![You will also travel through the lives of two young men - Gopi & Sudhakar](http://image.nakkheeran.in/cdn/farfuture/hHdczWuKiwQQQ06fmvw05E-ldRNyG3q8qakQsvRt8w0/1674558176/sites/default/files/inline-images/GS%20in.jpg)
பரிதாபங்கள் புரடக்சன்ஸ் வழங்கும், விக்னேஷ் SC போஸ் தயாரிப்பில், புதுமுக இயக்குநர் விஷ்ணு விஜயன் இயக்கத்தில், பரிதாபங்கள் கோபி - சுதாகர் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கும் கமர்ஷியல் ஃபேண்டஸி, ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்து கொள்ள எளிமையான முறையில் இனிதே நடந்தேறியது.
வழக்கமான கமர்ஷியல் படங்கள் போல அல்லாமல் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வண்ணம் நம் வாழ்வில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளில் இருந்து கதை பின்னப்பட்டுள்ளது. நம் வாழ்வோடு எளிதில் தொடர்பு படுத்தி கொள்ளும் வகையான கதையில், ஃபேண்டஸி கலந்த ஒரு அட்டகாசமான நகைச்சுவை படமாக இப்படம் இருக்கும்.
படம் குறித்து கோபி - சுதாகர் கூறியதாவது, “இந்த கதையை கேட்டவுடனே இது வழக்கமான கமர்ஷியல் சினிமாவாக இருக்காது எனப் புரிந்தது. நாம் அனைவரும் வாழ்க்கையில் சந்திக்கும் அனுபவங்கள் தான் படத்திலும் இருக்கும். ஆனால், அதோடு ஃபேண்டஸி கலந்து நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் பொழுதுபோக்கும் இப்படத்தில் இருக்கும். யூடியூப் வீடியோக்களில் சிரிக்க வைப்பது வேறு வகையானது. ஆனால், சினிமா எனும்போது ரசிகர்களிடம் நிறைய எதிர்பார்ப்பு இருக்கும். பரிதாபங்களில் இருக்கும் கோபி, சுதாகர் இதில் இருக்க மாட்டார்கள். ஆனால், இரண்டு இளைஞர்களின் வாழ்வில் நீங்களும் சில நாட்கள் இணைந்து பயணிப்பது போல் இருக்கும். ஒரு புது மாதிரியான நல்ல பொழுதுபோக்கு அனுபவமாக இப்படம் இருக்கும்” என்றனர்.
இரு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களைச் சொல்லும் இக்கதையில், பரிதாபங்கள் புகழ் கோபி, சுதாகர் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் வி.டி.வி.கணேஷ், சுரேஷ் சக்கரவர்த்தி, விஜி சந்திரசேகர், சுபத்ரா ராபர்ட், வின்சு ரேச்சல் சாம், ரமேஷ் கண்ணா, மு.ராமசாமி, முருகானந்தம், பிரசன்னா, கௌதம், ஹரிதா, யுவராஜ் கணேசன், டிராவிட், பிரகாஷ், ஜீவா சுப்பிரமணியம், கோதண்டம், வெங்கல் ராவ் ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படம் சென்னையைச் சுற்றி 40 நாட்களில் ஒரே கட்டமாக படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மக்களிடமிருந்து திரட்டப்பட்ட பொதுநிதியிலிருந்து இப்படம் உருவாக்கப்படுகிறது. படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.