இந்த மாதத்திலேயே விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள மூன்றாவது திரைப்படம். விஜய்சேதுபதி நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் பேய் படம் என்ற எதிர்பார்ப்புடன் ஓடிடியில் வெளியாகியுள்ள 'அனபெல் சேதுபதி' திரைப்படம், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா..?
அந்தக் காலத்து ராஜாவான விஜய்சேதுபதிக்கு வெள்ளைக்கார பெண்ணான டாப்ஸி மீது காதல் மலர்கிறது. விஜய்சேதுபதி, டாப்ஸிக்காக பல்வேறு தொழில்நுட்பங்கள் நிறைந்த ஒரு பிரம்மாண்ட அரண்மனையைக் காதல் பரிசாக கட்டித் தருகிறார். இருவருக்கும் திருமணம் நடந்து அதில் குடியேறுகிறார்கள். இந்த அரண்மனை மேல் அந்த ஊர் சிற்றரசு ஜெகபதிபாபு ஆசைப்படுகிறார். அரண்மனையை எப்படியாவது அடைய வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கும் ஜெகபதிபாபு, விஜய்சேதுபதியையும், டாப்ஸியையும் விஷம் வைத்துக் கொன்றுவிட்டு அரண்மனையை எடுத்துக்கொள்கிறார். விஜய்சேதுபதியை ஏமாற்றிய ஜெகபதிபாபுவை பழிவாங்க ஜெகபதிபாபுவையும் சேர்த்து அவரது மொத்த குடும்பத்துக்கே விஷம் வைத்துக் கொன்றுவிடுகிறார் விஜய்சேதுபதியின் விசுவாச சமையல்காரரான யோகிபாபு. இவர்கள் அனைவரின் ஆவியும் அந்த அரண்மனைக்குள்ளேயே பல ஆண்டுகாலமாக சுற்றிச் சுற்றி வருகிறது. நிகழ்காலத்தில் மீண்டும் பிறந்த டாப்ஸி அந்த அரண்மனைக்குள் தன் குடும்பத்தாருடன் செல்கிறார். அங்கே இருக்கும் பேய்களிடமிருந்து டாப்ஸி குடும்பம் தப்பித்ததா, பேய்களுக்கு மோட்சம் கிடைத்ததா? என்பதே 'அனபெல் சேதுபதி' படத்தின் மீதி கதை.
‘அனபெல் சேதுபதி’ படத்தை ஒரு கோட்டைக்குள் நடக்கும் ஹாரர் காமெடி படமாக எடுக்க முயற்சித்த இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன், அந்த முயற்சியில் வெற்றியைக் கோட்டைவிட்டுள்ளார். பேய் படம் என்றால் அதில் திகில் நிறைந்த காட்சிகள் அமைந்து பயமுறுத்த வேண்டும். அதுவே காமெடி படம் என்றால், நமக்கு சிரிப்புமூட்ட வேண்டும். ஆனால் இந்தப் படத்திலோ பயமும் இல்லை, காமெடியும் இல்லை! படத்தில் மிகப்பெரும் காமெடி நட்சத்திர பட்டாளங்கள் இருந்தும் அவர்களை சரியாக பயன்படுத்த தவறியுள்ளார் இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன். அதேபோல் இதை ஒரு பேன் இந்தியப் படமாக எடுக்க நினைத்த இயக்குநர், வெளிமாநில நடிகர்களான ஜெகபதி பாபு, ராஜேந்திர பிரசாத், வெண்ணிலா கிஷோர், சுரேகா வாணி ஆகியோரை இதில் நடிக்கவைத்துள்ளார். ஆனாலும், அவர்களின் லிப் சிங்க் முதல் முகபாவம் வரை பலவும் பல இடங்களில் அந்நியப்பட்டே நிற்கின்றன. அதனாலேயே அவர்கள் செய்யும் காமெடிகள் சிரிக்கவைக்க மறுக்கின்றன.
அதேபோல் தமிழ் நடிகர்களான ராதிகா, யோகிபாபு, சேத்தன், தேவதர்ஷினி, ஜார்ஜ், மதுமிதா, சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு ஆகியோர் இருந்தும், அவர்களின் காமெடி கட்சிகளில் கிச்சுகிச்சு உணர்வுகள் மிஸ் ஆகின்றன. காமெடி என்ற பெயரில் இவர்கள் அனைவரும் அரண்மனைக்குள்ளேயே சண்டையிடுவதும், ஓடி பிடித்துக்கொள்வதும், அங்கு இருக்கும் பொருட்களைத் தூக்கி எரிந்துகொண்டு விளையாடுவது என பொறுமையை சோதிக்கும் காட்சிகள் ஏராளம். பேய் பயத்தைக் காட்டிலும் நகைச்சுவை காட்சிகளுக்கே அதிகம் முக்கியத்துவம் அளித்துள்ள இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன், இவ்வளவு நட்சத்திரங்கள் இருந்தும் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டார். இருப்பினும், பிளாஷ்பேக்கில் வரும் விஜய்சேதுபதி, டாப்ஸி சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளை சிறப்பாக கையாண்டுள்ளார் இயக்குநர். விஜய்சேதுபதிக்கும் டாப்ஸிக்குமான கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்து காட்சிகளை அழுத்தமாகவும், நெகிழ்ச்சியாகவும் மாற்றியுள்ளது.
விஜய்சேதுபதி சமீபகாலமாக தான் தேர்ந்தெடுக்கும் படங்களின் ஸ்க்ரிப்டுகளை முழுவதுமாக கேட்கிறாரா, இல்லையா? என்ற எண்ணம் ஒருபக்கம் எழுந்தாலும், இப்படத்தில் அவர் எப்போதும்போல் தனது இயல்பான நடிப்பையே வெளிப்படுத்தியுள்ளார். இவரது மிடுக்கான தோற்றமும், அலட்டலில்லாத வசன உச்சரிப்பும் பிளாஷ்பேக் காட்சிக்கு உயிர் கொடுத்துள்ளது. இருந்தும் இவர் இப்படி ஒரே நேரத்தில் பல படங்களில் தொடர்ந்து ஒரே மாதிரியாக நடிப்பது சற்று சலிப்பை ஏற்படுத்துவதுபோல் தோன்றுகிறது.
ஃபாரின் பெண்ணாக வரும் டாப்ஸியின் தங்க நிறமும், அவரது வசன உச்சரிப்பும் அப்படியே வெள்ளைக்கார பெண்மணியை கண்முன் நிறுத்தியுள்ளது. இவருக்கும் விஜய்சேதுபதிக்குமான காதல் காட்சியில் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல், நிகழ்கால டாப்ஸி கதாபாத்திரத்தில் துடுக்கான பெண்ணாக நடித்து கவனம் ஈர்த்துள்ளார். அவரது இரண்டு கதாபாத்திரங்களிலும் அவரது லுக் சிறப்பாகவும், அழகாகவும் அமைந்துள்ளது.
கெளதம் ஜார்ஜ் ஒளிப்பதிவில் அரண்மனை மிகவும் ரிச்சாக தெரிகிறது. அரண்மனையின் இன்டிரியர் காட்சிகளைப் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தியுள்ளார். கிருஷ்ணா கிஷோர் இசையில் பிளாஷ்பேக் பகுதியில் ஒலிக்கும் பாடல் கேட்கும் ரகம். அவரது பின்னணி இசை படத்துக்கு வேகம் கூட்ட முயற்சி செய்துள்ளது.
பிளாஷ்பேக் காட்சிக்கு அளித்திருந்த முக்கியத்துவத்தை நிகழ்கால காட்சிக்கும் கொடுத்திருந்தால் நிச்சயமாக இது ஒரு ரசிக்கும்படியான படமாக அமைந்திருக்க நிறைய வாய்ப்புள்ளது.
‘அனபெல் சேதுபதி’ - சூடு ஓகே! சுகர் கம்மி!