தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக இருக்கும் யோகி பாபு பல லட்சங்கள் ஒரு நாளுக்கு சம்பளமாக வாங்குகிறார் என்று பலரால் சொல்லப்படுகிறது. அது குறித்து வெளிப்படையாக தர்மபிரபு ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியில் பேசியுள்ளார் யோகி பாபு.
முத்துக்குமரன் இயக்கத்தில் யோகி பாபு, கருணாகரன், ஜனினி ஐயர், ரமேஷ் திலக், ராதாரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தர்மபிரபு'. யோகிபாபு பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகும் முதல் படம் இதுவாகும். இப்படத்தை போல பிரதான கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்து வெளியாக இருப்பது சாம் ஆண்டன் இயக்கத்தில் ‘கூர்கா’ படம் ஆகும்.
யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக இருக்கிறார். எந்த பெரிய நட்சத்திரம் நடித்திருந்தாலும் அதில் கண்டிப்பாக யோகிபாபு இருக்கிறாரா என்கிற கேள்வி எழுகிற அளவிற்கு முன்னேறியுள்ளார். ஆனால், ஒருசிலர் தற்போது காமெடி நடிகர்களில் ஜாம்பவான்களாக இருந்தவர்கள் யாருமில்லை அதனால்தான் யோகிபாபு வளர்ந்துவிட்டார் என்று விமர்சித்து வந்தார்கள். அவர்களுக்கு இவ்விழா மேடையில் தன்னுடைய விளக்கத்தை தெரிவித்துள்ளார் யோகிபாபு.
“என்னைப் பிடிக்காதவர்கள் பலரும் பல விஷயங்கள் சொல்வார்கள். அதெல்லாம் யாரும் கேட்க வேண்டாம். என்னிடம் கேட்டால் மட்டுமே பதில் தெரியும். யாரும் இல்லாத இடத்தை பிடித்துவிட்டார் என்று பேசுவதாகக் கேள்விப்பட்டேன். யாருமே இல்லாத மைதானத்தில் போய் விளையாட முடியாது. அனைவருக்கும் இருந்தால் மட்டும்தான் விளையாடவே முடியும். அப்போது விளையாடினால் மட்டுமே திறமையை வெளிப்படுத்த முடியும். 6 அடிக்கிறேன் என்றால், சரியான அணி கிடைத்தது, அடிக்கிறேன். மேட்ச் ஜெயிக்கிறேன். ஆகையால், மைதானத்தில் ஆட்கள் இருக்கிறார்கள். அவர்கள் வரும்போது வரட்டும். நான் என்னுடைய வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்”. இவ்வாறு யோகி பாபு பேசினார்.