பிரபல பின்னணிப் பாடகர் விஜய் யேசுதாஸ் சென்ற கார் விபத்துக்குள்ளானது. நல்ல வேளையாகக் காரில் சென்ற யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பின்னணிப் பாடகர் யேசுதாஸின் மகனான விஜய் யேசுதாஸ். மலையாளம், தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார். தனுஷ் நடித்த ’மாரி’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
நேற்று இரவு 11.30 மணியளவில் திருவனந்தபுரத்திலிருந்து தனது காரில், விஜய் யேசுதாஸ் திரும்பி வந்து கொண்டிருந்தார். உடன் அவரது நண்பர் இருந்தார். அதே நேரத்தில் திருக்காட்டுச்சேரியிலிருந்து வந்து கொண்டிருந்த இன்னொரு கார் திருவாரூர் சந்திப்பில் தேசிய நெடுஞ்சாலையில் சட்டென நுழைய இருவரது கார்களும் மோதின.
இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லையென்றாலும் இரண்டு கார்களின் முன் பக்கங்களும் கடுமையான சேதத்துக்கு உள்ளாயின. விபத்து பற்றி கேள்விப்பட்டவுடன் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். விபத்தில் சேதமான இரண்டு கார்களும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. விஜய்யும் அவரது நண்பரும் இன்னொரு காரில் கொச்சிக்குக் கிளம்பினர்.
முன்னதாக விஜய் யேசுதாஸ், மலையாளத்தில் இனி நான் பாடப்போவதில்லை என்று ஒரு பேட்டியில் சொல்லியது சர்ச்சையானது. அதன்பின்னர், நான் அப்படிச் சொல்லவில்லை. நான் கூறியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்று விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.