![Viji Chandrasekhar Interview](http://image.nakkheeran.in/cdn/farfuture/u2NK53ytoJnYvZHZUL1B3qRvNfXkFa02VIGtdS8MQQ8/1680154206/sites/default/files/inline-images/Viji.jpg)
சினிமா முதல் சீரியல் வரை தன்னுடைய சிறந்த நடிப்பால் மக்களின் மனங்களை வென்று வரும் நடிகை விஜி சந்திரசேகர் தன்னுடைய பல்வேறு அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
வீடு என்றால் பிரம்மாண்டமாகத் தான் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. எளிமையான வீடாக இருந்தாலும் அதை நாம் அழகாகப் பார்த்துக்கொண்டால் போதும். எங்கள் வீட்டின் முகப்பில் மூன்று மதங்களின் குறியீடுகளும் இருக்கும். அனைத்துக்கும் ஒரு வேல்யூ இருக்கிறது. அனைத்து கடவுள்களும் இணைந்து எங்களைக் காப்பாற்றுகின்றனர். சுனாமி காலத்தின்போது எங்கள் வீட்டுக்குள் தண்ணீர் வந்ததை மறக்கவே முடியாது. உலகம் அழியப் போகிறதோ என்கிற எண்ணம் கூட அப்போது எனக்கு ஏற்பட்டது.
அன்று காலை வீட்டுக்குள் ஒரு அதிர்வு ஏற்படுவதை உணர முடிந்தது. சுனாமி என்கிற வார்த்தை தெரியாவிட்டாலும் இது கடலுக்கு அடியில் ஏற்படுகிற பூகம்பம் என்பதை என்னுடைய கணவர் கூறினார். அன்று எங்கள் வீட்டு செக்யூரிட்டியும் ஊருக்குச் சென்றுவிட்டார். அதனால் எப்போதும் பீச்சுக்கு செல்லும் குழந்தைகள் அன்று செல்லவில்லை என்பது மகிழ்ச்சி. அன்று ஏதோ பெரிதாக நடக்கப்போகிறது என்று என்னுடைய உள்ளுணர்வு சொன்னது. விரைவாக எங்காவது வெளியே சென்றுவிட வேண்டும் என்று தோன்றியது.
டபடபவென்று ஒரு சத்தம் கேட்டது. கிட்டத்தட்ட ஐந்து அடி வரை தண்ணீர் உள்ளே வர ஆரம்பித்தது. மாடியில் இருந்து பார்க்கும்போது அதிர்ச்சியாக இருந்தது. அப்படி ஒரு அலையை அதற்கு முன்பு நான் பார்த்ததே இல்லை. அருகில் இருந்த மசூதியைப் பார்த்து "அல்லா, இந்த உலகத்தைக் காப்பாற்று" என்று வேண்டிக்கொண்டோம். தண்ணீரில் புத்தகங்கள், சேர் எல்லாம் அடித்துச் சென்றது. எங்கள் வீட்டில் இருந்த பீச் மணலை அகற்றுவதற்கு நான்கு நாட்கள் ஆனது.
அருகில் இருக்கும் சின்ன கிராமத்திற்கு அந்த நேரத்தில் நடிகர் சூர்யா அடிப்படைத் தேவையான பொருட்கள் அனைத்தையும் வழங்கினார். நாங்களும் எங்களால் முடிந்த உதவிகளைச் செய்தோம். என்னுடைய கணவரின் சிறந்த குணங்கள் எனக்கு எப்போதும் இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கிறது. கடன் வாங்குவது அவருக்குப் பிடிக்காது. சேமிப்பை எப்போதும் ஊக்கப்படுத்துவார். சுனாமி நினைவுகள் இன்றும் மனதை விட்டு அகலாமல் இருக்கின்றன.