![vijay fans meet](http://image.nakkheeran.in/cdn/farfuture/A4BEQSt383gW6WhY9IeHdqAN67fBiR4pECmAwDu4piM/1689067830/sites/default/files/inline-images/113_31.jpg)
விஜய், நடிப்பதைத் தாண்டி தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். மேலும் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், கடந்த 17 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் விஜய்யின் பேச்சு அரசியல் களத்திலும் சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாக இருந்தது. மேலும் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாகவும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து அண்மையில் தனது 68வது படத்தை முடித்தவுடன் சினிமாவில் இருந்து 3 வருடம் விலகி, வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைக் குறி வைத்துச் செயல்படத் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் பனையூரில் 234 தொகுதி பொறுப்பாளர்களுடன், தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் விஜய். அங்கு, கிட்டத்தட்ட 300 பேருக்கு மேலானோர் வருகை தந்துள்ளனர். முதல் நாளாக ஓசூர், கிருஷ்ணகிரி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மயிலாடுதுறை, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருப்பூர், சென்னை, நாகை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கின்ற தொகுதி பொறுப்பாளர்களைச் சந்திக்கிறார்.
கடந்த 17 ஆம் தேதி நடந்த நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்த மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து அவர்களைக் கெளரவிக்கும் வகையில் அவர்களைப் பாராட்டி அவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொள்ளவுள்ளார். அதன் பொருட்டே இந்த ஆலோசனைக் கூட்டம் நடப்பதாகச் சொல்லப்படுகிறது. இன்று, நாளை, நாளை மறுநாள் என மொத்தம் 3 நாட்கள் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறதாம். ஒவ்வொரு நாளும் 10க்கும் மேற்பட்ட மாவட்ட பொறுப்பாளர்களுடன் அப்பகுதியின் தொகுதி பொறுப்பாளர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.