர்க்க உதவி இருக்கிறார். வழக்கமாக சஸ்பெண்ஸ் திரில்லர் படங்களில் நாம் என்ன எதிர்பார்த்து இருப்போமோ அதையே இந்த படத்திலும் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். இருந்தும் படம் முழுவதும் ஆங்காங்கே பலவிதமான க்ளிஷே காட்சிகள் தென்படுவது சற்றே அயற்சியை கொடுத்திருக்கிறது. அடுத்தடுத்து நடக்கப் போகும் சம்பவங்கள் பெரும்பாலும் யூகிக்கும்படி இருப்பது சற்றே மைனஸ் ஆக இருந்தாலும் முழு படத்தையும் தன் தோள் மேல் சுமந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி படத்தையும் கரை சேர்க்க உதவி இருக்கிறார் நடிகர் சிபிராஜ். 

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு ப்ராமிசிங் ஆன திரைப்படத்தில் வரும் சிபிராஜ் தேர்ந்த முதிர்ச்சியான நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். இன்வெஸ்டிகேடிவ் செய்யும் காட்சிகளில் மெச்சூர்ட்டான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். இதற்கு முன் இவர் நடித்த படங்களில் இருந்து சற்றே வேறுபட்ட நடிப்பை இந்த படத்தில் காண முடிகிறது. இவருடன் நடித்திருக்கும் கஜராஜா, ராஜ் ஐயப்பா ஆகியோர் படத்திற்கு பக்க பலமான நடிப்பை வெளிப்படுத்தி கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்து இருக்கின்றனர். சிரிப்புக்கு பொறுப்பேற்று இருக்கும் தங்கதுரை ஆங்காங்கே பல இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார். மற்றபடி முக்கிய பாத்திரத்தில் வரும் ஜீவா ரவி, முருகதாஸ், திலீபன், சரவண சுப்பையா, நிரஞ்சனா, சருமிஷா ஆகியோர் அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கின்றனர். 

ஜெய் கார்த்திக் ஒளிப்பதிவில் இரவு நேர காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க படத்தை பெரும்பாலும் இரவிலேயே படம் பிடித்திருப்பது அதற்கான சவால்களை நன்றாக கையாண்டு இருக்கிறார். கே எஸ் சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. இன்வெஸ்டிகேடிவ் திரில்லர் படங்களுக்கே உரித்தான இசையை சிறப்பாக கொடுத்து இருக்கிறார். 

பொதுவாக சஸ்பெண்ஸ் திரில்லர் படங்கள் என்றாலே ஸ்லோ அன் ஸ்டெடியாகவே ஆரம்பித்து செல்லும். ஆனால், இந்த படம் ஆரம்பத்தில் இருந்து முடிவுவரை டாப் கியரில் சென்று முடிகிறது. இருந்தும் ஆங்காங்கே சில பல கிளிஷே கலந்த அயற்சியான காட்சி அமைப்புகள் தென்பட்டாலும் அவை வேகமான திரை கதையால் மறக்கடிக்கப்பட்டு சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்கும் திரில்லர் படமாக இந்த டென் ஹவர்ஸ் அமைந்திருக்கிறது.

டென் ஹவர்ஸ் - நல்ல முயற்சி!

சார்ந்த செய்திகள்