Skip to main content

“வெளியே வரவிடாமல் அமுக்கிவிட்டோம்” - சர்ச்சை படம் குறித்து மிஷ்கின் வேதனை

Published on 14/02/2025 | Edited on 14/02/2025
mysskin speech at dragon pre release event

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டிராகன்’. ஏ.ஜி.எஸ். தயாரித்திருக்கும் இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற 21ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.  

இந்நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டு படம் குறித்த தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் மிஷ்கின் பேசுகையில், “இன்னைக்கு நான் எதுவும் கெட்ட வார்த்தை பேசல. ஒரு கொம்பை அறுத்துட்டாங்க. இன்னும் ஒரு கொம்புதான் இருக்கு. நான் இந்த விழாவுக்கு வரக்கூடாதுன்னு இருந்தேன். ஒரு வருஷம் ஓய்வு காரணமாக ஸ்டேஜில் பேசுவதில் இருந்து லீவு எடுக்கலாம் என நினைத்தேன். ஆனால் மூணு பேருக்காக இந்த மேடை ஏரியிருக்கிறேன். தயாரிப்பாளர் அகோரம் சார், அர்ச்சனா மற்றும் ஐஸ்வர்யா ஆகிய மூவர் மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாகத்தான் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறேன். அர்ச்சனா மற்றும் ஐஸ்வர்யா என இருவரும்.. அவர்கள் தயாரிக்கும் படங்களின் வெற்றிக்காக கடுமையாக உழைத்து வருகிறார்கள். அவர்கள் மேலும் தொடர்ந்து வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.

பிரதீப், புரூஸ் லீ போன்றவர். அவர் இதுவரை ஆக்ஷன் படங்களில் நடிக்கவில்லை. ஒரு வேளை என்னுடைய இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கலாம். நீண்ட நாள் கழித்து திரையுலகில் நான் ஒரு யங் ஸ்டாராக பிரதீப்பை பார்க்கிறேன். அவர் ஒரு பிரைட்டஸ்ட் ஸ்டார். அவர் இதற்காக கடுமையாக உழைக்கிறார், உழைத்து வருகிறார். இந்தப் படத்தில் நான் தான் அவருக்கு வில்லன். ஆனால் நல்ல வில்லன். படப்பிடிப்பு தளத்தில் நானும், அவனும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படும் போது அவனுடைய அர்ப்பணிப்பை கவனித்து பிரமித்தேன். இயக்குநருக்கான நடிகராக இருக்கிறார். நானும் ஒரு இயக்குநர் என்பதால் இதனை என்னால் உறுதியாக கூற முடிகிறது. இதற்காக நான் அவரை மனதார பாராட்டுகிறேன். கேரக்டருக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டே இருக்கிறார். நடிக்கும் போது அவரிடம் ஒரு தனித்துவமான உணர்வு வெளிப்படுகிறது. இது அவரை மேலும் உயரத்திற்கு அழைத்துச் செல்லும். அவருக்கு தொடர்ந்து வெற்றிகள் குவியும்.

இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து படப்பிடிப்பு தளத்தில் கடுமையாக உழைப்பவர். அவர் இயக்கிய இந்த படம் மிக எளிதாக பெரிய வெற்றியை பெறும். ஏனெனில் இந்தக் கால இளைஞர்களுக்கான ஒரு நீதியை அவர்கள் விரும்பும் ஸ்டைலில் சொல்லி இருக்கிறார். இது ஒரு எளிமையான கதை அல்ல. வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான உந்துதலை வழங்கும் படமாக இருக்கிறது. இதற்காக அவருக்கு நான் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். கல்லூரியில் படிக்கும் இளைஞன் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவருடைய வாழ்க்கையில் நடைபெற்ற அனுபவத்தின் மூலமாக விவரித்திருக்கிறார். சொன்ன விதமும் உற்சாகத்துடன் இருக்கும். அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. அவரும் மிக திறமையான படைப்பாளி. இன்னும் கூடுதல் உயரத்திற்கு செல்ல வேண்டும் என வாழ்த்துகிறேன்”  என்றார்.
  
இதைத் தொடர்ந்து பேசிய அவர், “பேட் கேர்ள்-னு ஒரு படம் அது இன்னும் வரவேயில்லை. அதை அமுக்கிட்டோம். அதுக்கு பல காரணங்களையும் சொல்லிட்டோம். அந்த படத்தை எடுத்தவர் ஒரு பெண். ஒரு பெண் எடுத்ததற்காக ஒரு படத்தை வெளியே வரவிடாமல், ட்ரெய்லர் வந்ததினால் மட்டும் அந்த படத்தை கீழ போட்டு அமுக்கியது நியாயமில்லை. இங்க ஒரு நல்ல படத்தை பாராட்டிக்கிட்டு இருக்கோம். ஆனால் ஒரு பெண் அங்கு கலங்கிக்கிட்டு இருக்கிறார். அது என்னை உறுத்துகிறது. சினிமாவில் இருப்பவர்கள் அரசியல்வாதிகளுடன் பேசி எந்தெந்த இடத்தில் கட் செய்ய வேண்டுமே அதை கட் செய்து, சென்சார் செய்து அந்த படத்தை திரைக்கு கொண்டு வர வேண்டும். ஒரு பெண் இயக்குநர் ஆக வேண்டும் என்பது ரொம்ப முக்கியம். 20 வருஷத்தில் ஒரு பெண் இயக்குநர் தான் வருகிறார். படத்தை எதிர்ப்பவர்கள் சொல்வதையும் கேட்க வேண்டும். அவர்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கும். ஆனால் எல்லோரும் கருணையோடு நினைத்து பார்த்து அந்த பெண்ணின் படத்தை வெளிக்கொண்டு வரவேண்டும்” என்றார். 

வெற்றிமாறன் மற்றும் அனுராக் கேஷ்யப் தயாரிப்பில் வர்ஷா பரத் இயக்கியுள்ள படம் பேட் கேர்ள். இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியானது. ஆனால் இயக்குநர் பா.ரஞ்சித் இப்படத்தை பார்த்துள்ளதாக எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்து படக்குழுவினரை பாராட்டினார். இதனிடையே இப்படத்தில் பிராமணப் பெண்களின் வாழ்க்கையைத் தவறாக சித்தரித்துள்ளதாக சில விமர்சனங்களும் எழுந்தது. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்த நிலையில் ரிலீஸ் தேதி இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

சார்ந்த செய்திகள்