
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த மாதம் 21ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான படம் ‘டிராகன்’. ஏ.ஜி.எஸ். தயாரித்திருந்த இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கே.எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் உலகம் முழுவதும் 10 நாட்களில் ரூ.100 கோடியை கடந்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது. படக்குழுவினரை ரஜினி சமீபத்தில் நேரில் அழைத்து பாராட்டியிருந்தார்.
இந்த நிலையில் இப்படக்குழுவினரை விஜய் அழைத்து பாராட்டியுள்ளார். இது குறித்து பிரதீப் ரங்கநாதன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, “கலக்குறீங்க ப்ரோ - இந்த வார்த்தையை விஜய் சாரிடம் இருந்து கேட்கும் போது நான் எப்படி ஃபீல் பண்ணியிருப்பேன். நான் எப்படி உணர்ந்திருப்பேன் என்பதை நீங்களும் புரிந்து கொள்வீர்கள் என்று எனக்குத் தெரியும். உங்கள் நேரத்திற்கும் வார்த்தைகளுக்கும் நன்றி சார். சச்சின் ரீ ரிலீஸுக்காக காத்திருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் பக்கத்தில், “நான் விஜய் சாரை பார்க்க மற்றும் அவரை வைத்து படமெடுக்க எந்தளவிற்கு கடுமையாக உழைத்து வருகிறேன் என்று என்னுடன் பழகும் மக்களுக்கு தெரியும். படமெடுப்பது சாத்தியமா எனத் தெரியவில்லை. ஆனால் அவரை பார்த்துவிட்டேன். அவருக்கு நேர் எதிராக நான் உட்கார்ந்தேன். பொதுவாக நான் அதிகம் பேசுவேன். அதனால் என் டீம், நான் என்ன பேசப்போகிறேன் என என்னை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவரும் என்னை உற்று பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எனக்கு கண்களின் தண்ணீர் வந்துவிட்டது. என்னுடைய டீம் சர்ப்ரைஸ் ஆகிவிட்டனர். ஏன் அந்த மனிதர் மீது இவ்வளவு பெரிய அன்பு? அதெல்லாம் உங்களுக்கு சொன்னா புரியாது.
என் நண்பன் பிரதீப்புக்கு படம் பண்ண வந்தேன். அதை ‘கிரேட் ரைட்டிங் ப்ரோ’ என என் ஆளுமை சொன்ன வார்த்தையில் இருந்து என் வாழ்க்கை முழுமை பெற்றது. இது போதும்” எனக் குறிப்பிட்டு விஜய்யின் மேனேஜர் ஜகதீஷ் மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.