Skip to main content

"இதனால் எனக்கு மனவேதனையாக இருக்கிறது" - வீடியோவில் யோகி பாபு வேதனை! 

Published on 15/08/2020 | Edited on 15/08/2020
cfwq

 

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வந்துகொண்டிருக்கும் நடிகர் யோகி பாபு. சில மாதங்களுக்கு முன்பு, ஆரம்பகாலகட்டத்தில் தான் சிறு வேடமிட்டு நடித்த படங்களின் விளம்பர போஸ்டர்களில் நான் அப்படத்தின் கதாநாயகனாக நடித்ததுபோல் தற்போது சித்தரித்து வெளியிடுவதாக வருத்தம் தெரிவித்தார். மேலும் அவரின் படங்கள் இதனால் பாதிக்கப்படுவதாகவும், இனி இதுபோன்ற காரியங்களில் ஈடுபடவேண்டாம் என அவர் அறிவித்திருந்த நிலையில், ரைட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள 'தெளலத்' பட போஸ்டர் நேற்று வெளியானது. இதில் யோகி பாபுவை மட்டும் மையப்படுத்தி போஸ்டர் ரிலீஸ் செய்துள்ளது படக்குழு. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த நடிகர் யோகி பாபு, "எனக்கும் ’தெளலத்’ படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன்" என சமீபத்தில் ட்விட்டரில் விளக்கம் அளித்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் இதுகுறித்த வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் யோகி பாபு. அதில்...

 

"சில வருடங்களுக்கு முன்பு சின்ன சின்ன படங்களாக நிறைய நடித்துள்ளேன். அந்தப் படங்கள் எல்லாம் இப்போது வெளியாகிறது. அந்தப் படங்களில் எல்லாம் இரண்டு மூன்று காட்சிகள் தான் நடித்திருப்பேன். இப்போது என்னுடைய புகைப்படத்தைத் தனியாக போஸ்டரில் போட்டு விளம்பரப்படுத்துகிறார்கள். தயவு செய்து இந்த மாதிரி செய்யாதீர்கள். எனக்கென்று சில ரசிகர்கள் இருப்பார்கள். அவர்கள் எல்லாம் இந்த மாதிரியான போஸ்டர்களால் ஏமாந்து போய்விடுகிறார்கள். இடைப்பட்ட காலங்களில் என்னுடைய புகைப்படம் மட்டும் போட்டு சிலர் ஏமாற்றியுள்ளார்கள். சிலர் எனக்கு தொலைபேசி வாயிலாக, 'உங்கள் புகைப்படத்தைப் பார்த்து தான் வாங்கியிருக்கிறோம் என்று சொன்னார்கள்'. சிலர், 'அண்ணா, முழுமையாக இருப்பீர்கள் என நம்பி திரையரங்கிற்குச் சென்றோம். ஆனால், இரண்டு மூன்று காட்சிகளில்தான் வருகிறீர்கள். என்ன அண்ணா இது' என்று சில ரசிகர்கள் தொலைபேசி வாயிலாகக் கேட்டார்கள்.

 

இதனால் எனக்கு மனவேதனையாக இருக்கிறது. சமீபத்தில் 'தெளலத்' என்ற படத்துக்குக் கூட அப்படியொரு போஸ்டர் வெளியிட்டுள்ளனர். அதில் சிவன் தான் ஹீரோ, நான் அல்ல. தயவு செய்து இந்த மாதிரி செய்யாதீர்கள். என்னை முன்னிலைப்படுத்தி படங்கள் எடுக்கும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் எல்லாம் என்னை திட்டத் தொடங்கிவிட்டார்கள். விநியோகஸ்தர்கள், ரசிகர்களை எல்லாம் ஏமாற்றுவது போல் இருக்கிறது. தயவு செய்து அந்த தவறை மட்டும் செய்யாதீர்கள். நான் முழுமையாக நடித்திருந்தால் போடலாம் தவறில்லை. ஆனால் இரண்டு மூன்று காட்சிகளுக்கு எல்லாம் போடுவது தவறு. அது எனக்குத் தான் பாதிப்பாக இருக்கிறது. இரண்டு மூன்று சீன் நடித்திருக்கிறேன் என்றால் அந்தப் படக்குழுவினரோடு இருப்பது போல் புகைப்படம் போடுங்கள், இல்லையென்றால் விட்டுவிடுங்கள். தயவு செய்து தனி புகைப்படம் போட்டு போஸ்டர்கள் வெளியிடாதீர்கள்" என கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்