![writer sura](http://image.nakkheeran.in/cdn/farfuture/t3c0jJXVKOq-Sa22x_BBWQ-3A-nG6QOmWM1-NWM3CGQ/1639741263/sites/default/files/inline-images/68_21.jpg)
எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், கிகுஜிரோ திரைப்படம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
"வழக்கமாக தமிழ்த் திரைப்படங்கள், தமிழ்த் திரைப்பட உலகம் குறித்து உங்களுடன் பகிர்ந்துகொள்வேன். இந்த முறை சிறு மாறுதலாக இருக்கட்டும் என்று டாகேஷி கிட்டானோ இயக்கிய கிகுஜிரோ என்ற ஜப்பானிய திரைப்படம் குறித்து கூறுகிறேன். அவர்தான் இந்தப் படத்தின் கதாநாயகன். குடும்ப கதைகளை அருமையாக இயக்கக்கூடியவர் டாகேஷி கிட்டானோ. படம் முடிந்து வெளியே வந்த பிறகும் அவர் உருவாக்கிய கதாபாத்திரங்கள் நம் மனதிற்குள் வாழ்ந்து கொண்டே இருக்கும். பல உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு உலகம் முழுவதும் பலராலும் கொண்டாடப்பட்ட திரைப்படம் கிகுஜிரோ.
மசாவோ என்ற ஒன்பது வயதுடைய பள்ளி மாணவன், ஜப்பான் தலைநகர் டோக்கியோ நகரின் புறநகர் பகுதியில் பாட்டியின் அரவணைப்பில் வாழ்ந்து கொண்டிருப்பான். அங்கிருந்து பல நூறு கிலோமீட்டர் தாண்டி ஒரு நிறுவனத்தில் அவனுடைய அம்மா வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார். அங்கிருந்து தன் மகள் அனுப்பும் பணத்தைக் கொண்டு மசாவோ பாட்டி அவனை வளர்த்துவந்தார். பள்ளியில் கோடை விடுமுறை விடப்படுகிறது. பாட்டி காலையில் வேலைக்குச் சென்று மாலையில்தான் வீடு திரும்புவார் என்பதால் பகல் முழுவதும் இவன் தனியாக இருக்க நேரிடுகிறது. அவனுடன் படிக்கும் பிற குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் இணைந்து கோடை விடுமுறை சுற்றுலா சென்றுவிட்டனர். பள்ளி மைதானத்திற்கு விளையாட செல்லலாம் என்று நினைத்து இவன் சென்றால் அங்கு யாருமே இல்லை. அங்கிருந்த பி.டி.மாஸ்டர் எல்லோரும் அவர்களுடைய சொந்தக்காரர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டனர். பள்ளி திறக்கும்போதுதான் திரும்பி வருவார்கள். நீ எங்கும் போகலயா? உனக்கு சொந்தக்காரர்கள் இல்லையா என்பார்.
வீட்டிற்கு திரும்பிவருவான். இவனிடம் அவன் அம்மா போட்டோ இருக்கும். இவன் அம்மாவை இதுவரை நேரில் பார்த்ததேயில்லை. அவனுடைய பாட்டி இதுதான் உன் அம்மா என்று ஒருமுறை ஒரு போட்டோவை கொடுத்தார். அந்த போட்டோவை எடுத்து பார்த்தபோது அதன் பின்புறம் ஒரு முகவரி இருந்தது. அம்மாவை சென்று பார்த்தால் என்ன என்று அவனுக்கு யோசனை தோன்றுகிறது. அவனுடைய பாட்டிக்கு தெரிந்த கிகுஜிரோ என்பவரோடு இணைந்து பாட்டிக்கு தெரியாமல் அம்மாவை சந்திக்க செல்வான். அவர்களுடைய பயணமே சுவாரஸ்யமாக இருக்கும்.
அந்த முகவரிக்கு அருகே வந்ததும் மசாவோவை இங்கேயே நில்... நான் வேட்டை கண்டுபிடித்துவிட்டு வருகிறேன் எனக் கூறிவிட்டு கிகுஜிரோ மட்டும் செல்வான். அவனுடைய அம்மா இங்கே வேறு ஒரு ஆணுடன் இணைந்து வாழ்ந்துகொண்டு இருப்பாள். அவளுக்கு இங்கும் ஒரு குழந்தை இருக்கும். இதைக் கண்டு அதிர்ச்சியான கிகுஜிரோ, மசாவோவிடம் வந்து உங்க அம்மா இங்கு இல்லை. வேறு யாரோ இருக்கிறார்கள். அவர் முன்னரே இந்த வீட்டை காலி செய்துவிட்டாராம் என்பான். தன்னுடைய அம்மாவை காணவேண்டும் என்று ஆவலுடன் வந்த அந்தச் சிறுவனுக்கு ஏமாற்றம் ஆகிவிடும். பின், இருவரும் அவர்கள் ஊருக்கு திரும்பி வந்துவிடுவார்கள்.
இதே மாதிரியான கதையில் நந்தலாலா படத்தை மிஷ்கின் இயக்கினார். அந்தப் படம் இங்கு பேசப்படவேயில்லை. பத்திரிகைகள்கூட பெரிய அளவில் நந்தலாலா படத்தை பாராட்டவில்லை. அருமையான, ஆழமான, உணர்ச்சிமயமான கதைக்களம் கிகுஜிரோ. உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட ஒரு கதை நம் தமிழ்நாட்டில் கண்டுகொள்ளப்படவேயில்லை".