குட் நைட், லவ்வர் படத்திற்கு பிறகு லீட் ரோலில் மணிகண்டன் நடித்துள்ள படம் ‘குடும்பஸ்தன்’. சினிமாக்காரன் நிறுவனம் தயாரித்துள்ள இப்பத்தை ராஜேஷ்வர் காளிசாமி இயக்குகிறார். இப்படத்தில் மணிகண்டனைத் தவிர்த்து சான்வே மேகனா, குரு சோமசுந்தரம், இயக்குநர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வைசாக் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் மையக்கரு ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்து இளைஞன் தன் மானத்திற்காகவும், தன் குடும்பத்தின் நலனுக்காகவும் எதிர்கொள்ளும் சவால்களும் சாகசங்களுமே எனத் தெரிவிக்கப்பட்டது. கோவை பின்னணியில் இப்படம் எழுத்ப்பட்டு மடமாக்கப்பட்டுள்ளது. அண்மையில் படத்தின் ட்ரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. இப்படம் வருகிற 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் படக்குழு சார்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி, கதாநாயகி சான்வே மேகனா மற்றும் கதாநாயகன் மணிகண்டன் ஆகியோரை நக்கீரன் ஸ்டூடியோஸ் சார்பில் சந்தித்தோம். அவர்களிடம் படம் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது மணிகண்டனிடம் படத்தில் கொங்கு தமிழ் பேசுவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ரொம்ப கஷ்டம். இரண்டு வார்த்தைகள் சேரும் போது அந்த பாஷையில் ஒரு எழுத்து சைலண்டாகி விடும். என்ன பண்ணிட்டுறிக்கீங்க என்ற வார்த்தையில் ‘ப’ சைலண்டாகி விடும். அதனால் அந்த ஊர் மக்கள் பேசுவதை உள்வாங்கி அதை பிராக்டீஸ் செய்ய வேண்டியிருந்தது. பின்பு அதை டயலாக்கில் போட வேண்டியிருந்தது. டப்பிங்கில் அந்த ஏற்ற இறக்கங்களை சரி செய்வதற்கு படக்குழு உதவினார்கள்” என்றார்.