வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம், அவரது கடைசிப் படமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது முழு நேர அரசியலுக்கு முன் கடைசி படமாகப் பார்க்கப்படும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. கே.வி.என். புரொடைக்ஷன் தயாரித்து வரும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் , நரேன், கௌதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தற்காலிகமாக ‘தளபதி 69’ என அழைக்கப்படும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் விஜய்யின் 69வது படத்தை தெலுங்கு இயக்குநர் அனில் ரவிபுடி இயக்க விஜய் அழைத்ததாக வி.டி.வி. கணேஷ் தெரிவித்துள்ளார். அனில் ரவிபுடி இயக்கத்தில் வெங்கடேஷ், மீனாட்சி சவுத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'சங்கராந்தி வஸ்துன்னாம்' படத்தில் வி.டி.வி. கணேஷும் நடித்துள்ளார். இப்படம் பொங்கலை முன்னிட்டு வருகிற 14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட வி.டி.வி. கணேஷ், “கடந்த 6 மாதத்திற்கு முன்பு விஜய்யை சந்தித்தேன். அனில் ரவுபுடி இயக்கிய பகவந்த் கேசரி படத்தை 5 முறை பார்த்ததாக சொன்னார். உடனே அந்தப் படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என அனில் ரவிபுடியை அழைத்தார். ஆனால் அனில் ரவிபுடி ரீமேக் செய்ய மாட்டேன் என்றார். விஜய்யின் கடைசிப் படத்தை இயக்க பீக்கில் இருக்கும் 4 - 5 இயக்குநர்கள் வெயிட்டிங்கில் இருந்தனர்...” என பேசிக்கொண்டிருக்கும் போது குறுக்கிட்ட அனில் ரவிபுடி, “விஜய் 69 படக்குழுவினர் எந்த கதையை படமாக்கி வருகிறோம் என இதுவரை அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை. அதனால் அதைப் பற்றி இப்போது பேசுவது சரியாக இருக்காது. விஜய் சார் மேல் எனக்கு பெரிய மரியாதை இருக்கிறது. அவருடன் படம் பண்ண நேரம் சரியாக அமையவில்லை” என்றார்.