![vignesh shivan speech at dragon pre release event](http://image.nakkheeran.in/cdn/farfuture/zlrRId0vl7eaC4OnqItRjlXh3gS61jA4-T-00f31bE8/1739534237/sites/default/files/inline-images/149_35.jpg)
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டிராகன்’. ஏ.ஜி.எஸ். தயாரித்திருக்கும் இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற 21ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டு படம் குறித்த தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் விக்னேஷ் சிவன் பேசுகையில், “திரைப்பட விழாவிற்கு வருகை தந்தது போல் இல்லை. பிரதீப், அஷ்வத், அர்ச்சனா மேடம் என இங்கு என்னுடைய நண்பர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். பிரதீப்புடன் இணைந்து 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' திரைப்படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். இந்தப் படத்திற்காக அவரை சந்திக்கும் போது நான் என்னுடைய திரையுலக பயணத்தில் கடினமான சூழலில் இருந்தேன். இருந்தாலும் உடனடியாக என்னை அழைத்து நான் சொன்ன கதையை கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டார். அதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
திரையுலகில் திறமையான நடிகர்கள் இருப்பார்கள். நட்சத்திர நடிகர்கள் இருப்பார்கள். ஆனால் சிலரை மட்டும் தான் நாம் தொடர்ச்சியாக பின்பற்றுவோம். அவர்களுடைய உடல் மொழி, நடிப்பு , திரை உலகம் சார்ந்த பணிகள்.என சில நடிகர்களை தொடர்ந்து கவனித்து வரும் போது தான் நாம் அவர்களுடைய ரசிகர்களாக மாறி விடுவோம். இதைப்போல் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் அவர்கள் நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்து விடுவார்கள். அந்த வகையில் பிரதீப் ரங்கநாதன் தற்போது நடிகராக இருந்து நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கிறார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். அவர் ஒரு கதாபாத்திரத்தை ஏற்று அவருடைய ஸ்டைலில் நடிக்கும் போது அதை ரசிக்கும் கூட்டம் உண்டு. இதன் எண்ணிக்கை அடுத்தடுத்து அவர் நடிப்பில் உருவாகும் படங்கள் வெளியான பிறகு அதிகரிக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்.
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து- ஈகோ இல்லாத எளிமையாய் பழகக்கூடிய இனிய நண்பர். அவருடன் இணைந்து பணியாற்றும் போது எளிதாக இருந்தது. இந்த படத்தின் பாடல்களை எழுதும் போதும் மறக்க முடியாத அனுபவங்கள் உண்டு. பொதுவாக ஒவ்வொரு படத்திற்கும் பாடல்களை எழுதும் போது இதயப்பூர்வமாக எழுதுவேன். சில பாடல்களை உணர்வுப்பூர்வமாக சிந்தித்து எழுதுவேன். நான் முதன்முதலில் பாடல் எழுதும் போது, 'வரிகள் நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுது' என என்னை சிலம்பரசன் தான் ஊக்கப்படுத்தினார்.
போடா போடி படத்தில் ‘அய்யய்யோ மாட்டிக்கிட்டேனே’ என ஒரு பாட்டு எழுதினேன். அந்த பாடலை தவிர்த்து மொத்த படத்தையும் படமாக்கி முடித்துவிட்டோம். ஆனால் அந்த பாடல் ஒரு வருஷம் கடந்தும் எடுக்க முடியாமல் இருந்தது. அந்த சமயத்தில் சிம்பு, என்னிடம், ‘பாட்டு எழுதும் போது பார்த்து எழுது. மாட்டிக்கிட்டேனே என நீ எழுதியதும், இப்போ வரை இந்த பாட்ட எடுக்க முடியாம மாட்டிகிட்டு முழிச்சிகிட்டு இருக்க’ என்று சொன்னார். அதன் பிறகு ஒவ்வொரு பாடல் எழுதும் போதும் பாடல் வரிகள் மீது கவனம் செலுத்தி வருகிறேன். அந்த வகையில் இந்தப் படத்திற்கு பாடல் எழுத வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும், இசையமைப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். டிராகன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் இதில் எந்தவித சந்தேகமும் இல்லை” என்றார். இப்படத்தில் ‘ரைஸ் ஆஃப் டிராகன்’ என்ற பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.