Skip to main content

'எட்டு வருடம் கழித்து இரண்டு தல, பின்னணியில் மும்பை, திருவிழா....'-விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் சொல்லும் கதை    

Published on 23/08/2018 | Edited on 23/08/2018
visvasam

 

தல ரசிகர்கள் விடிய விடிய இன்று காலை கண் விழித்ததற்கு டபுள் ட்ரீட்டாக கிடைத்துள்ளது. ஆமாம், விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் இரண்டு தல இருக்கிறார்கள் ஒரு தல 'சால்ட் அண்ட் பெப்பர்' ஸ்டைலிலும், மற்றொரு தல 'பெப்பர்' ஸ்டைலில் இளமையாக இருக்கிறார். அதேபோல, சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் இருக்கும் தல, வெள்ளை சட்டை அணிந்திருப்பது  வீரம் அஜித்தை நமக்கு ஞாபகப்படுத்துகிறது. மற்றொரு அஜித் சிவப்பு நிற சட்டையில் பழைய ரெட் பட அஜித்தை ஞாபகப்படுத்துகிறார். ஆனால், படத்தில் அஜித் இரண்டு வேடமா, அல்லது இரண்டு லுக் அவருக்கு இருக்கிறதா என்பது நமக்கு தெரியவில்லை. 

 

1999ஆம் ஆண்டு வெளியான எஸ்.ஜெ. சூர்யா இயக்கிய வாலி படத்தில் முதன் முதலில் இரண்டு வேடங்களில் நடித்தார் தல அஜித். அதனை தொடர்ந்து சிட்டிசன், வில்லன், அட்டகாசம், வரலாறு, பில்லா மற்றும் அசல் ஆகிய படத்தில் நடித்திருக்கிறார். இதில் 2010 ஆம் ஆண்டு வெளியான அசலில்தான் தல கடைசியாக இருவேடங்களில் நடித்தது. தற்போது விஸ்வாசத்தில் தல இருவேடங்களில் நடிப்பது  உறுதி என்றால், எட்டு வருடங்கள் கழித்து தல இருவேடங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, தல அஜித் இரு வேடங்களில் நடித்தால் அது மாஸ் ஹிட் என்பதும் திரைப்பட வழக்கங்களில் ஒன்றாகும்.    

      

இப்படத்தை இயக்கம் சிவா, ஒருமுறை நேர்காணலில், "வயதான கதாபாத்திரத்திலிருக்கும் தல ஊர் தலைவர் போன்ற கதாபாத்திரம்" என்று முன்பே சொல்லியிருந்தார். அதற்கு ஏற்றாற்போல வெள்ளை சட்டையில், கருப்பு ப்ரேம் கூலிங் க்ளாஸ் அணிந்து, கையில் சாதாரண வாட்ச் ஒன்றை அணிந்து க்ளாஸாக முறுக்கு மீசையுடன் காட்சி அளிக்கிறார். வயதான கதாபாத்திரத்தில் இருக்கும் அஜித் பின்னணியில் மும்பை நகரின் கடலோர சாலை போன்றே இருக்கிறது. 

 

சிவப்பு நிற சட்டையில் இருக்கும் மற்றொரு தல, கோல்டன் ப்ரேம் கண்ணாடி, கருமையான தாடி,முறுக்கு மீசையை முறுக்கிவிட்டபடி இருக்கிறார். அவர் பின்னணியில் தென்னை மரம், வண்ணக்கொடிகள் கட்டப்பட்டு கிராமத்து திருவிழா போன்று காட்சியளிக்கிறது. ட்விட்டரில் பர்ஸ்ட்லுக் வெளியானவுடன் பல பிரபலங்கள், ரசிகர்கள் இதனை ட்வீட் செய்துவந்தனர். விஸ்வாசம் படத்திலேயே நடிக்கும் ரோபோ சங்கர் இந்த போஸ்டரை ட்வீட் செய்து, "நான் அதில் இளமையாக இருக்கும் தலையுடன்தான் நடிக்கிறேன். இந்த தல பக்கா மாஸ்" என்று  பதிவிட்டிருந்தார். 

 

தல அஜித் நான்காவது முறையாக இயக்குனர் சிவாவுடன் தொடர்ந்து நடிக்கிறார். அதுவும் 'வி' என்று தொடங்கி 'ம்' என்று முடியும் செண்டிமெண்ட், வியாழக்கிழமை செண்டிமெண்ட் என்று முதல் படத்தில் ஆரம்பித்து நான்காவது படமான விஸ்வாசம் வரை அது தொடர்ந்து வருகிறது. மேலும், இந்த படத்தில் நயன்தாராவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விவேக், ரோபோ சங்கர், யோகி பாபு, அனிகா என்று பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். முதலில் இந்த போஸ்டர் விநாயகர் சதுர்த்தி அன்றுதான் வெளியாக இருந்தது. பின்னர், 23ஆம் தேதி மாற்றப்பட்டது. அதேபோல 23ஆம் தேதி காலை 12மணிக்கு வெளியாகும் என்று எல்லோரும் எதிர்பார்க்கையில், காலை 3:40 மணிக்கு வெளியாவதாக படக்குழு அறிவித்து, தற்போது வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.      

                                 

சார்ந்த செய்திகள்