
மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் `எல்2; எம்புரான்' என்ற தலைப்பில் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது. ஆண்டனி பெரும்பாவூர் இப்படத்தை தயாரித்திருக்க முரளி கோபி கதை எழுதியுள்ளார்.
இப்படத்தில் மஞ்சு வாரியர், பிரித்விராஜ், டோவினோ தாமஸ், ஷிவதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் படத்தின் டீசர் வெளியாகி பலரது கவனத்தை பெற்றது. இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வருகிற மார்ச் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஐமேக்ஸ் ஃபார்மெட்டிலும் இப்படம் வெளியாகிறது. இதன் மூலம் முதல் முறையாக ஒரு மலையாள படம் ஐமேக்ஸ் ஃபார்மெட்டில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருப்பதால் அதனை கூட்டும் வகையில் முதல் பாகத்தை படக்குழு கடந்த 20ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்தது.
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ரஜினியும் டிரெய்லரை பாராட்டி பட வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள் கூறியிருந்தார். இப்படத்தின் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திரையரங்குகளில் ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு டிக்கெட்டை புக் செய்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியானது. ஆன்லைனிலும் வேகமாக டிக்கெட் புக்காகி வருகிறது. இதில் பிரபல டிக்கெட் ஆன்லைன் புக்கிங் செயலியில் ஒரு மணி நேரத்தில் 96.14k டிக்கெட்டுகள் விற்று இந்தியாவில் ஒரு மணி நேரத்தில் அதிக டிக்கெட் விற்ற படம் என்ற சாதனையை இப்படம் செய்துள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மோகன்லால் படம் குறித்து நிறைய விஷயங்களை பேசினார். அவர் பேசி முடித்தவுடன் தொகுப்பாளர் 40 வருஷத்தில் 400 படம் எப்படி நடித்தீர்கள் என கேள்வி கேட்டார். அதற்கு 40 இல்லை 47 என திருத்திய மோகன்லால், “அந்த 7 வருஷம் தான் முக்கியமான விஷயம். எல்லாம் கடவுளுடைய ஆசீர்வாதம்தான். நல்ல இயக்குநர்கள், நடிகர்கள், ஆடியன்ஸுகள் எனக்கு கிடைத்தார்கள்” எனப் பதிலளித்தார்.