
வில்லன் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துப் பிரபலமானவர் மீசை ராஜேந்திரன். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இதனிடையே சில தினங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சிக்காகச் சொந்த ஊரான நெல்லைக்குச் சென்றபோது, அங்கு முக்கூடல் பகுதியில் உள்ள சிலருக்கும் இவருக்கும் சில பிரச்சனைகள் நடந்தது. இது தொடர்பாக போலீசிடம் புகார் அளித்துவிட்டு தன் குடும்பத்துடன் காரில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, அவர் காரை சிலர் வழிமறித்து காரின் பின்புற கண்ணாடியை கல்வீசி உடைத்தனர். இது தொடர்பாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் மீசை ராஜேந்திரன் இந்த சம்பவம் குறித்து சிலர் தன் மீது வதந்தி பரப்பி வருகிறார்கள் என குறிப்பிட்டு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், " நான் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்தேன் என என் மீது தவறான வதந்தியை சிலர் பரப்பி வருகிறார்கள். இதற்கு மூலகாரணம், எங்களுடைய ஊர் முக்கூடலில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலின் பெயரை பயன்படுத்தி சிலர் பணம் வசூலித்து மோசடி செய்துள்ளனர். இதை நான் தட்டி கேட்டேன். மேலும் பத்து வருடமாக கோர்ட் மற்றும் வழக்கு தொடர்ந்து பல தீர்ப்புகளை வாங்கி வைத்துள்ளேன்.
கடைசி செவ்வாய் கிழமை அன்று என் குடும்பத்தோடு அங்கு சாமி தரிசனம் செய்ய போயிருந்தேன். அப்போது அந்த கோயிலில் வெள்ளை அடிக்கும் பணிகள் நடந்துகொண்டிருந்தது. அறநிலையத்துறையிடம் முறையாக அனுமதி வாங்கிதான் பணிகள் நடக்கிறதா என அர்ச்சகரிடம் கேட்டபோது அவர் இல்லை என கூறினார். இதனிடையே நாங்கள் பேசி கொண்டிருக்கும்போது பணமோசடி செய்தவர்கள் என்னிடம் ' நீ ஏன் சாமி கும்பிட வந்த, உன்னை அடிச்சுருவேன், வெட்டிருவேன், குத்திடுவேன்' என என்னை மிரட்டினர். அப்போது என் மகள் என் கையை பிடித்து இழுத்து காருக்கு அழைத்து சென்றுவிட்டார். இது தொடர்பாக போலீசிடம் புகார் கொடுத் திரும்பிய போது என் காரை அடித்து நொறுக்கிவிட்டனர். அதன் பிறகு எஸ்.பி-யிடம் புகார் கொடுத்தேன், அந்த கும்பல் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கிறார்கள். இந்த சம்பவத்தை திசை திருப்பவே முக்கூடலை சார்ந்த பண மோசடி செய்பவர்கள் சிலர் இந்த வதந்தியை பரப்பி வருகிறார்கள். இது தான் உண்மை " என மீசை ராஜேந்திரன் கூறியுள்ளார்.