![yogi babu](http://image.nakkheeran.in/cdn/farfuture/z13-3YtsFCNNJS4KYvqC4vEb8b9r08n8c8-NaKbUdhc/1603101831/sites/default/files/inline-images/yogi-babu_8.jpg)
சக்தி சிதம்பரம் இயக்கத்தில் வடிவேலு நடிப்பதாக இருந்த படம் 'பேய்மாமா'. ஆனால், சில காரணங்களால் வடிவேலு நடிக்க முடியாமல் போனது. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தில் யோகி பாபு நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
பாக்யா சினிமாஸ் பட நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று நடைபெற்றது. இதில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு 'பேய் மாமா' படத்தின் இசையை வெளியிட்டார். இந்த விழாவில் இயக்குனர் மிஷ்கின், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, மனோபாலா, அம்ரீஷ், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள்.
விழாவில் கலந்துகொண்ட படத்தின் கதாநாயகன் யோகிபாபு பேசியபோது, “ஷக்தி சிதம்பரம் சார் இந்த மேடையில் என்னைக் கதாநாயகனாக நிற்க வைத்துள்ளார். ரொம்பப் பயமாக இருக்கிறது. இந்தப் படம் முதலில் வடிவேலு சாருக்காகத்தான் பண்ணியது என்று ஷக்தி சார் சொன்னார். உடனே "சார், வடிவேலு சார் ஜீனியஸ். அதனால் எனக்கு எப்படி சார் செட்டாகும்" என்று கேட்டேன். பின்பு கதையைக் கூறினார். பிடித்திருந்ததால் நடித்துள்ளேன்.
நான் சம்பள விஷயத்தில் பெரிய கறார் கிடையாது. என் மேலாளரிடம் வேண்டுமானால் கேட்டுக் கொள்ளுங்கள். சமீபத்தில் கூட ஒரு பெண் அசோசியேட் இயக்குனர், "ஒரு கதை வைத்துள்ளேன். நீங்கள் நடித்துக் கொடுக்க வேண்டும், என்னிடம் பெரிய பட்ஜெட் இல்லை. இந்தப் படம் நடந்தால்தான் எனக்குத் திருமணம் நடக்கும்" என்றார்.
![Ad](http://image.nakkheeran.in/cdn/farfuture/24IIj_WWURXA9FUDRz1Ui6oztOGg8IfO7fdyY44u2y8/1598702903/sites/default/files/inline-images/01_19.png)
உடனே சம்பளமே இல்லாமல் நடிக்கிறேன்மா. உனக்கு முதலில் திருமணம் நடக்கட்டும் என்று சொன்னேன். இப்படி நிறைய விஷயங்கள் செய்து கொண்டிருக்கிறேன். இந்தப் படத்தில் ஷக்தி சிதம்பரம் சார் வசனத்தில் நிறைய சுதந்திரம் கொடுத்தார். அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். படத்தின் ட்ரெய்லரில் சொன்னது போலவே, நான் காமெடியன்தான்" என்று தெரிவித்துள்ளார்.