![xvideos](http://image.nakkheeran.in/cdn/farfuture/iW3eUwKikRuqutieSTURTlkHwtbH_hOFk9T9JAt41-A/1533347624/sites/default/files/inline-images/Dc6OgPdWAAA7vze_0.jpg)
இயக்குநர் ஹரியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சஜோ சுந்தர் 'x வீடியோஸ்' என்கிற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். கலர் ஷாடோஸ் எண்டெர்டெய்ண்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளஇப்படத்தில் புது முகங்கள் அஜய்ராஜ், பிரபுஜித், ஆஹிருதி சிங், ரியாமிக்கா, ஷான் ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ், இந்தி என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் நாளை ஜூன் 1ஆம் தேதி படம் வெளியாவதை முன்னிட்டு இப்படம் பற்றிய தகவல்களையும், படம் குறித்து எழுந்துள்ள சந்தேகங்களுக்கான பதில்களையும் இயக்குனர் சஜோ சுந்தர் நம்மிடம் பகிர்ந்துகொண்டபோது....
"இன்று இணையதளத்தில் நிர்வாணப்படங்களை வெளியிட்டு சமூகத்தை சீரழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது 'x வீடியோஸ்' என்கிற இணையதளம். இந்த இணையதளம் மூலம் மக்களின் வாழ்க்கையில் எப்படி இவர்கள் விளையாடுகிறார்கள் என்பதைத்தான் இந்தப்படத்தில் சொல்லியிருக்கிறோம். அந்தவகையில் இது முழுக்க முழுக்க 'x வீடியோஸ்' என்கிற இணையத்தளத்திற்கு எதிரான படம். ரசிகர்களை ஈர்க்கும் விதமான தலைப்பாக இருக்கட்டும் என இந்த டைட்டிலை வைத்திருந்தாலும் கூட, 'x' என்றால் தவறு என்கிற கருத்தைத்தான் இதில் சொல்லியிருக்கிறோம். இது முழுக்க பெண்களுக்கான விழிப்புணர்வு படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்படத்தில் அரை நிர்வாண காடசிகள் இடம்பெற்றுள்ளன என்றாலும், அவை கூட கதையின் தேவை கருதி தானே தவிர, எதுவும் வலிந்து திணிக்கப்படவில்லை.
இயக்குனராக எனக்கு இது முதல் படம். இப்படத்தின் மூலம் வருமானம் சம்பாதிக்கவேண்டும் என்பது என் நோக்கம் கிடையாது. நான் செலவழித்த பணம் திரும்ப வந்தாலே அதுவே எனக்கு போதுமானது. இப்படத்தை பார்க்கும் மக்கள் இதன்பின்னராவது கொஞ்சம் உஷாராகி விடுவார்கள் என்றால் அதுதான் எனக்கு லாபம். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்துடன் இதனை ஒப்பிட வேண்டாம். அந்தப்படத்தை பார்ப்பதால் சும்மா சிரித்துவிட்டு போவதை தவிர வேறு என்ன லாபம் இருக்கிறது. ஆனால் இந்த 'x வீடியோஸ்' படத்தை பார்க்கிற ரசிகர்களுக்கு இதில் சொல்லப்பட்டுள்ள ஒவ்வொரு தகவலும் லாபம். இது ஆபாசப்படம் அல்ல. ஆபாசத்தை பற்றிய படம். அசிங்கங்களை பேசுவது அசிங்கம் என் நாம் நினைத்துக்கொள்வதால்தான் நாட்டில் பல அசிங்கங்கள் நடக்கின்றன என்பதை குறிப்பிடுகிற படம் இது" என்றார்.