விமல் - வரலட்சுமி நடித்து, இன்று வெளியாகவிருந்த படம் 'கன்னிராசி'. இப்படத்தை கிங் மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகாவிற்கான விநியோகஸ்த உரிமையை, மீடியா டைம்ஸ் என்ற நிறுவனம் 17 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
இந்தநிலையில், மீடியா டைம்ஸ் நிறுவனம், சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தது. அதில், கன்னிராசி படத்தின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரியின் விநியோக உரிமையை, தாங்கள் 17 லட்ச ரூபாய்க்கு வங்கியுள்ளதாகவும், விநியோக உரிமையை வாங்கும்போது போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, 2018 -ஆம் ஆண்டுக்குள் படத்தை தயாரிப்பாளர் வெளியிடவில்லை எனவும் கூறியுள்ள அந்த நிறுவனம், தற்போது கன்னிராசி படத்தின் விநியோக உரிமையை, தயாரிப்பாளர் வேறு ஒரு நிறுவனத்திற்கு விற்றுவிட்டதாகவும், எனவே தங்களிடம் பெறப்பட்ட 17 லட்ச ரூபாயை வட்டியோடு சேர்த்து 21 லட்சத்து 8 ஆயிரமாக வழங்கவேண்டும், அதுவரை படத்தை வெளியிடத் தடை விதிக்கவேண்டுமெனவும் கோரியிருந்தது.
அண்மையில் இந்தவழக்கை விசாரித்த நீதிமன்றம், கன்னிராசி படத்திற்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும், இதுதொடர்பாக பதிலளிக்க, கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவன உரிமையாளர் ஷாமின் இப்ராஹிம், வரும் டிசம்பர் 7 -ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.
தற்போது மீடியா டைம்ஸ் நிறுவனத்திற்கும், கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவனர் ஷமீன் இப்ராஹிமுக்கும் இடையே சுமூக முடிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கும் முடித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கன்னிராசி திரைப்படத்தை டிசம்பர் 4 -ஆம் தேதி (நாளை) தியேட்டரில் வெளியிட இருப்பதாகத் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.